IND vs ENG : மீண்டும் வாயை விட்டு மாட்டிய மைக்கேல் வாகன், கலாய்த்து தள்ளும் இந்திய ரசிகர்கள் – என்ன நடந்தது

- Advertisement -

இங்கிலாந்தின் எட்ஜ்பஸ்டன் மைதானத்தில் ஜூலை 1-ஆம் தேதியன்று துவங்கிய 5-வது டெஸ்ட் போட்டியில் இந்தியா களமிறங்கியது. கடந்த வருடம் ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்தை 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 4 போட்டிகளின் முடிவில் சொந்த மண்ணில் மண்ணைக் கவ்வ வைத்த விராட் கோலி தலைமையிலான இந்தியா 2 – 1* என்ற கணக்கில் முன்னிலை வகித்த போது ரத்து செய்யப்பட்ட கடைசி போட்டி இப்போது நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

அதை தொடர்ந்து பேட்டிங் செய்யத் துவங்கிய இந்தியாவுக்கு கில் 17, புஜாரா 13 என தொடக்க வீரர்கள் பொறுப்பின்றி சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க அடுத்து வந்த விஹாரி 20, விராட் கோலி 11, ஷ்ரேயஸ் ஐயர் 15 என முக்கிய பேட்ஸ்மேன்களும் இங்கிலாந்தின் தரமான பந்துவீச்சில் பெவிலியன் திரும்பினார்கள். அதனால் 98/5 என படுமோசமான தொடக்கத்தை பெற்ற இந்தியாவுக்கு அடுத்ததாக ஜோடி சேர்ந்த ரிஷப் பண்ட் – ரவீந்திர ஜடேஜா ஆகியோர் மேலும் சரியவிடாமல் நங்கூரத்தை போட்டு தூக்கி நிறுத்த போராடினார்கள்.

- Advertisement -

மாஸ் பண்ட்:
அதில் ஒருபுறம் ரவீந்திர ஜடேஜா மெதுவாக பேட்டிங் செய்ய நாமும் மெதுவாக பேட்டிங் செய்தால் அழுத்தம் ஏற்பட்டு ரன்கள் குவிக்க முடியாமல் விக்கெட்டை இழந்து விடுவோம் என்று கருதிய ரிசப் பண்ட் தனக்கே உரித்தான பாணியில் அதிரடி ஆட்டத்தை கையிலெடுத்தார். ஆரம்பம் முதலே டி20 இன்னிங்ஸ் போல பவுண்டரிகளையும் சிக்சர்களையும் பறக்கவிட்ட அவர் இங்கிலாந்துக்கு சிம்ம சொப்பனமாக மாறினார். நேரம் செல்ல செல்ல அதிரடியை அதிகப்படுத்திய இந்த ஜோடி 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் கடந்து இந்தியாவை காப்பாற்றிய பின் ஜேம்ஸ் ஆண்டர்சன் போன்ற வேகப்பந்து வீச்சாளர்களை பவுண்டரிகளாக பந்தாடிய ரிஷப் பண்ட் சுழல்பந்து வீச்சாளர் ஜேக் லீச் கதறும் வகையில் ஜாம்பவான் கங்குலியை போல் இறங்கி இறங்கி வந்து சிக்ஸர்களை பளார் பளார் என்று பறக்கவிட்டார்.

இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் பென் ஸ்டோக்ஸ் விழி பிதுங்கி நிற்க அவரிடம் சரமாரியான அடி வாங்கிய ஜேம்ஸ் ஆண்டர்சனும் இங்கிலாந்து ரசிகர்களும் திகைத்துப்போனார்கள். அதை பார்த்த இந்திய ரசிகர்கள் மகிழ்ச்சியில் துள்ளி குதிக்க வெறும் 89 பந்துகளில் சதமடித்து ரிஷப் பண்ட் கொஞ்சம் கூட அதிரடியை குறைக்காமல் மேலும் சரவெடியாக பேட்டிங் செய்தார். இறுதியில் 6-வது விக்கெட்டுக்கு 222 ரன்கள் முரட்டுத்தனமான பார்ட்னர்ஷிப் அமைத்து சரிந்த இந்தியாவை தலைநிமிரும் வகையில் தூக்கி நிறுத்திய இந்த ஜோடியில் 19 பவுண்டரி 4 சிக்சர்கள் பறக்கவிட்ட ரிஷப் பண்ட் 146 (111) ரன்கள் 131.53 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் டி20 இன்னிங்ஸ் விளையாடி ஆட்டமிழந்தார்.

- Advertisement -

மைக்கேல் வாகன் பல்ப்:
அதன்பின் வந்த ஷார்துல் தாகூர் 1 நடையை கட்டினாலும் மறுபுறம் நங்கூரமாக நிற்கும் ஜடேஜா 83* ரன்கள் எடுத்திருக்க முதல்நாள் ஆட்டநேர முடிவில் இந்தியா 338/7 என்ற நல்ல நிலைமைக்கு போராடி வந்துள்ளது. நேற்றைய போட்டியில் அற்புதமாக பேட்டிங் செய்த ரிஷப் பண்ட் ஆட்டத்தை பார்த்த பல ரசிகர்களும் சச்சின் டெண்டுல்கர், சௌரவ் கங்குலி, வீரேந்திர, சேவாக், விவிஎஸ் லக்ஷ்மன் போன்ற முன்னாள் ஜாம்பவான்கள் வியந்து போய் சமூகவலைதளங்களில் வாழ்த்துக்களை தெரிவிக்கின்றனர்.

அந்த வகையில் இங்கிலாந்தின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் “இது பார்ப்பதற்கு மிகச் சிறப்பாக உள்ளது, ஜானி பேர்ஸ்டோ போல் ரிஷப் பண்ட் பேட்டிங் செய்கிறார்” என்று பாராட்டியிருந்தார். அதாவது சமீபத்திய நியூசிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் கடைசி 2 போட்டிகளில் இதேபோல டி20 இன்னிங்ஸ் விளையாட ஜானி பேர்ஸ்டோ தனது அதிரடியான ஆட்டத்தால் இங்கிலாந்துக்கு அடுத்தடுத்த வெற்றிகளை பெற்று கொடுத்தார். அவரைப் போலவே இந்த போட்டியில் ரிஷப் பண்ட் பேட்டிங் செய்ததாக மைக்கேல் வாகன் பாராட்டியிருந்தார்.

- Advertisement -

ஆனால் அதைப் பார்த்த இந்திய ரசிகர்கள் அவர்மீது கடும் அதிருப்தியை வெளிப்படுத்தி கலாய்த்து வருகிறார்கள். ஏனெனில் ஜானி பேர்ஸ்டோ தனது வாழ்நாளில் நியூசிலாந்துக்கு எதிரான இந்த ஒரு தொடரில் மட்டும்தான் அதிரடியாக இப்போது தான் விளையாடியுள்ளார். ஆனால் ரிஷப் பண்ட் அறிமுகமான நாளிலிருந்து கடந்த 4 வருடங்களாகவே இதுபோன்ற ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதாக ரசிகர்கள் அவருக்கு பதிலடி கொடுக்கின்றனர்.

அதிலும் குறிப்பாக கடந்த 2018இல் இதே இங்கிலாந்து மண்ணிலும் 2020/21இல் ஆஸ்திரேலிய மண்ணில் நடந்த பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடரிலும் 2022இல் தென்ஆப்பிரிக்காவிழும் இதேபோல் அதிரடியாக டி20 இன்னிங்ஸ் விளையாடி தன்னை ஒரு உலகத்தரம் வாய்ந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் என்று நிரூபித்தவர்.

இதையும் படிங்க : சச்சின், கபில் தேவ், தோனி போன்ற ஜாம்பவான்களை மிஞ்சிய பண்ட் – 120 வருட சாதனை உட்பட 10 சாதனைகளின் லிஸ்ட் இதோ

ஆகவே அவரைத்தான் உங்களின் ஜானி பேர்ஸ்டோ காப்பி அடித்தாரே தவிர ரிஷப் பண்ட் அவரை பின்பற்றவில்லை என்று இந்திய ரசிகர்கள் வாகனை கலாய்க்கின்றனர். மேலும் வெறும் ஒரு தொடரில் ஜானி பேர்ஸ்டோ அடித்து விட்டார் என்பதற்காக இவ்வளவு பேச்சு பேசக் கூடாது என்றும் அவரை ரசிகர்கள் விளாசுகின்றனர்.

Advertisement