LSG vs GT : இதுக்கு தானே ஆசைப்பட்டீங்க? கிங் கோலியை மிஞ்சி வெற்றிக்கு உதவாத சாதனை படைத்த ராகுலை கலாய்க்கும் ரசிகர்கள்

KL Rahul
- Advertisement -

ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 22ஆம் தேதி மதியம் 3.30 மணிக்கு நடைபெற்ற 30வது லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் குஜராத் யாருமே எதிர்பாராத வகையில் லக்னோவை வெறும் 7 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து திரில் வெற்றி பெற்றது. லக்னோவில் பந்து வீச்சுக்கு சாதகமான மைதானத்தில் நடைபெற்ற அந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த குஜராத் தடுமாற்றமாக செயல்பட்டு 20 ஓவர்களில் 135/6 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் ஹர்திக் பாண்டியா 65 (50) ரன்களும் ரித்திமான் சஹா 47 (37) ரன்களும் எடுக்க லக்னோ சார்பில் அதிகபட்சமாக மார்க்கஸ் ஸ்டானிஸ் மற்றும் க்ருனால் பாண்டியா ஆகியோர் தலா 2 விக்கெட் எடுத்தனர்.

அதை தொடர்ந்து 136 ரன்களை துரத்திய லக்னோவுக்கு முகமது ஷமி வீசிய முதல் ஓவரிலேயே தடவலாக செயல்பட்ட கேப்டன் ராகுல் 1 ரன் கூட எடுக்காமல் மெய்டன் வழங்கினார். இருப்பினும் அதைத்தொடர்ந்து அதிரடியாக செயல்பட்ட அவருடன் தனது பங்கிற்கு 24 (19) ரன்கள் எடுத்த கெயில் மேயர்ஸ் 55 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல தொடக்கம் கொடுத்து ஆட்டமிழந்தார். அந்த நிலைமையில் களமிறங்கி 2வது விக்கெட்டுக்கு 51 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த க்ருனால் பாண்டியா 23 (23) ரன்களில் அவுட்டானார்.

- Advertisement -

தடவலும் சாதனையும்:
அப்போது லக்னோவின் வெற்றிக்கு 39 பந்துகளில் வெறும் 30 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டதுடன் கைவசம் 9 விக்கெட்டுகள் இருந்ததால் வெற்றி உறுதி என்று அனைவரும் நினைத்தனர். ஆனால் 15 ஓவர்கள் வரை நிலைத்து நின்று செட்டிலாகி பிட்ச் மற்றும் எதிரணி பவுலர்களின் தன்மையை தெளிவாக தெரிந்து கொண்ட ராகுல் அந்த சூழ்நிலையிலும் அதிரடியை துவங்காமல் மெதுவாகவே விளையாடியது எதிர்ப்புறம் வந்த நிக்கோலஸ் பூரான் 1 (7) ரன்னில் அவுட்டாக முக்கிய காரணமாக அமைந்தது.

அதை விட டெத் ஓவர்களிலும் அதிரடியை துவங்காத அவர் மோகித் சர்மா வீசிய கடைசி ஓவரில் 12 ரன்கள் தேவைப்பட்ட போது 2வது பந்தில் 11 பவுண்டரியுடன் 68 (61) ரன்கள் ஆட்டமிழந்து பின்னடைவை கொடுத்தார். அதனால் நிச்சயம் அடித்தாக வேண்டிய கட்டாயத்தில் அடுத்ததாக மார்க்கஸ் ஸ்டானிஸ் 0, ஆயுஷ் படோனி 8, தீபக் ஹூடா 2 என லோயர் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டானார்கள். அதன் காரணமாக 20 ஓவர்களில் 128/7 ரன்கள் மட்டுமே எடுத்த லக்னோ கையில் வைத்திருந்த வெற்றியை குஜராத்துக்கு தாரை வார்த்தது.

- Advertisement -

அதை தட்டி பறிக்கும் வகையில் கடைசி ஓவரில் அசத்திய மோகித் சர்மா ஆட்டநாயகன் விருதை வென்றார். இந்த போட்டியில் தோல்விக்கு ராகுல் காரணம் இல்லையென்று யாரும் ஆதரவாக பேச முடியாத அளவுக்கு அவர் மோசமாக செயல்பட்டார். 2018 காலகட்டத்தில் அதிரடியாக விளையாடி இந்திய அணியிலும் நிரந்தர தொடக்க வீரராக உருவெடுத்த அவரை பிசிசிஐ அடுத்த கேப்டனாக உருவாக்க நினைத்தது.

அதனால் 17 கோடி என்ற உச்சத்தை எட்டிய தன்னுடைய ஐபிஎல் மார்க்கெட்டை தக்க வைத்துக் கொள்வதற்காக நாளடைவில் பெரிய ரன்களை எடுக்கும் சுயநல எண்ணத்துடன் குறைவான ஸ்டிரைக் ரேட்டில் விளையாடிய ராகுல் அணியின் வெற்றியைப் பற்றி கவலைப்படாமல் சாதனை மற்றும் ஆரஞ்சு தொப்பியை வெல்வதற்காக விளையாடுவதாக ரசிகர்கள் ஆதாரத்துடன் விமர்சித்தனர்.

- Advertisement -

அவர்களது விமர்சனம் இன்று மீண்டும் நிரூபணமாகும் வகையில் இந்தியா, ஐபிஎல் மற்றும் உள்ளூர் என அனைத்து வகையான டி20 கிரிக்கெட்டையும் சேர்த்து அதிவேகமாக 7000 ரன்களை எடுத்த இந்திய வீரர் என்ற புதிய சாதனையை அவர் படைத்தார். அந்த பட்டியல்:
1. கேஎல் ராகுல் : 197 இன்னிங்ஸ்*
2. விராட் கோலி : 212 இன்னிங்ஸ்
3. சிகர் தவான் : 246 இன்னிங்ஸ்

இதையும் படிங்க:CSK : இலங்கை ரசிகர்களே. உங்களுக்காக இங்கே ஒரு வைரத்தை தோனி பட்டை தீட்டி கொண்டிருக்கிறார் – ஹர்ஷா போக்ளே

இந்த சாதனை கூட ஆரம்ப காலத்தில் அதிரடியாக விளையாடிய அவர் தற்போது தடவல் மன்னனாக மாறியதை காட்டுகிறது. முன்னதாக 2022 ஆசிய மற்றும் டி20 உலக கோப்பையிலும் இதே போல் தடவலாக செயல்பட்டு இந்தியாவின் தோல்விக்கு காரணமாக வகையில் அமைந்ததால் கழற்றி விடப்பட்ட அவர் இந்த ஐபிஎல் தொடரில் அதிரடியாக விளையாட வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கினார். ஆனால் கொஞ்சமும் முன்னேறாமல் அப்படியே விளையாடி அணிக்கு உதவாத இந்த சாதனை படைத்துள்ள அவரை இதற்குத்தானே ஆசைப்பட்டீங்க என்று சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கலாய்த்து வருகிறார்கள்.

Advertisement