எங்க கேரக்டரையே புரிஞ்சிக்க மாட்றிங்களே, வழக்கமாக சொதப்பிய பஞ்சாப் அணியை கலாய்க்கும் ரசிகர்கள் – காரணம் இதோ

Preity
- Advertisement -

உலகப் புகழ் பெற்ற ஐபிஎல் தொடரின் 16வது சீசன் வரும் 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் இந்தியாவில் நடைபெறும் நிலையில் அதற்கான வீரர்கள் ஏலம் டிசம்பர் 23ஆம் தேதியன்று கொச்சியில் நடைபெற்றது. அதில் தேவையான வீரர்களை வாங்குவதற்கு போட்டி போட்ட 10 அணிகளில் பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்வாகம் வழக்கம் போல சொதப்பலாகவே செயல்பட்டது என்று சொல்லலாம். பாலிவுட் நடிகை ப்ரீத்தி ஜிந்தாவை உரிமையாளராக கொண்ட பஞ்சாப் அணி கடந்த 2008ஆம் ஆண்டு முதலே எதிரணிகளிடம் அடி வாங்குவதற்காகவே அளவெடுத்து செய்யப்பட்டதை போன்ற செயல்பாடுகளை வெளிப்படுத்தி வருவதாலேயே இதுவரை ஒரு கோப்பையை கூட வெல்ல முடியாமல் தவித்து வருகிறது.

மேலும் ஐபிஎல் தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது ஒரு சில தோல்விகளுக்காக அதிரடி மாற்றங்கள் என்ற பெயரில் எப்போதுமே நிலையான 11 வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்காத அந்த அணி நிர்வாகம் கேப்டன்களை மாற்றுவதையும் வழக்கமாக வைத்துள்ளது. சொல்லப்போனால் சராசரியாக 2 சீசனுக்கு 1 கேப்டனை மாற்றுவதை வழக்கமாக வைத்துள்ள அந்த அணி நிர்வாகம் இந்த வருடம் கேப்டன்ஷிப் அனுபவமில்லாதவர் என்று தெரிந்தும் மயங் அகர்வாலுக்கு வாய்ப்பு கொடுத்தது.

- Advertisement -

சொதப்பல் பஞ்சாப்:
ஆனால் அதற்கு முன் உள்ளூர் போட்டிகளில் கூட கேப்டன்ஷிப் செய்த அனுபவமில்லாத காரணத்தால் தடுமாறிய இளம் வீரரான அவருக்கு மறு வாய்ப்பு கொடுக்காமல் அணியிலிருந்து மொத்தமாக கழற்றி விட்ட பஞ்சாப் நிர்வாகம் ஏற்கனவே 35 வயதை கடந்து சுமாராக செயல்பட்டு வருவதால் இந்திய அணி நிர்வாகம் கழற்றி விட காத்திருக்கும் ஷிகர் தவானை புதிய கேப்டனாக அறிவித்துள்ளது. அதுவே அந்த அணியின் ஒரு சொதப்பலான முடிவு என்ற நிலைமையில் இந்த வருடம் பிளே ஆப் சுற்றுக்கு கூட தகுதி பெறாத காரணத்தால் மயங் அகர்வால் உள்ளிட்ட பல வீரர்களை கழற்றி விட்ட பஞ்சாப் நிர்வாகம் இதர அணிகளை காட்டிலும் 42.20 கோடி என்ற பிரம்மாண்ட தொகையுடன் இந்த ஏலத்தில் களமிறங்கியது.

அந்த தைரியத்துடன் 2022 டி20 உலக கோப்பையை இங்கிலாந்து வெல்ல ஃபைனலில் ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதை வென்று முக்கிய பங்காற்றிய சாம் கரனை 18.50 கோடி என்ற இமாலய தொகைக்கு பஞ்சாப் வாங்கியது. இங்கே சாம் கரண் தரமானவர் என்றாலும் இவ்வளவு பெரிய தொகை அவருக்கு அதிகமாகும். ஏனெனில் 2022 சீசனில் 15 கோடிக்கு வாங்கப்பட்டதால் தடுமாறிய இளம் கிரிக்கெட் வீரர் இசான் கிசானை போல் அதிகப்படியான தொகைக்கு வாங்கப்பட்டுள்ளதால் சிறப்பாக செயல்பட்டாக வேண்டும் என்ற தேவையற்ற அழுத்தத்தால் அவரும் தடுமாறுவதற்கு வாய்ப்புள்ளது.

- Advertisement -

அது ஒருபுறம் இருக்க ஜிம்பாப்வேவின் நட்சத்திர ஆல் ரவுண்டர் சிக்கந்தர் ராசாவை வெறும் 50 லட்சத்துக்கு வாங்கியது மட்டுமே பஞ்சாப் அணியின் சிறந்த முடிவாகும். இருப்பினும் ஏலத்தில் வாங்கிய முதல் டாப் வீரர் 18.50 கோடி – 2வது டாப் வீரர் வெறும் 50 லட்சம் என்பதிலேயே பஞ்சாப் அணியின் அணுகுமுறை எப்படி இருந்தது என்பதை தெளிவாக காட்டுகிறது. இவை அனைத்தையும் விட சொதப்பலான விஷயம் என்னவெனில் அந்த 2 வீரர்களை தவிர்த்து வேறு எந்த தரமான அனுபவமிக்க வீரர்களையும் வாங்காத பஞ்சாப் நிர்வாகம் சில அனுபவமற்ற இளம் வீரர்களை குறைந்த விலைக்கு வாங்கியது.

பஞ்சாப் புதிதாக வாங்கிய வீரர்களின் பட்டியல்: சாம் கரண் (18.50 கோடி), சிக்கந்தர் ராசா (50 லட்சம்), ஹார்ப்ரீத் பாட்டியா (40 லட்சம்), விட்வாத் காவேரப்பா (20 லட்சம்), மோஹித் ரதீ (20 லட்சம்), சிவம் சிங் (20 லட்சம்)

- Advertisement -

இந்த வீரர்களை வாங்குவதற்கு 20 கோடியை மட்டுமே செலவிட்ட பஞ்சாப் நிர்வாகத்திடம் ஏலத்தின் முடிவில் இன்னும் 12.20 கோடிகள் என்ற பெரிய தொகை கையிருப்பு உள்ளது. ஆனால் அதிகபட்ச இடங்களான 25 இடங்களில் 23 வீரர்களை மட்டுமே நிரப்பியுள்ள அந்த அணியில் இன்னும் 3 வீரர்களுக்கான காலியிடங்கள் உள்ளது.

இதையும் படிங்க: வீடியோ : பேசாம சட்டையையும் கழற்று – ஆஸ்கரை மிஞ்சிய வங்கதேச வீரர்களை கடுமையாக விமர்சித்த விராட் கோலி, ராகுல்

அதை பார்க்கும் கிரிக்கெட் ரசிகர்கள் அந்த 3 வீரர்களை வாங்காமல் 12.20 கோடியை வங்கியில் டெபாசிட் செய்யப் போகிறீர்களா என்று கிண்டலடிக்கிறார்கள். மொத்தத்தில் இந்த ஏலத்தில் “கேரக்டரை புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு” சுமாராகவே செயல்பட்ட பஞ்சாப் 2023 சீசனில் களத்தில் சிறப்பாக செயல்பட்டு கோப்பையை வெல்லுமா என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Advertisement