விராட் கோலியை விட அவர் விளையாடியதே வரலாற்றின் சிறந்த டி20 இன்னிங்ஸ் – கம்பீரின் கருத்தால் கலாய்க்கும் ரசிகர்கள்

Gambhir
- Advertisement -

வரலாற்றில் 8வது முறையாக ஆஸ்திரேலியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 2022 ஐசிசி டி20 உலக கோப்பையில் உலகின் நம்பர் ஒன் டி20 அணியாக விளையாடி வரும் ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா தன்னுடைய முதலிரண்டு போட்டிகளில் பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்தை அடுத்தடுத்த தோற்கடித்தாலும் 3வது போட்டியில் தென்னாபிரிக்காவிடம் தோற்று ஹாட்ரிக் வெற்றியை சுவைக்கும் வாய்ப்பை நழுவ விட்டது. அக்டோபர் 30ஆம் தேதியன்று பெர்த் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவர்களில் போராடி 133/9 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக சூரியகுமார் யாதவ் 68 (40) ரன்கள் எடுக்க தென்னாப்பிரிக்கா சார்பில் அதிகபட்சமாக லுங்கி நிகிடி 4 விக்கெட்டுகளை எடுத்தார்.

அதை தொடர்ந்து 134 ரன்களை துரத்திய தென்னாப்பிரிக்காவுக்கு டீ காக் 1, ரிலீ ரோசவ் 0, கேப்டன் பவுமா 10 என முக்கிய வீரர்கள் ஆரம்பத்திலேயே சொற்ப ரன்களில் அவுட்டானதால் 24/3 என தடுமாறியது. ஆனாலும் மிடில் ஆர்டரில் ஐடன் மார்க்கம் 52* ரன்களும் டேவிட் மில்லர் 59* ரன்களும் குவித்து வெற்றி பெற வைத்தனர். அதனால் தோற்ற இந்தியா அரையிறுதிக்கு தகுதி பெற எஞ்சிய 2 போட்டிகளில் வென்றாக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. முன்னதாக இப்போட்டி நடைபெற்ற பெர்த் மைதானத்தில் அதிகப்படியான வேகம் மற்றும் பவுன்ஸ் இருந்ததால் அதை பயன்படுத்தி அதிரடியாக பந்து வீசிய தென்னாப்பிரிக்காவிடம் ராகுல் 9, ரோஹித் 15, விராட் கோலி 12, தீபக் ஹூடா 0, ஹர்டிக் பாண்டியா 2 என டாப் இந்திய வீரர்கள் சொற்ப ரன்களில் சரணடைந்தனர்.

- Advertisement -

சிறந்த இன்னிங்ஸ்:
ஆனால் அவர்களுக்கு மத்தியில் மும்பை வான்கடே போன்ற வேறு ஏதோ பேட்டிங்க்கு சாதகமான பிட்ச்சில் விளையாடுவது போல் தமக்கே உரித்தான பாணியில் களமிறங்கிய முதல் பந்திலிருந்தே அதிரடி காட்டிய சூரியகுமார் யாதவ் மட்டும் 6 பவுண்டரி 3 சிக்ஸருடன் 68 (40) ரன்களை 170.00 என்ற அற்புதமான ஸ்டிரைக் ரேட்டில் வெளுத்து வாங்கி இந்தியாவின் மானத்தை காப்பாற்றினார். அவருடன் இன்னும் யாராவது 20 ரன்கள் எக்ஸ்ட்ரா எடுத்திருந்தால் இந்தியா வென்றிருக்கும் என்றே கூறலாம்.

அப்படி பந்து வீச்சுக்கு சவாலான சூழ்நிலையில் அபாரமாக செயல்பட்ட சூரியகுமார் யாதவ் இந்திய டி20 கிரிக்கெட் வரலாற்றில் மிகச்சிறந்த இன்னிங்ஸ் விளையாடியதாக முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் பாராட்டியுள்ளார். இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “இதை விட சிறந்த டி20 இன்னிங்ஸை நான் பார்த்ததில்லை. சொல்லப்போனால் டி20 கிரிக்கெட்டில் இது ஒரு இந்திய வீரரின் சிறந்த இன்னிங்ஸ். ஏனெனில் பிட்ச்சில் ஏதோ ஒரு தன்மை இருந்ததால் ஒருபுறம் விக்கெட் விழுந்து கொண்டிருந்தது”

- Advertisement -

“அவர் தான் நம்மை 133 ரன்களை எடுக்க வைத்தார். இதற்கு முன் இந்திய வீரர்கள் சதமடித்த நிறைய இன்னிங்ஸ்களை நான் பார்த்துள்ளேன். அவரே ஒருமுறை சதமடித்துள்ளார். ஆனால் அவை அனைத்தையும் விட இது கடினமானது. ஏனெனில் சூழ்நிலையும் எதிரணியின் பந்து வீச்சும் அவ்வளவு சவாலாக இருந்தது. அதிலும் குறிப்பாக 50/5 என தடுமாறிய போது (உண்மையான ஸ்கோர் 26/2) களமிறங்கி சவாலை கொடுக்கும் பிட்ச்சில் 40 பந்துகளில் 60 ரன்கள் எடுப்பது கடினமாகும். அந்த வகையில் டி20 கிரிக்கெட்டில் இதை விட சிறந்த இன்னிசை பார்க்கவில்லை என்று உண்மையாக நான் கருதுகிறேன்” என்று கூறினார்.

அவர் கூறுவது போல சவாலான மைதானத்தில் சூரியகுமார் அற்புதமான இன்னிங்ஸ் விளையாடினார் என்பது உண்மை என்றாலும் அதற்காக டி20 கிரிக்கெட்டில் ஒரு இந்திய வீரர் விளையாடிய சிறந்த இன்னிங்ஸ் என்று கூறுவதை பெரும்பாலான ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. ஏனெனில் இந்த உலக கோப்பையில் முதல் போட்டியில் பரம எதிரியான பாகிஸ்தானுக்கு எதிராக 31/4 என தடுமாறிய இந்தியாவை காலத்துக்கும் மறக்க முடியாத அபார இன்னிங்ஸ் விளையாடி 82* (53) ரன்கள் குவித்து அசாத்தியமான வெற்றியை பெற்றுக் கொடுத்த விராட் கோலி தான் வரலாற்றின் சிறந்த டி20 இன்னிங்ஸ் விளையாடியதாக கிட்டத்தட்ட உலகின் அனைத்து ஜாம்பவான்களும் ஒப்புக்கொண்டனர்.

இதையும் படிங்க : தோல்விக்கு காரணம் அஷ்வின் தான், அவரை மாத்துங்க – சைக்கிள் கேப்பில் வன்மத்தை காட்டிய முன்னாள் இந்திய வீரர்

அப்படிபட்ட இன்னிங்ஸ் விளையாடி ஒரு வாரம் முடிவதற்குள் கௌதம் கம்பீர் இப்படி பேசுவதை பார்த்தால் வழக்கம் போல விராட் கோலியின் மீதான வன்மத்தில் அவரை மட்டப்படுத்தி பேசுவதாக சமூக வலைதளங்களில் மீண்டும் அவரை கலாய்த்து வருகிறார்கள்.

Advertisement