IND vs RSA : தினேஷ் கார்த்திக்கு மீண்டும் நிகழ்ந்த அவமானம் ! கேப்டன் பண்ட்டை சரமாரியாக விளாசும் முன்னாள் வீரர் – நடந்தது இதோ

DInesh Karthik
Advertisement

இந்தியாவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் பங்கேற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஜூன் 12-ஆம் தேதியான நேற்று நடைபெற்ற 2-வது போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்கா அபார வெற்றி பெற்றது. ஒடிசா மாநிலம் கட்டாக் நகரில் நடைபெற்ற அப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பந்து வீசுகிறோம் என தெரிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய இந்தியா 20 ஓவர்களில் சுமாராக பேட்டிங் செய்து 148/6 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக இஷான் கிசான் ஓப்பனிங்கில் அதிரடியாக 34 (21) ரன்கள் எடுக்க மிடில் ஓவர்களில் ஸ்ரேயாஸ் அய்யர் 40 (35) ரன்களும் தினேஷ் கார்த்திக் 30* (21) ரன்களும் எடுத்தனர்.

Ishan Kishan 79

அதை தொடர்ந்து 149 என்ற சுலபமான இலக்கை துரத்திய தென்னாப்பிரிக்காவுக்கு ஹென்றிக்ஸ் 4 (3) பிரிட்டோரியஸ் 4 (5) வேன் டெர் டுஷன் 1 (7) என டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களை அற்புதமாக பந்துவீசி காலி செய்த புவனேஸ்வர் குமார் இந்தியாவுக்கு சூப்பர் தொடக்கம் கொடுத்தார். அதனால் 29/3 என ஆரம்பத்திலேயே தடுமாறிய தென் ஆப்பிரிக்காவை அடுத்து களமிறங்கிய ஹென்றிச் க்ளாஸென் மற்றொரு தொடக்க வீரர் கேப்டன் பவுமாவுடன் இணைந்து 4-வது விக்கெட்டுக்கு 64 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து மீட்டெடுத்தார்.

- Advertisement -

இந்தியா தோல்வி:
அதில் பவுமா 35 (30) ரன்களில் ஆட்டமிழந்தாலும் மறுபுறம் இந்தியாவை வெளுத்து வாங்கிய க்ளாஸென் 7 பவுண்டரி 5 சிக்சருடன் 81 (46) ரன்களை குவித்து வெற்றியை உறுதிசெய்து ஆட்டமிழந்தார். இறுதியில் டேவிட் மில்லர் 20* (15) ரன்கள் எடுக்க 18.2 ஓவரிலேயே 149/6 ரன்களை எடுத்த தென்னாபிரிக்கா எளிதான வெற்றி பெற்றது. ஏற்கனவே இந்த தொடரின் முதல் போட்டியில் வென்ற அந்த அணி இந்த வெற்றியால் 2 – 0* (5) என்ற கணக்கில் வலுவாக முன்னிலை பெற்று கோப்பையை வெல்லும் வாய்ப்பை பிரகாசப் படுத்தியுள்ளது. மறுபுறம் சொந்த மண்ணில் பேட்டிங்கிலும் பந்துவீச்சிலும் முக்கிய தருணங்களில் சொதப்பிய இந்தியா அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்து தலைகுனிந்துள்ளது.

Henrich Klassen

முன்னதாக இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியாவுக்கு ருதுராஜ் 1 (4) ரன்னில் அவுட்டாகி ஏமாற்றினாலும் மற்றொரு தொடக்க வீரர் இஷான் கிசான் 34 (21) ரன்கள் குவித்து அந்த சரிவை சரி செய்து அவுட்டானார். ஆனால் அப்போது வந்த கேப்டன் ரிஷப் பண்ட் 5 (7) ஹர்திக் பாண்டியா 9 (12) என முக்கிய பேட்ஸ்மேன்கள் அதிரடியை காட்டாமல் அதிக பந்துகளை சந்தித்து சொற்ப ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தனர். போதாகுறைக்கு ஷ்ரேயஸ் ஐயரும் 40 (35) ரன்களில் முக்கிய நேரத்தில் அவுட்டானதால் 98/5 என திணறிய இந்தியா 130 ரன்களை தாண்டுமா என்ற கவலை ரசிகர்களுக்கு ஏற்பட்டது.

- Advertisement -

கம்பீர் காட்டம்:
அந்த சமயத்தில் சமீபத்திய ஐபிஎல் தொடரில் மிரட்டலாக பேட்டிங் செய்து 3 வருடங்கள் கழித்து இந்திய அணிக்குள் மாஸ் கம்பேக் கொடுத்துள்ள தினேஷ் கார்த்திக் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவருக்கு பதில் அக்சர் படேலை கேப்டன் ரிஷப் பண்ட் களமிறக்கியது பெரிய ஆச்சரியமாக இருந்தது. ஆனால் பினிஷெர் என்பதால் கடைசியில்தான் களமிறங்க வேண்டுமென்ற சட்டம் உள்ளதா கேள்வி எழுப்பியுள்ள முன்னாள் இந்திய வீரர் கௌதம் கம்பீர் போட்டியின் சூழ்நிலைக்கு ஏற்றவாறு தினேஷ் கார்த்திக் போன்றவரை முன்னதாகவே களமிறக்கியிருக்க வேண்டும் என்று கேப்டன் ரிசப் பண்ட்டை விமர்சித்துள்ளார்.

Gambhir

இது பற்றி போட்டி முடிந்ததும் அவர் பேசியது பின்வருமாறு. “சில நேரங்களில் பினிஷர்கள் என அழைக்கப்படுபவர்கள் 15 ஓவர்கள் கழித்துதான் பேட்டிங் செய்ய வேண்டும் என்று நீங்கள் (பண்ட்) நினைக்கிறீர்கள். இது எந்த மாதிரியான யுக்தி என்று எனக்கு புரியவில்லை. தினேஷ் கார்த்திக் ஒரு அனுபவம் வாய்ந்த இந்திய வீரர். ஐபிஎல் தொடரை விட்டுவிட்டு அவர் இந்தியாவுக்காக எவ்வளவு போட்டியில் விளையாடியுள்ளார் என்று பாருங்கள். அப்படிப்பட்ட அவர் இருக்கும்போது அக்சர் படேலை எப்படி நீங்கள் அனுப்ப முடியும். கடைசி ஓவர்களில் தினேஷ் கார்த்திக் சிறப்பாக செயல்பட்டுள்ளார் என்பதில் சந்தேகமில்லை”

- Advertisement -

“ஆனால் அவர் அக்சர் படேலுக்கு முன்பு களமிறங்கியிருக்க வேண்டும். அவரை கடைசி 3 – 4 ஓவர்களில் சிறப்பாக செயல்பட நீங்கள் பிடித்து வைத்திருந்தீர்கள். ஆனால் பாண்டிய அவுட்டானதும் அவர் வந்திருக்க வேண்டும். மேலும் அக்சர் படேலுக்கு முன்பாக அவர் வந்திருந்தால் 10 – 15 பந்துகளை முன்கூட்டியே சந்தித்து எதிரணியை சற்று அதிகமாக அடித்து இந்தியாவின் ஸ்கோர் 149க்கு பதில் 169 என இருந்திருக்க வாய்ப்பு கிடைத்திருக்கும்” என்று விமர்சித்தார்.

மீண்டும் அவமானம்:
அவர் கூறுவது முற்றிலும் உண்மையாகும். ஏனெனில் நேற்றைய போட்டியில் பேட்டிங்க்கு சவாலான பிட்சில் ஆரம்பத்தில் தினேஷ் கார்த்திக்கும் தடுமாறினார். ஆனால் கடைசியில் அதிரடியாக பேட்டிங் செய்து இந்தியாவின் மானத்தை ஓரளவு காப்பாற்றினார். ஒருவேளை முன்கூட்டியே களமிறங்கியிருந்தால் கூடுதலான பந்துகளை சந்தித்து முன்கூட்டியே செட்டிலாகி கடைசி நேரத்தில் மேலும் சரவெடியாக பேட்டிங் செய்திருப்பார்.

மேலும் இந்த தொடரின் முதல் போட்டியிலும் கடைசி ஓவரில் ஹர்திக் பாண்டியா சிங்கிள் எடுக்க மறுப்பு தெரிவித்து தினேஷ் கார்த்திக்கை அவமானப்படுத்தினார். தற்போது மீண்டும் தினேஷ் கார்த்திக் திறமை மீது நம்பிக்கை இல்லாமல் இம்முறை கேப்டன் ரிஷப் பண்ட் அவரை விட குறைந்த அனுபவம் பெற்ற அக்சர் பட்டேல் முன்னதாக அனுப்பி அவமானப் படுத்தியுள்ளார்.

Advertisement