IND vs WI : சிறப்பாக செயல்பட்டு 77 ரன்கள் அடித்தும் சுப்மன் கில்லை 2 முன்னாள் வீரர்களுடன் சேர்ந்து கலாய்க்கும் ரசிகர்கள் – காரணம் இதோ

- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் முதலிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்து பின்னடைவுக்குள்ளான இந்தியா அதற்கடுத்த 2 போட்டிகளில் வென்று தொடரை சமன் செய்து பதிலடி கொடுத்துள்ளது. இதனால் சமனில் இருக்கும் இத்தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் மாபெரும் கடைசிப் போட்டி ஆகஸ்ட் 13ஆம் தேதி இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு அமெரிக்காவின் ஃப்ளோரிடா நகரில் இருக்கும் லாடர்ஹில் மைதானத்தில் நடைபெறுகிறது.

முன்னதாக அந்த மைதானத்தில் நேற்று நடைபெற்ற 4வது போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் நிர்ணயித்த 179 ரன்களை துரத்திய இந்தியா 9 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. அதில் கடந்த போட்டியில் அறிமுகமாகி 1 ரன்னில் அவுட்டான யசஸ்வி ஜெய்ஸ்வால் இம்முறை அதற்கும் சேர்த்து கடைசி வரை அவுட்டாகாமல் 11 பவுண்டரி 3 சிக்சருடன் 84 (51) ரன்கள் குவித்து அசத்தினார். மறுபுறம் இந்த சுற்றுப்பயணத்தில் ஆரம்பத்திலிருந்தே தடுமாறி வந்த சுப்மன் கில் முதல் முறையாக அதிரடியாக விளையாடி 3 பவுண்டரி 5 சிக்சருடன் 77 (47) ரன்கள் எடுத்து வெற்றியில் முக்கிய பங்காற்றி தன் மீதான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சிறப்பாகவே செயல்பட்டார்.

- Advertisement -

கலாய்க்கும் ரசிகர்கள்:
ஆனாலும் அவரை பாராட்டுவதற்கு பதில் ஒரு தரப்பு ரசிகர்கள் கலாய்த்து வருகிறார்கள். ஏனெனில் 2018 அண்டர்-19 உலக கோப்பையை வென்ற இந்திய அணியில் தொடர் நாயகன் விருது வென்று சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகி 2021 காபா வெற்றியில் 91 ரன்கள் அடித்து முக்கிய பங்காற்றிய அவர் ஐபிஎல் 2022 தொடரில் முதல் சீசனிலேயே குஜராத் கோப்பையை வெல்லும் அளவுக்கு மிரட்டலாக செயல்பட்டார்.

அதன் காரணமாக இந்தியாவுக்காக மீண்டும் பெற்ற நிலையான வாய்ப்பில் 3 வகையான கிரிக்கெட்டிலும் சதடித்து அசத்திய அவர் ஐபிஎல் 2023 தொடரில் ஆரஞ்சு தொப்பியை வென்றதால் சச்சின், விராட் கோலி வரிசையில் வருங்கால சூப்பர் ஸ்டாராக உருவெடுத்துள்ளதாக ரசிகர்கள் பாராட்டினர். ஆனால் அதன் பின் 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் சொதப்பி தோல்விக்கு காரணமாக அமைந்த அவர் பலவீனமான அணியாக இருந்தாலும் வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் சவாலான மைதானங்களில் டெஸ்ட், ஒருநாள், டி20 என 3 வகையான தொடரிலும் களமிறங்கிய 9 போட்டிகளில் வெறும் 1 அரை சதம் மட்டுமே அடித்து ஏமாற்றத்தை கொடுத்தார்.

- Advertisement -

அதிலும் குறிப்பாக கேரியரில் ஆரம்ப முதலே தடுமாறி வந்த டி20 கிரிக்கெட்டில் தமக்கு மிகவும் பிடித்த ஃபிளாட்டான பிட்ச்சை கொண்டிருக்கும் அகமதாபாத் மைதானத்தில் களமிறங்கிய 1 போட்டியில் 126 ரன்கள் அடித்த அவர் அகமதாபாத்துக்கு வெளியே விளையாடிய எஞ்சிய 8 போட்டிகளில் வெறும் 92 ரன்கள் மட்டுமே அடித்து திணறி வந்தார். அதனால் அகமதாபாத்தில் மட்டுமே வண்டி ஓடும் என்று ரசிகர்கள் கலாய்த்த நிலையில் எல்லா நாடுகளிலும் அகமதாபாத் போன்ற மைதானம் கிடைக்காது என்பதை புரிந்து கொண்டு முன்னேற வேண்டுமென அவரை வாசிம் ஜாஃபர் போன்ற சில முன்னாள் வீரர்களும் விமர்சித்தனர்.

அந்த நிலையில் இப்போட்டி வெஸ்ட் இண்டீஸ் மண்ணுக்கு வெளியே மிகவும் ஃபிளாட்டான பிட்ச்சை கொண்டிருக்கும் லாடார்ஹில் மைதானத்தில் நடைபெற்றது. அதனால் போட்டி தூங்குவதற்கு முன்பாகவே நிச்சயமாக கில் இங்கு அடிப்பார் என்று ரசிகர்களையும் தாண்டி முன்னாள் வீரர்கள் ராபின் உத்தப்பா, ஆகாஷ் சோப்ரா ஆகியோர் வர்ணனையாளர்களாக ஜியோ சினிமா சேனலில் தெரிவித்தனர்.

இதையும் படிங்க:IND vs WI : வெ.இ அணியை பிரித்து மேய்ந்து பாபர் – ரிஸ்வான் சாதனையை உடைத்த கில் – ஜெய்ஸ்வால் ஜோடி புதிய உலக சாதனை

அவர்கள் சொன்னது போலவே வெஸ்ட் இண்டீஸ் பவுலர்களை வெளுத்து வாங்கிய கில் 163.83 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் 77 ரன்கள் அடித்து அட்டகாசம் நிகழ்த்தினார். அதை பார்க்கும் ரசிகர்கள் சவாலான மைதானங்களில் தடுமாற்றமாக செயல்படும் கில் ஃபிளாட்டான பிட்ச்சில் மட்டும் புலியாக செயல்படுவதாக சமூக வலைதளங்களில் மீண்டும் கலாய்த்து வருகின்றனர். இருப்பினும் இளம் வீரராக இருக்கும் அவர் வருங்காலங்களில் அனைத்து சூழ்நிலைகளிலும் அசத்தும் அளவுக்கு முன்னேறுவார் என்று நம்பலாம்.

Advertisement