போயும் போயும் உங்களுக்கு இப்படியா ஆகனும்? மும்பையை கலாய்த்து தள்ளும் ரசிகர்கள் – எதற்கு தெரியுமா?

Mumbai Indians MI
- Advertisement -

மிகுந்த பரபரப்புடன் நடைபெற்று வரும் ஐபிஎல் 2022 தொடரில் நேற்று ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற்ற 14வது லீக் போட்டியில் வழுவான மும்பையை தோற்கடித்த கொல்கத்தா 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியால் இதுவரை பங்கேற்ற 4 போட்டிகளில் 3 வெற்றிகளை பதிவு செய்த கொல்கத்தா புள்ளி பட்டியலில் 4 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்து வெற்றி நடை போடுகிறது. முன்னதாக புனேவில் நடந்த இந்தப் போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை அடுத்து களமிறங்கிய மும்பை நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் கடும் போராட்டத்திற்கு பின் 161/4 ரன்கள் சேர்த்தது.

ஏனெனில் அந்த அணிக்கு தொடக்க வீரர்களாக களமிறங்கிய நட்சத்திரங்கள் கேப்டன் ரோகித் சர்மா 3 (12) ரன்களிலும் இஷான் கிஷான் 14 (21) ரன்களிலும் நடையை கட்டினர். அடுத்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா இளம் வீரர் தேவால்டு ப்ரேவிஸ் 2 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் உட்பட 19 பந்துகளில் 29 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார்.

- Advertisement -

காப்பாற்றிய சூரியகுமார்:
இதனால் 55/3 என திண்டாடிய மும்பையை காயத்திலிருந்து குணமடைந்து திரும்பிய நட்சத்திர வீரர் சூர்யகுமார் யாதவ் அதிரடியாக விளையாடி காப்பாற்ற முயற்சித்தார். அவருக்கு இளம் வீரர் திலக் வர்மா 27 பந்துகளில் 3 பவுண்டரி மற்றும் 2 சிக்சர் உட்பட 38* ரன்கள் எடுத்து கைகொடுக்க மறுபுறம் சிறப்பாக பேட்டிங் செய்த சூர்யகுமார் யாதவ் 36 பந்துகளில் 5 பவுண்டரி மற்றும் 2 சிக்சர் உட்பட 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

அதனால் 150 ரன்களை தாண்டாது என எதிர்பார்த்த நிலையில் கடைசி ஓவரில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அதிரடி வீரர் பொல்லார்ட் வெறும் 5 பந்துகளில் 3 சிக்ஸர் பறக்க விட்டு 22* ரன்கள் எடுத்து மிரட்டலான பினிஷிங் கொடுத்து மீண்டும் காப்பாற்றினார். கொல்கத்தா சார்பில் பந்துவீச்சில் அசத்திய பட் கம்மின்ஸ் 2 விக்கெட்டுகளை சாய்த்தார்.

- Advertisement -

கமின்ஸிடம் அடி வாங்கிய மும்பை:
அதை தொடர்ந்து 162 என்ற இலக்கை துரத்திய கொல்கத்தாவுக்கு தொடக்க வீரர் அஜிங்கியா ரஹானே 7 ரன்களில் அவுட்டாக அடுத்து களமிறங்கிய கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் 10 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றினார். போதாகுறைக்கு அடுத்து வந்த சாம் பில்லிங்ஸ் 17 (12), நிதிஷ் ராணா 8 (7) என முக்கிய மிடில் அடர் பேட்ஸ்மேன்கள் சொதப்ப பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அதிரடி மன்னன் ஆன்ரே ரசல் 11 (5) ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். இதனால் 83/4 என பின்னடைவைச் சந்தித்த கொல்கத்தாவுக்கு மறுபுறம் ஆரம்பம் முதல் தொடர்ந்து விளையாடி வந்த மற்றொரு தொடக்க வீரர் வெங்கடேஷ் ஐயர் அந்த அணியின் வெற்றிக்காக போராடினார்.

அந்த சமயத்தில் 42 பந்துகளில் வெற்றிக்கு 61 ரன்கள் தேவைப்பட்டதால் வெங்கடேஷ் ஐயர் தான் மும்பை சவாலாக திகழ்ந்து வெற்றிக்காகப் போராடுவார் என அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் யாரும் எதிர்பாராத வண்ணம் அப்போது களமிறங்கிய ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த வேகப்பந்துவீச்சாளர் பட் கமின்ஸ் மும்பைக்கு மாபெரும் ட்விஸ்ட் வைத்தார். ஏனெனில் களமிறங்கிய ஒருசில பந்துகளுக்கு பின் பவுண்டரிகளையும் சிக்சர்களையும் பறக்க விட்ட அவர் வெறும் 15 பந்துகளை மட்டுமே சந்தித்து 4 பவுண்டரிகளையும் 6 மெகா சிக்சர்களையும் பறக்கவிட்டு ருத்ர தாண்டவம் ஆடினார்.

- Advertisement -

வெறும் 15 பந்துகளில் 56* ரன்களை 373.33 என்ற மிரட்டலான ஸ்ட்ரைக் ரேட்டில் தெறிக்கவிட்ட அவருடன் வெங்கடேஷ் ஐயர் 6 பவுண்டரி மற்றும் 1 சிக்சர் உட்பட 41 பந்துகளில் 50* ரன்கள் குவித்ததால் வெறும் 16 ஓவரிலேயே 162/5 ரன்களை எடுத்த கொல்கத்தா ஸ்டைலான மாஸ் வெற்றியை ருசித்தது.

போயும் போயும் பவுலரிடம் பல்ப் வாங்கிய மும்பை:
முன்னதாக இந்த போட்டியில் வெறும் 14 பந்துகளில் 50 ரன்களை கடந்த பட் கம்மின்ஸ் ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக அரை சதம் அடித்த வீரர் என்ற கேஎல் ராகுல் சாதனையை சமன் செய்தார்.

- Advertisement -

இப்படி மும்பையை தனி ஒருவனாக மண்ணை கவ்வ செய்து ஆட்டநாயகன் விருதை வென்ற அவர் தற்போது பலரின் பாராட்டு மழையில் நனைந்து வருகிறார். அதிலும் கடைசி 30 பந்துகளில் வெற்றிக்கு 35 ரன்கள் தேவைப்பட்ட போது 16-வது ஓவரை வீச வந்த மற்றொரு ஆஸ்திரேலிய பவுலர் டேனியல் சாம்சை வதம் செய்த அவர் 6, 4, 6, 6, 3 (நோ பால்), 4, 6 என ஒரே ஓவரில் 35 ரன்களையும் நொறுக்கி மும்பையை ஒரே ஓவரில் கதற வைத்தார்.

மறுபுறம் கமின்ஸ் போன்ற ஒரு வேகப்பந்து வீச்சாளர் வெறும் ஒரு ஓவரில் ரன்கள் அடிப்பதை கட்டுப்படுத்த முடியாமல் பல்ப் வாங்கிய மும்பையை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கலாய்த்து வருகின்றனர். ஏனெனில் ஐபிஎல் வரலாற்றில் இதுவரை 5 கோப்பைகளை வென்று வெற்றிகரமான அணியாக சாதனை படைத்துள்ள ரோகித் சர்மா தலைமையிலான மும்பை போயும் போயும் ஒரு பவுலரிடமா இப்படி உதை வாங்கி தோற்கவேண்டும் என்ற வகையில் பலரும் கலாய்க்கின்றனர்.

இதையும் படிங்க : அவரோட பேட்டிங் நம்பமுடியாத வகையில் இருந்தது. மும்பையை வீழ்த்திய பிறகு – ஷ்ரேயாஸ் ஐயர் மகிழ்ச்சி

அத்துடன் இதுவரை பங்கேற்ற 3 போட்டிகளிலும் அடுத்தடுத்து இப்படி படுமோசமாக தோல்விகளை பெற்றுள்ள அந்த அணி ஹாட்ரிக் தோல்வியை சந்தித்துள்ளதால் அதற்கும் சேர்த்து ரோகித் சர்மாவின் மும்பையை ரசிகர்கள் வறுத்தெடுத்து வருகிறார்கள்.

Advertisement