
விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் 2024 சீசனில் மே ஒன்றாம் தேதி நடைபெற்ற 49வது லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னையை 7 விக்கெட் வித்யாசத்தில் பஞ்சாப் தோற்கடித்தது. சேப்பாக்கத்தில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை ஏமாற்றமாக விளையாடி 20 ஓவரில் 162/7 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் ருதுராஜ் 62 ரன்கள் எடுத்த நிலையில் பஞ்சாப் சார்பில் அதிகபட்சமாக ராகுல் சஹர், ஹர்ப்ரீத் ப்ரார் தலா 2 விக்கெட்டுகள் சாய்த்தனர்.
அதைத் தொடர்ந்து 163 ரன்களை துரத்திய பஞ்சாப் அணிக்கு அதிகபட்சமாக ஜானி பேர்ஸ்டோ 46, ரிலீ ரோசவ் 43, சசாங் 25*, கேப்டன் கரண் 27* ரன்கள் அடித்து 17.5 ஓவரிலேயே எளிதாக வெற்றி பெற வைத்தனர். அதனால் 10 போட்டிகளில் 4வது வெற்றியை பதிவு செய்த பஞ்சாப் பிளே ஆஃப் செல்வதற்கான வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டது. மறுபுறம் பேட்டிங்கில் போராடுவதற்கு தேவையான ரன்கள் எடுக்கத் தவறிய சென்னை 10 போட்டிகளில் 5வது தோல்வியை பதிவு செய்தது.
தல மீது அதிருப்தி:
அதனால் பிளே ஆஃப் சுற்றுக்கு செல்லும் பயணத்தில் சென்னை பின்னடைவை சந்தித்துள்ளது. முன்னதாக இந்தப் போட்டியில் 18வது ஓவரில் களமிறங்கிய முன்னாள் சிஎஸ்கே கேப்டன் எம்எஸ் தோனி முதல் 5 பந்துகளில் பவுண்டரி அடிக்க முடியாமல் தடுமாறினார். அந்த சூழ்நிலையில் அர்ஷிதீப் சிங் வீசிய கடைசி ஓவரின் முதல் பந்தில் பவுண்டரி அடித்த தோனி 2வது பந்தில் ரன்கள் எடுக்கவில்லை.
அதைத் தொடர்ந்து 3வது பந்தில் பவுண்டரி அடிக்க முயற்சித்த தோனிக்கு சிங்கிள் மட்டுமே கிடைத்தது. அப்போது அதை எடுப்பதற்காக எதிர்ப்புறமிருந்த டேரில் மிட்சேல் வேகவேகமாக ஓடிவந்து வெள்ளைக்கோட்டையே தொட்டு விட்டார். ஆனால் அவருக்கு ஸ்ட்ரைக் கொடுக்க விரும்பாத தோனி சிங்கிள் எடுக்க மறுப்பு தெரிவித்து மீண்டும் வெள்ளைக் கோட்டுக்குள் சென்று விட்டார்.
அதனால் ஏமாற்றத்தை சந்தித்த மிட்சேல் மீண்டும் வேகவேகமாக தன்னுடைய இடத்திற்கு ஓடி சென்றார். பொதுவாக எதிர்ப்புறம் பேட்டிங் பற்றி தெரியாத டெயில் எண்டர் இருக்கும் போது தோனி இப்படி செய்ததை பலமுறை பார்த்துள்ளோம். ஆனால் அங்கே 16 கோடிக்கு வாங்கப்பட்ட மிட்சேல் பேட்டிங் நன்றாக தெரிந்த பேட்ஸ்மேனாக சிங்கிள் எடுக்க ஓடி வந்தார்.
இதையும் படிங்க: 5க்கு 5 தோல்வி.. பரம எதிரி மும்பையை போல ஓடவிடும் பஞ்சாப்.. சிஎஸ்கே பிளே ஆஃப் வாய்ப்புக்கு ஆபத்தா?
இருப்பினும் அவருக்கு மதிப்பளிக்காத தோனி ஸ்ட்ரைக்கை தாமே வைத்துக் கொள்வதற்காக திருப்பி அனுப்பினார். அதைப் பார்த்த சில சிஎஸ்கே ரசிகர்கள் 1000 இருந்தாலும் அந்த இடத்தில் தல செய்தது தவறு என்றும் மிட்சேல் மனசு காயப்பட்டிருக்கும் என்றும் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர். தொடர்ந்து விளையாடிய தோனி கடைசி 3 பந்தில் 7 ரன்கள் மட்டுமே எடுத்து இந்த சீசனில் முதல் முறையாக அவுட்டானது குறிப்பிடத்தக்கது.