IND vs ZIM : சொதப்பிய அந்த இருவருக்கும் வாய்ப்பு ஆனால் அசத்திய அவருக்கு வாய்ப்பில்லையா – தேர்வுக்குழு மீது ரசிகர்கள் காட்டம்

Avesh Khan Prasidh Krishna
- Advertisement -

வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வரும் டி20 தொடரில் கேப்டன் ரோகித் சர்மா தலைமையில் முதல் போட்டியில் வென்ற இந்தியா முன்னிலை பெற்றுள்ளது. வரும் ஆகஸ்ட் 7-ஆம் தேதியுடன் நிறைவுக்கு வரும் இந்த சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு தாயகம் திரும்பும் இந்திய அணியினர் அடுத்ததாக ஜிம்பாப்வேவுக்கு பறந்து அங்கு 3 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்கின்றர். ஒரு வார ஓய்வுக்குப் பின் வரும் ஆகஸ்ட் 18, 20, 22 ஆகிய தேதிகளில் தலைநகர் ஹராரேயில் நடைபெற இருக்கும் இந்த தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தொடரில் கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி உள்ளிட்ட முக்கிய வீரர்கள் ஓய்வெடுக்கும் நிலையில் வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடரில் அசத்திய ஷிகர் தவான் மீண்டும் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த தொடரில் உள்ளூர் கிரிக்கெட்டில் கடுமையாக உழைத்த ராகுல் திரிபாதி முதல் முறையாக வாய்ப்பை பெற்றுள்ளது ரசிகர்களை மகிழ வைத்துள்ளது.

- Advertisement -

கிருஷ்ணா – பிரசித்:
அவருடன் சஞ்சு சாம்சன், இஷான் கிசான், ருதுராஜ் கைக்வாட், தீபக் ஹூடா, அக்சர் படேல், முகமது சிராஜ் என சமீபத்திய தொடர்களில் அசத்திய இளம் வீரர்கள் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார். மேலும் சமீப காலங்களில் காயத்தால் விலகிய தமிழகத்தின் வாஷிங்டன் சுந்தர், தீபக் சஹர், குல்தீப் யாதவ் ஆகியோரும் குணமடைந்து இந்திய அணிக்கு திரும்பியுள்ளார்கள். ஆனால் இதே தொடரில் இளம் வேகப்பந்து வீச்சாளர்கள் பிரஸித் கிருஷ்ணா மற்றும் ஆவேஷ் கான் ஆகியோருக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது ரசிகர்களை அதிருப்தியடைய வைத்துள்ளது.

ஏனெனில் சமீபத்திய வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடரில் இந்தியா வெற்றியை பதிவு செய்த போதிலும் எஞ்சிய 10 வீரர்களில் எந்த மாற்றமும் செய்யாமல் இந்த இருவருக்கு மட்டுமே மாறி மாறி வாய்ப்பளிக்கப்பட்டது. அதில் முதலாவதாக முதல் போட்டியில் வாய்ப்பு பெற்ற பிரசித் கிருஷ்ணா ஆரம்ப கட்டங்களில் சிறப்பாக பந்து வீசினாலும் கடைசி கட்ட ஓவர்களில் ரன்களை வாரி வழங்கி பின்னடைவை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டார்.

- Advertisement -

அதனால் 2-வது போட்டியில் ஆவேஷ் கானுக்கு அறிமுகமாக களமிறங்கும் வாய்ப்பு கொடுக்கப்பட்டது. அதில் சிறப்பாக செயல்படத் தவறிய அவர் மாறாக வெறும் 6 ஓவரில் 54 ரன்களை வாரி வழங்கி மோசமாக செயல்பட்டதால் கடுப்பான இந்திய அணி நிர்வாகம் இதற்கு அவரே பரவாயில்லை என்பதுபோல் 3-வது போட்டியில் மீண்டும் இவரை அதிரடியாக நீக்கி விட்டு பிரஸித் கிருஷ்ணாவுக்கு வாய்ப்பு கொடுத்தது. ஆனால் கைநழுவிப்போன வாய்ப்பு மீண்டும் கிடைத்த நிலையில் அதை பொன்னாக மாற்ற தவறிய பிரசித் கிருஷ்ணா 4 ஓவரில் 30 ரன்களை கொடுத்து கொஞ்சமும் முன்னேறாத பவுலிங்கை வெளிப்படுத்தினார்.

அசத்திய அர்ஷிதீப்:
மொத்தத்தில் ஒன்றுக்கு ஒன்று சளைத்தவர்கள் அல்ல என்ற வகையில் அந்த 2 பவுலர்களும் மாறி மாறி கொடுத்த வாய்ப்பை வீணடிக்கும் வகையில் பந்து வீசியது ரசிகர்களை கடுப்பாக வைத்தது. அதே சமயம் இந்த 2 சொதப்பல் பந்து வீச்சாளர்களுக்கு பதிலாக ஐபிஎல் 2022 தொடரில் அபாரமாக செயல்பட்டு தென்னாப்பிரிக்கா, அயர்லாந்து டி20 தொடரில் வாய்ப்புக்காக பெஞ்சில் அமர்ந்திருந்து இங்கிலாந்து டி20 தொடரின் கடைசி போட்டியில் வாய்ப்பு பெற்று அசத்தலாக செயல்பட்ட அர்ஷ்தீப் சிங்க்கு வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடரில் வாய்ப்பு கொடுக்குமாறு ரசிகர்கள் கோரிக்கை வைத்தனர்.

- Advertisement -

ஆனால் அதை காதில் வாங்காத அணி நிர்வாகம் அடுத்ததாக நடைபெற்று வரும் வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடரில் வாய்ப்பளித்துள்ளது. அதில் முதல் போட்டியில் கச்சிதமாக செயல்பட்ட அவர் 2 விக்கெட்டுகளை எடுத்து இந்த இளம் வயதிலேயே அனுபவம் வாய்ந்த பவுலரைப் போல் லைன், லென்த், வேரியேஷன் என வேகத்தில் அனைத்து விவேகங்களையும் புகுத்தி எதிரணி பேட்ஸ்மேன்களை திணறடித்து வருகிறார்.

அதனால் வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடரில் வாய்ப்பளிக்காதது பரவாயில்லை அடுத்ததாக நடைபெறும் இந்த ஜிம்பாப்வே தொடரில் அவருக்கு ஏன் வாய்ப்பளிக்கவில்லை என்று தேர்வுக்குழு மற்றும் அணி நிர்வாகத்தின் மீது ரசிகர்கள் கடுமையான காட்டமான கருத்துக்களை சமூக வலை தளங்களில் தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க: IND vs ZIM : காயத்தை கடந்து போராடி இந்திய அணிக்குள் கம்பேக் கொடுத்துள்ள இளம் தமிழக வீரர் – சாத்தியமானது எப்படி, முழுவிவரம்

மோசமான தேர்வுக்குழு:
மேலும் வரலாற்றில் ஜாஹீன் கானுக்கு பின் நல்ல இடது கை வேகப்பந்து வீச்சாளர்கள் இந்திய அணி தடுமாறுவதை உலகமே அறியும். அத்துடன் ஏற்கனவே ஜஸ்பிரித் பும்ரா, புவனேஸ்வர் குமார், முகமது சிராஜ், முகமது சமி போன்ற வலதுகை பந்துவீச்சாளர்கள் இருக்கும் நிலையில் இந்த திறமையான இடதுகை பந்துவீச்சாளருக்கு இந்த சிறிய தொடரில் வாய்ப்பளித்து வளர்த்தால்தானே உலகக்கோப்பை போன்ற தொடருக்கு முன்பாக இந்திய அணிக்கு நல்ல இடது கை வேகப்பந்து வீச்சாளர் கிடைப்பார் என்ற அடிப்படை யுக்தி கூட தெரியாமல் தேர்வுக்குழு செயல்படுகிறதா என்றும் ரசிகர்கள் நியாயமான கேள்வி எழுப்புகின்றனர்.

Advertisement