பேசாம நேபாளுக்கு எதிரா மேட்ச் அரேஞ்ச் பண்ணுங்க, பாபர் அசாமை கலாய்த்து தள்ளும் ரசிகர்கள் – மோசமான புள்ளிவிவரம் இதோ

Babar Azam Bowled
- Advertisement -

ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் லீக் சுற்றின் முடிவில் ஆப்கானிஸ்தான் மற்றும் நேபாளம் ஆகிய அணிகள் வெளியேறிய நிலையில் இந்தியா, பாகிஸ்தான், நடப்பு சாம்பியன் இலங்கை, வங்கதேசம் ஆகிய அணிகள் சூப்பர் 4 சுற்று தகுதி பெற்றன. அதைத்தொடர்ந்து செப்டம்பர் 6ஆம் தேதி துவங்கிய சூப்பர் 4 சுற்றின் முதல் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் அணிகள் மோதின. பாகிஸ்தானில் இருக்கும் கஃடாபி நகரில் நடைபெற்ற அந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

இருப்பினும் பாகிஸ்தானின் தெறிக்க விடும் பந்து வீச்சுக்கு பதில் சொல்ல முடியாத அந்த அணி கடுமையாக போராடியும் சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்து 38.4 ஓவரில் 193 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. அந்த அணிக்கு அதிகபட்சமாக மிஸ் முஸ்பிக்கர் ரஹீம் 64 (87) ரன்களும் கேப்டன் ஷாகிப் அல் ஹசன் 53 (57) ரன்களும் எடுக்க பாகிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக ஹரிஷ் ரவூப் 4 விக்கெட்களையும் நசீம் ஷா 3 விக்கெட்களையும் சாய்த்தார். அதைத்தொடர்ந்து 194 ரன்களை துரத்திய பாகிஸ்தானுக்கு பகார் ஜமான் ஆரம்பத்திலேயே 20 ரன்களில் ஆட்டமிழந்தார்.

- Advertisement -

சுமாரான புள்ளிவிவரம்:
ஆனால் அந்த நிலையில் வந்த கேப்டன் பாபர் அசாம் வங்கதேசத்தின் நட்சத்திர பவுலர் தஸ்கின் அஹமத் வேகத்தில் 17 (22) ரன்களில் கிளீன் போல்ட்டாகி பாகிஸ்தான் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்தார். இருப்பினும் மற்றொரு தொடக்க வீரர் இமாம்-உல்-ஹக் சிறப்பாக செயல்பட்டு 78 ரன்கள் எடுக்க கடைசியில் முகமது ரிஸ்வான் 63* (79) ரன்கள் எடுத்ததால் 39.3 ஓவரிலேயே 194/3 ரன்களை எடுத்த பாகிஸ்தான் 7 விக்கெட் வித்தியாசத்தில் எளிதான வெற்றி பெற்றது.

இருப்பினும் கத்துக்குட்டியாக கருதப்படும் வங்கதேசத்துக்கு எதிராக வெறும் 194 ரன்கள் துரத்துவதற்கு பாகிஸ்தான் 40 ஓவர்கள் எடுத்துக் கொண்டது அந்த அணியின் பேட்டிங் பலவீனமாக இருப்பதை மீண்டும் காண்பித்தது. முன்னதாக இதே தொடரில் நேபாளுக்கு எதிரான முதல் போட்டியில் 151 ரன்கள் விளாசி ஆசிய கோப்பை வரலாற்றில் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த கேப்டன் என்ற சரித்திரம் படைத்த பாபர் அசாம் அதிவேகமாக 19 சதங்கள் அடித்த வீரர் போன்ற மேலும் சில சாதனைகளை படைத்திருந்தார்.

- Advertisement -

அதனால் நவீன கிரிக்கெட்டில் விராட் கோலியை விட மகத்தான பேட்ஸ்மேன் என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர்களும் ரசிகர்களும் கொண்டாடும் அவர் இப்போட்டியில் கிளீன் போல்ட்டாகி மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுத்தார். சொல்லப்போனால் ஆசிய கோப்பை வரலாற்றில் இதுவரை மொத்தம் 13 இன்னிங்ஸில் விளையாடியுள்ள அவர் அதில் நேபாளுக்கு எதிரான 1 இன்னிங்ஸில் 151 ரன்களை 151 என்ற சராசரியில் எடுத்துள்ளார்.

இதையும் படிங்க: உலகக்கோப்பை அணியிலிருந்து நீக்கப்பட்ட பின்னர் ஷிகர் தவான் வெளியிட்ட முதல் பதிவு – என்ன சொல்லியிருக்காரு பாருங்க

ஆனால் எஞ்சிய அணிகளுக்கு எதிராக விளையாடிய 12 இன்னிங்ஸில் அவர் வெறும் 241 ரன்களை 20.08 என்ற மோசமான சராசரியில் மட்டுமே எடுத்துள்ளார் என்பது வியப்பை ஏற்படுத்தும் புள்ளி விவரமாக இருக்கிறது. அதிலும் ஆசிய கோப்பையில் இதுவரை 2 முறை மட்டுமே 50க்கும் மேற்பட்ட ரன்களை எடுத்துள்ள அவர் அதையும் நேபாள் மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு எதிராகவே எடுத்துள்ளார். அதனால் பேசாமல் நேபாளுக்கு எதிராக இத்தொடரில் இன்னும் சில போட்டிகளில் பாகிஸ்தான் விளையாடுவதற்கு ஏற்பாடு செய்யுங்கள் என ரசிகர்கள் அவரை கலாய்ப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement