IPL 2023 : இதுல ரிங்கு சிங் மாதிரி 4 சிக்ஸர் அடிப்பேன்னு எகத்தாலம் வேற, வாயில் மட்டும் பேசிய ரியான் பராக்கை கலாய்க்கும் ரசிகர்கள்

Riyan Parag Rinku Singh
- Advertisement -

ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் 2008க்குப்பின் 2வது கோப்பையை வெல்லும் முனைப்புடன் விளையாடி வரும் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் இதுவரை பங்கேற்ற 4 போட்டிகளில் 3 வெற்றிகளை பதிவு செய்து புள்ளி புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. அந்த அணியில் பெரும்பாலான வீரர்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டு வெற்றிகளில் முக்கிய பங்காற்றி வரும் நிலையில் குரூப்பில் டூப் என தமிழக ரசிகர்கள் கலாய்க்கும் வகையில் இளம் வீரர் ரியான் பாராக் மட்டும் சுமாராக செயல்பட்டு வருகிறார். 2019இல் அறிமுகமான அவர் ஒரு போட்டியில் இளம் வயதில் அரை சதமடித்த வீரராக சாதனை படைத்து வெற்றிக்கு முக்கிய பங்காற்றி நடனமாடியதை மறக்க முடியாது.

அதனால் இவரிடம் ஏதோ திறமை இருப்பதாக மயங்கிய ராஜஸ்தான் நிர்வாகம் அப்போதிலிருந்து தக்க வைத்து தொடர்ந்து வாய்ப்பளித்து வருகிறது. ஆனால் 2020, 2021 சீசனில் முறையே 86, 93 என மிகவும் குறைவான ரன்களை எடுத்து சுமாராகவே செயல்பட்ட அவரை மீண்டும் ராஜஸ்தான் நிர்வாகம் கடந்த வருடம் 3.80 கோடிக்கு தக்க வைத்தது ஆச்சரியமாக அமைந்தது. அந்த நிலையில் கடந்த சீசனில் முழுமையான 17 போட்டிகளில் விளையாடிய அவர் 14 இன்னிங்க்ஸில் வெறும் 183 ரன்கள் மட்டுமே எடுத்து ராஜா வீட்டுப்பிள்ளையை போல் கிடைத்த வாய்ப்புகளை வீணடிப்பதை வழக்கமாக வைத்துள்ளார்.

- Advertisement -

ரிங்கு சிங் மாதிரி:
இருப்பினும் என்னமோ விராட் கோலி போல் பெரியவற்றை சாதித்ததாக நினைத்து ட்விட்டரில் பேசும் அவர் கடந்த வருடம் தவறான கேட்ச் பிடித்து விட்டு அதை வழங்காததற்காக நடுவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவ்வாறு நடந்து கொள்ளக் கூடாது என்று அறிவுரை வழங்கிய மேத்தியூ ஹைடனை கலாய்த்தது ரசிகர்களை கடுப்பாக வைத்தது. ஆனால் வாயில் பேசாமல் செயலில் காட்டுங்கள் என்று ரசிகர்கள் விமர்சித்து வந்த நிலையில் 2023 சீசனில் தோனி போல ராஜஸ்தான் அணிக்கு பினிஷராக செயல்படுவேன் என்று தெரிவித்திருந்த ரியன் பாராக் இந்த தொடரின் ஏதேனும் ஒரு போட்டியில் ஒரே ஓவரில் 4 சிக்சர்கள் அடிக்க போவதாக மார்ச் 14ஆம் தேதி ட்விட்டரில் பதிவிட்டு கெத்தாக களமிறங்கினார்.

ஆனால் பொதுவாக சொல்வதை விட செய்வதை கடினம் என்ற பழமொழிக்கேற்ப ஏற்கனவே திண்டாடி வரும் அவர் இந்த தொடரில் 7 (6), 20 (12), 7 (11) என முதல் 3 போட்டிகளிலும் சொற்ப ரன்களில் அவுட்டாகி வந்தார். அந்த நிலையில் குஜராத்துக்கு எதிராக நேற்று நடைபெற்ற போட்டியில் 178 ரன்களை ராஜஸ்தான் துரத்திய போது பட்லர் 0, ஜெய்ஸ்வால் 1, படிக்கல் 26 என டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட்டானதால் 47/3 என்ற மோசமான நிலைமையில் களமிறங்கினார்.

- Advertisement -

இருப்பினும் 7 பந்துகளுக்கு மேல் தாக்குபிடிக்க முடியாத அவர் நங்கூரமாகவும் செயல்படாமல் அதிரடியாகவும் விளையாடாமல் ரஷித் தான் சுழலில் 5 ரன்களில் அவுட்டாகி எஞ்சிய பேட்ஸ்மேன்களுக்கு மிகப்பெரிய அழுத்தத்தை உண்டாக்கி சென்றார். குறிப்பாக தோனி போல செயல்படுவேன் என வாயில் சொன்னதை மீண்டும் செயலில் காட்டாமல் ஃபினிஷிங் செய்யாமலேயே அவுட்டான அவர் இதுவரை 5 சீசன்களில் 41 இன்னிங்ஸில் 2 அரை சதங்கள் மட்டுமே அடித்து வெறும் 561 ரன்களை 16.03 என்ற பள்ளி அளவிலான பேட்ஸ்மேன் வைத்திருக்கும் சராசரியை போல் 123.57 என்ற சுமாரான ஸ்ட்ரைக் ரேட்டில் எடுத்து ராஜஸ்தானுக்கு பெரிய பின்னடைவையே கொடுத்து வருகிறார்.

அந்த வகையில் நேற்று ஏற்படுத்திய பின்னடைவை நல்ல வேளையாக சஞ்சு சாம்சன், ஹெட்மயர் ஆகியோர் அதிரடியாக விளையாடி காப்பாற்றி சரி செய்தனர். சொல்லப்போனால் அவரை விட குறைந்த அனுபவமும் வயதும் கொண்ட துருவ் ஜுரேல் கூட நேற்றைய போட்டியில் 18 (10) ரன்களை விளாசி வெற்றியில் முக்கிய பங்காற்றினார். அதை விட இந்த தொடரில் சத்தமின்றி கடைசி ஓவரில் 5 சிக்சர்களைப் பறக்க விட்ட ரிங்கு சிங் உலக சாதனை படைத்து கொல்கத்தாவுக்கு அசாத்தியமான வெற்றியை பெற்றுக் கொடுத்தார்.

இதையும் படிங்க:IPL 2023 : தோனி போல் செயல்பட முயற்சித்து பல்ப் வாங்கிய பாண்டியா, அப்பட்டமான கேப்டன்ஷிப் தவறை கலாய்க்கும் ரசிகர்கள்

அதனால் உண்மையாகவே சிறப்பாக செயல்படுபவர்கள் வாயில் பேச மாட்டார்கள் என்று தெரிவிக்கும் ரசிகர்கள் ரிங்கு சிங் போல சிக்ஸர்களை அடிப்பேன் என தொடர்ந்து வாயில் மட்டும் பேசி சுமாராக செயல்பட்டு வரும் ரியான் பராக்கை சமூக வலைதளங்களில் மீண்டும் கலாய்த்து வருகிறார்கள்.

Advertisement