இப்போவும் சொல்றேன் ரிட்டையர் ஆகிடுங்க விராட் கோலி – ஆலோசனை வழங்கிய பாக் வீரரை கலாய்க்கும் ரசிகர்கள்

Virat-Kohli
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் பரபரப்பாக நடைபெற்று வரும் 2022 ஐசிசி டி20 உலக கோப்பையில் இந்தியா தன்னுடைய முதல் போட்டியில் பரம எதிரியான பாகிஸ்தானை தோற்கடித்து வரலாற்று வெற்றியை பெற்றுள்ளது. அக்டோபர் 23ஆம் தேதியன்று நடைபெற்ற அப்போட்டியில் பாகிஸ்தான் நிர்ணயித்த 160 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு கேப்டன் ரோகித் சர்மா, ராகுல், சூரியகுமார் என 3 முக்கிய வீரர்கள் ஆரம்பத்திலேயே சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றியதால் 31/4 என்ற மோசமான தொடக்கத்தைப் பெற்று திண்டாடியது. அப்போது விஸ்வரூபம் எடுத்த விராட் கோலி பாண்டியாவுடன் இணைந்து 113 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து மூழ்கிய இந்தியாவை செங்குத்தாக தூக்கி நிறுத்தினார்.

இருப்பினும் கடைசி ஓவரில் பாண்டியாவும் தினேஷ் கார்த்திக்கும் அவுட்டானதால் ஏற்பட்ட பரபரப்பில் பதறாமல் கூலாக செயல்பட்ட ரவிச்சந்திரன் அஸ்வின் ஒய்ட் வலையை உடைத்து கடைசி பந்தை தூக்கி அடித்து இந்தியாவை 4 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற வைத்தார். அந்த அசாத்தியமான வெற்றியை 6 பவுண்டரி 4 சிக்சருடன் 82* (53) ரன்கள் குவித்து சாத்தியமாக்கிய விராட் கோலி முழுமையான பழைய ஃபார்முக்கு திரும்பியுள்ளார் என்று உறுதியாக சொல்லலாம். ஏனெனில் 2019க்குப்பின் சதமடிக்கவில்லை என்பதற்காக கடுமையான விமர்சனங்களை சந்தித்து வந்த அவர் எதற்கும் செவி சாய்க்காமல் கடுமையாக உழைத்து சமீபத்திய ஆசிய கோப்பையில் சதமடித்து பார்முக்கு திரும்பினார்.

- Advertisement -

ரிட்டையர் ஆகிடுங்க:
தற்போது இப்போட்டியில் அவர் விளையாடிய இன்னிங்சை வைத்து குறிப்பாக ஹாரீஸ் ரவூப் வீசிய 19வது ஓவரில் அடித்த அந்த 2 சிக்ஸர்களை வைத்து பழைய பன்னீர்செல்வமாக திரும்பி வந்து விட்டார் என்றே கூறலாம். இந்நிலையில் வரலாற்றின் மிகச்சிறந்த இன்னிங்ஸ் விளையாடினாலும் டி20 கிரிக்கெட்டில் விராட் கோலி ஓய்வு பெறவேண்டுமென முன்னாள் பாகிஸ்தான் வீரர் சோயப் அக்தர் கேட்டுக்கொண்டுள்ளார். ஏற்கனவே சதமடிக்க முடியாமல் தவித்த போது பணிச்சுமையை நிர்வகித்து ஃபார்முக்கு திரும்பும் வகையில் டி20 கிரிக்கெட்டில் ஓய்வு பெற்று டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டும் விளையாடி சச்சினின் 100 சதங்கள் சாதனையை உடைக்க வேண்டுமென அவர் கேட்டுக்கொண்டார்.

ஏனெனில் ஒருநாள் கிரிக்கெட் தான் விராட் கோலிக்கு மிகவும் பிடிக்கும் என்றும் டி20 கிரிக்கெட்டில் இதுவரை அவர் ஒரு சதம் கூட சதமடிக்கவில்லை என்றும் சோயப் அக்தர் கூறியிருந்தார். ஆனால் அடுத்த வாரமே அவருக்கு பதிலடியை போல் டி20 கிரிக்கெட்டில் முதல் முறையாக சதமடித்த விராட் கோலி தற்போது தன்னுடைய கேரியரின் மிகச்சிறந்த இன்னிங்சை விளையாடிய பின்பும் மீண்டும் ஓய்வு பெறுமாறு சோயப் அக்தர் கூறியுள்ளார்.

- Advertisement -

இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “என்னைப் பொறுத்தவரை அவர் தன்னுடைய வாழ்நாளில் பாகிஸ்தானுக்கு எதிராக மிகச்சிறந்த இன்னிங்ஸ் விளையாடியுள்ளார். குறிப்பாக நம்மால் இதைச் செய்ய முடியும் என்ற தன்னம்பிக்கையுடன் அவர் விளையாடினார். இருப்பினும் கடந்த 3 வருடங்களாக சதமடிக்க முடியாமல் ரன்களை குவிக்க முடியாமல் கேப்டன்ஷிப் பதவியையும் இழந்த போது அவரைப் பற்றி நிறைய பேர் நிறைய பேசினார்கள்”

“அதிலும் சிலர் அவரது குடும்பத்தை இழுத்து பேசினார்கள். ஆனால் அதை அடித்து நொறுக்கியுள்ள விராட் கோலி தீபாவளிக்கு முன்பாக சரவெடியான இன்னிங்ஸ் விளையாடியுள்ளார். இது தான் நாம் கம்பேக் கொடுக்க சிறந்த இடம் என்பதை அவர் முடிவு செய்து விட்டார். அந்த வகையில் கிங் இஸ் பேக், அவருக்காக நான் மகிழ்ச்சியடைகிறேன். அவர் மிகச்சிறந்த வீரர். இருப்பினும் அவர் டி20 கிரிக்கெட்டில் ஓய்வு பெற வேண்டும். ஏனெனில் அவர் தன்னுடைய முழு சக்தியையும் டி20 கிரிக்கெட்டில் போடுவதற்கு நான் விரும்பவில்லை. இன்றைய ஆட்டத்தை போல் ஒருநாள் கிரிக்கெட்டில் அவர் விளையாடியிருந்தால் இந்நேரம் 3 சதங்களை அடித்திருப்பார்” என்று கூறினார்.

இதையும் படிங்க : இந்தியாவின் 2வது போட்டி நடக்கும் சிட்னி மைதானம் எப்படி, வரலாற்று புள்ளிவிவரங்கள் – பிட்ச், வெதர் ரிப்போர்ட் இதோ

அதாவது அணியின் வெற்றியை விட 100 சதங்களே முக்கியம் என்ற வகையில் அவர் பேசியதை பார்த்து நிறைய இந்திய ரசிகர்கள் அவரை கலாய்த்து தள்ளுகிறார்கள். குறிப்பாக டி20 கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடும் எங்களது விராட் கோலியை விட உங்களது மொத்த பாகிஸ்தானும் ஓய்வு பெறவேண்டும் எனவும் பொறாமை என்று இருந்தால் அதனுடைய மறு உருவம் அக்தர் என்றும் இதே போட்டியில் கோல்டன் டக் அவுட்டான பாபர் அசாமை முதலில் ஓய்வு பெற சொல்லுங்கள் என்றும் ரசிகர்கள் வகைவகையாக கலாய்த்து தள்ளுகிறார்கள்.

Advertisement