
நெதர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட பாகிஸ்தான் அங்கு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றது. நெதர்லாந்து பலவீனமான அணி என்பதால் இந்த தொடரில் பாகிஸ்தான் எளிதாக வென்று விடும் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் ரோட்டர்டம் நகரில் ஆகஸ்ட் 16ஆம் தேதி துவங்கிய இத்தொடரின் முதல் போட்டியில் பாக்கர் ஜமான் 109 ரன்களும் பாபர் அசாம் 74 ரன்களும் குவிக்க பாகிஸ்தான் நிர்ணயித்த 315 ரன்கள் இலக்கை துரத்திய நெதர்லாந்துக்கு விக்ரம்ஜித் சிங் 65, டாம் கூப்பர் 65, ஸ்காட் எட்வர்ட்ஸ் 71* என முக்கிய வீரர்கள் நல்ல ரன்களை எடுத்ததால் வெற்றியின் விளிம்பு வரை வந்து 98/8 ரன்கள் குவித்து வெறும் 16 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோற்றது.
அப்போதே பெரும்பாலான ரசிகர்கள் நெதர்லாந்திடமே இப்படி மூச்சு வாங்குதே என்று பாகிஸ்தானை கலாய்த்தனர். அந்த நிலைமையில் நடைபெற்ற 2வது போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நெதர்லாந்து 186 ரன்களுக்கு ஆல் அவுட்டான போதிலும் அதை துரத்திய பாகிஸ்தானை அற்புதமாக பந்துவீசி 11/2 என ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்தியது. இருப்பினும் பாபர் அசாம் 57 ரன்கள் எடுத்ததால் 7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வென்றது. ஆனால் வெறும் 187 ரன்களை எட்டிப் பிடிக்க 33.4 ஓவர்களை எடுத்துக் கொண்ட பாகிஸ்தான் மீண்டும் ரசிகர்களின் கிண்டல்களுக்கு உள்ளானது.
போராடிய நெதர்லாந்து:
எப்படி இருந்தாலும் அடுத்தடுத்த வெற்றிகளால் 2 – 0 என்ற கணக்கில் முன்கூட்டியே தொடரை கைப்பற்றிய பாகிஸ்தான் ஆகஸ்ட் 21ஆம் தேதியான நேற்று நடைபெற்ற சம்பிரதாய 3வது போட்டியில் களமிறங்கியது. ஆனால் தொடரை இழந்தாலும் மனதை இழக்காத நெதர்லாந்து முதலிரண்டு போட்டிகளை விட 3வது போட்டியில் உயிரை கொடுத்து வெற்றிக்கு போராடியது என்றே கூறலாம். ஏனெனில் அப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தானை ஆரம்பம் முதலே அற்புதமாக பந்துவீசி சீரான இடைவெளியில் விக்கெட்டுளை எடுத்த அந்த அணி 49.4 ஓவர்களில் வெறும் 206 ரன்களுக்கு வரலாற்றில் முதல் முறையாக ஆல் அவுட் செய்து சாதனை படைத்தது.
அதிகபட்சமாக கேப்டன் பாபர் அசாம் மட்டும் போராடி சதத்தை தவற விட்டாலும் 91 ரன்கள் குவிக்க எஞ்சிய பேட்ஸ்மேன்கள் யாருமே 30 ரன்களை கூட தாண்டவில்லை. அந்தளவுக்கு சிறப்பாக பந்து வீசிய நெதர்லாந்து சார்பில் அதிகபட்சமாக பஸ் டீ லீடி 3 விக்கெட்டுகளை எடுத்தார். அதைத்தொடர்ந்து 207 ரன்களை துரத்திய அந்த அணிக்கு மேக்ஸ் ஓ’தாவ்த் 3, மூசா அஹமத் 11, பஸ் டீ லீடி 5 என முக்கிய வீரர்கள் ஆரம்பத்திலேயே சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றினார்.
ஈடுகொடுக்க முடியல:
அதனால் 37/3 என தடுமாறிய அந்த அணிக்கு மறுபுறம் நின்ற மற்றொரு தொடக்க வீரர் விக்ரம்ஜித் சிங் 7 பவுண்டரியுடன் 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்த நிலையில் மிடில் ஆர்டரில் டாம் கூப்பர் 62 ரன்கள் எடுத்ததால் 172/5 என்ற நிலைமையில் வெற்றியை நெருங்கியது. இருப்பினும் கடைசி நேரத்தில் திறம்பட செயல்பட்ட பாகிஸ்தான் பந்து வீச்சில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த அந்த அணி 49.2 ஓவரில் 197 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி வெறும் 9 ரன்கள் வித்தியாசத்தில் மீண்டும் போராடி நெஞ்சை உடைக்கும் தோல்வியை சந்தித்தது.
பாகிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக 5 விக்கெட்டுகளை எடுத்த நசீர் ஷா ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். அதனால் 3 – 0 (3) என்ற கணக்கில் ஒயிட்வாஷ் வெற்றியுடன் பாகிஸ்தான் கோப்பையை முத்தமிட்டது. இருப்பினும் இந்த தொடர் முழுவதும் பாகிஸ்தானிடம் சரணடையாமல் ஒவ்வொரு போட்டியிலும் கடுமையாக போராடிய நெதர்லாந்தை நிறைய ரசிகர்களும் முன்னாள் வீரர்களும் பாராட்டி வருகின்றனர்.
வருங்காலங்களில் முக்கிய தருணங்களில் சிறப்பாக செயல்பட்டால் எளிதாக வெல்ல முடியும் என்றும் நெதர்லாந்துக்கு நிறைய ரசிகர்கள் ஊக்கத்தை கொடுக்கின்றனர். அத்துடன் இப்போட்டியில் முக்கிய தருணத்தில் இடுப்புக்கு மேலே வந்த பந்துக்கு அம்பயர் நோ-பால் வழங்கவில்லை. அது சரியாக கொடுக்கப்பட்டிருந்தால் நெதர்லாந்து வெல்ல அதிகமான வாய்ப்பு ஏற்பட்டிருக்கும்.
இந்தியாவுடன் போட்டியா:
மறுபுறம் கத்துக்குட்டியாக கருதப்படும் நெதர்லாந்திடம் இப்படி தரமான வீரர்கள் இருந்த போதிலும் கடுமையாக போராடி சற்று அதிர்ஷ்டத்தின் உதவியுடன் தொடரை வென்ற பாகிஸ்தானை இந்திய ரசிகர்கள் வெளிப்படையாக கலாய்க்கின்றனர். ஏனெனில் விரைவில் நடைபெறும் ஆசிய கோப்பையில் கடந்த வருட டி20 உலக கோப்பையில் தோற்கடித்ததைப்போல் இம்முறையும் இந்தியாவை தோற்கடிப்போம் என அந்நாட்டு ரசிகர்களும் முன்னாள் வீரர்களும் தினந்தோறும் பேசி வருகிறார்கள்.
இதையும் படிங்க : IND vs ZIM : டாஸ் வென்றதும் பேட்டிங்கை தேர்வு செய்ய என்ன காரணம் ? – கேப்டன் கே.எல் ராகுல் விளக்கம்
வரலாற்றில் ஒரே ஒரு முறை வென்று விட்டோம் என்பதற்காக தினம்தோறும் சவால் விடும் பாகிஸ்தான் நெதர்லாந்தை தோற்கடிக்க முடியவில்லை இதில் எங்களை எளிதாக தோற்கடித்து விடுவோம் என்று வாய்ச்சவடால் பேசுவதை நிறுத்த வேண்டும் என இந்திய ரசிகர்கள் பதிலடி கொடுக்கின்றனர்.