கோலாகலமாக நடைபெற்று வரும் ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் மே 17ஆம் தேதி நடைபெற்ற 64வது லீக் போட்டியில் பஞ்சாப்பை 15 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த டெல்லி ஏற்கனவே லீக் சுற்றுடன் வெளியேறினாலும் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தை விட்டு 9வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. அழகான தரம்சாலா மைதானத்தில் நடைபெற்ற அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி 20 ஓவர்களில் அதிரடியாக செயல்பட்டு 213/2 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ரிலீ ரோசவ் 82* (37) பிரிதிவி ஷா 54 (38) கேப்டன் டேவிட் வார்னர் 46 (31) என முக்கிய பேட்ஸ்மேன்கள் தேவையான ரன்களை அதிரடியாக எடுத்தனர்.
அதை துரத்திய பஞ்சாப்புக்கு ஆரம்பத்திலேயே கேப்டன் ஷிகர் தவான் கோல்டன் டக் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்த நிலையில் பிரப்சிம்ரன் சிங் 22 (19) ரன்களில் மெதுவாக விளையாடி பின்னடைவை கொடுத்தார். அதே போல 3வது விக்கெட்டுக்கு 78 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்திய போதிலும் மெதுவாகவே விளையாடிய அதர்வா டைட் 55 (42) ரன்களில் அணியின் நலன் கருதி பாதியிலேயே பெவிலியன் திரும்பினார். ஆனால் மறுபுறம் கடைசி வரை லியம் லிவிங்ஸ்டன் தனி ஒருவனாக 94 (48) ரன்கள் எடுத்து போராடியும் எதிர்ப்புறம் ஜிதேஷ் சர்மா 0, ஷாருக்கான் 6, சாம் கரண் 11 என முக்கிய பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர்.
கழற்றி விட்டது சரிதான்:
அதனால் 20 ஓவர்களில் பஞ்சாப்பை 198/8 ரன்கள் கட்டுப்படுத்தி வென்ற டெல்லி சார்பில் அதிகபட்சமாக இசாந்த் சர்மா மற்றும் அன்றிச் நோர்ட்ஜெ ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர். அப்படி கடைசி ஓவர் வரை விறுவிறுப்பாக நடைபெற்ற அப்போட்டியில் 214 என்ற பெரிய இலக்கை துரத்தும் போது கேப்டனாக முன்னின்று குறைந்தது 50 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்துக் கொடுக்க வேண்டிய ஷிகர் தவான் 2வது ஓவரில் இஷாந்த் சர்மாவிடம் கோல்டன் டக் அவுட்டாகி அடுத்து வரும் பேட்ஸ்மேன்களுக்கு அழுத்தத்தைக் கொடுத்து தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது.
அதன் வாயிலாக ஐபிஎல் வரலாற்றில் அதிக முறை டக் அவுட்டான 2வது தொடக்க வீரர் என்ற மோசமான சாதனையை கௌதம் கம்பீர் மற்றும் ரகானே ஆகியோருடன் அவர் பகிர்ந்து கொண்டுள்ளார். அந்த பட்டியல்:
1. பார்திவ் படேல் : 11
2. ஷிகர் தவான் : 10*
3. கௌதம் கம்பீர் : 10
4. அஜிங்க்ய ரகானே : 10
4. டேவிட் வார்னர் : 9
முன்னதாக ஆரம்ப காலங்களில் மிடில் ஆர்டரில் விளையாடி தடுமாறிய அவர் கடந்த 2013 சாம்பியன்ஸ் ட்ராபியில் அப்போதைய கேப்டன் தோனி கொடுத்த வாய்ப்பில் அபாரமாக செயல்பட்டு தங்க பேட் விருது வென்று இந்தியா கோப்பை வெல்ல முக்கிய பங்காற்றி ரோகித் சர்மாவுடன் களமிறங்கும் நிரந்தர தொடக்க வீரராக உருவெடுத்தார். அதைத்தொடர்ந்து 2015 உலக கோப்பையில் இந்தியாவுக்காக அதிக ரன்கள், 2017 சாம்பியன்ஸ் டிராபியில் மீண்டும் தங்க பேட் விருது, 2018 ஆசியக் கோப்பையில் தொடர் நாயகன் விருது என பெரிய தொடர்களில் சிறப்பாக செயல்பட்டு வெற்றிகளில் பங்காற்றிய அவர் 2019 உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சதமடித்து காயத்துடன் வெளியேறினார்.
ஆனால் அப்போது சிறப்பாக செயல்பட்ட கேஎல் ராகுல் அந்த இடத்தை தனதாக்கிய நிலையில் குணமடைந்து திரும்பிய ஷிகர் தவான் 618, 587, 460, 356* என இப்போது வரை ஐபிஎல் தொடரில் பெரிய ரன்களை எடுத்தாலும் அதை மெதுவாக விளையாடி குறைவான ஸ்டிரைக் ரேட்டில் எடுக்கும் பேட்டிங்கை வெளிப்படுத்துகிறார். அதே போல இந்தியாவுக்காக பெற்ற வாய்ப்பிலும் சமீப காலங்களில் சுமாராகவே செயல்பட்ட அவரை விட சுப்மன் கில் போன்ற அடுத்த தலைமுறை வீரர்கள் அதிரடியாக செயல்படுகின்றனர்.
அதனால் வருங்காலத்தை கருத்தில் கொண்டு மிஸ்டர் ஐசிசி என்றழைக்கப்படும் அவரை வெள்ளைப் பந்து கிரிக்கெட்டிலும் தேர்வுக்குழு கழற்றி விட்டுள்ளது. இருப்பினும் ராகுலை விட சிறப்பாக செயல்படும் அவருக்கு 2023 உலகக் கோப்பையில் வாய்பளிக்கலாம் என்று சில கருத்துக்கள் காணப்படுகின்றன.
இதையும் படிங்க:DC vs PBKS : நாங்க ஜெயிச்சாலும் இந்த ஒரு விஷயத்தை மோசமா பண்ணியிக்கோம். உண்மையை ஒப்புக்கொண்ட – டேவிட் வார்னர்
ஆனாலும் நேற்றைய வாழ்வா சாவா போட்டியில் சொதப்பியதால் ஏமாற்றமடைந்துள்ள ரசிகர்கள் வருங்காலத்தை கருத்தில் கொண்டு இந்திய அணியில் உங்களை கழற்றி விட்டது சரிதான் என்று அதிருப்தியை வெளிப்படுத்துகின்றனர்.



