வார்னர் சாபம்! கழற்றி விட்டிங்கள்ல, நல்லா அனுபவிங்க – மோசமான தோல்வியால் வறுத்தெடுக்கும் ரசிகர்கள்

- Advertisement -

மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் கோலாகலமாக துவங்கி நடைபெற்று வரும் ஐபிஎல் 2022 தொடரில் நேற்று மார்ச் 29-ஆம் தேதியன்று நடைபெற்ற 5-வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் மோதின. புனே நகரிலுள்ள எம்சிஏ மைதானத்தில் நடைபெற்ற அந்தப் போட்டியில் பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் மிரட்டிய ராஜஸ்தான் 61 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

முன்னதாக அப்போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை அடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் அதிரடியாக பேட்டிங் செய்து 210/6 ரன்களை விளாசியது. அந்த அணிக்கு அதிக பட்சமாக சரவெடியாக பேட்டிங் செய்த கேப்டன் சஞ்சு சாம்சன் வெறும் 27 பந்துகளில் 3 பவுண்டரி மற்றும் 5 சிக்ஸர்கள் உட்பட 55 ரன்கள் விளாசினார்.

- Advertisement -

ராஜஸ்தான் மிரட்டல் பேட்டிங், பவுலிங்:
அவருடன் இளம் வீரர் படிக்கள் 29 பந்துகளில் 41 ரன்கள் எடுக்க கடைசி நேரத்தில் அட்டகாசமாக விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அதிரடி வீரர் சிம்ரோன் ஹெட்மையர் வெறும் 13 பந்துகளில் 2 பவுண்டரி மற்றும் 3 சிக்சர் உட்பட 32 ரன்கள் குவித்து அற்புதமான பினிஷிங் கொடுத்தார்.

அதை தொடர்ந்து 211 என்ற மிகப்பெரிய இலக்கை துரத்திய ஐதராபாத் அணியை தனது அதிரடியான பந்துவீச்சால் ராஜஸ்தான் பவுலர்கள் மிரட்டினார்கள் என்றே கூற வேண்டும். ஏனெனில் அந்த அணியின் தொடக்க வீரர் மற்றும் கேப்டன் கேன் வில்லியம்சன் 2 ரன்களில் அவுட்டாக அடுத்து களமிறங்கிய ராகுல் திரிப்பாதி மற்றும் நிக்கோலஸ் பூரன் ஆகியோர் அடுத்தடுத்து அவுட்டானார்கள். இதனால் 14/3 என மோசமான தொடக்கத்தை பெற்ற ஹைதராபாத் அணிக்கு அபிஷேக் வர்மா 9 ரன்கள், அப்துல் சமட் 4 ரன்கள் என இளம் வீரர்களும் ஏமாற்றியதால் 10.2 ஓவர்களில் 37/5 என ஆரம்பத்திலேயே அந்த அணி தோல்வியின் பிடியில் வலுவாக சிக்கியது.

- Advertisement -

ஹைதெராபாத் படுமோசமான தோல்வி:
இதை பார்த்த பல ரசிகர்களும் முன்னாள் வீரர்களும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியைப் பார்ப்பது போல் உள்ளதாக சமூக வலைதளங்களில் அலுத்துக் கொண்டனர். அந்த நிலையில் 100 ரன்களைக் கூட தாண்டாது என எதிர்பார்த்த ஹைதராபாத் அணியை நல்ல வேளையாக ஐடன் மார்க்ரம் அதிரடியாக விளையாடி 41 பந்துகளில் 57* ரன்கள் குவித்து வெற்றி பெற வைக்க போராடினார். அவருடன் தமிழக வீரர் வாசிங்டன் சுந்தர் வெறும் 14 பந்துகளில் 40 ரன்களையும் ரோமரியா செபார்ட் 18 பந்துகளில் 24 ரன்கள் எடுத்த போதிலும் ஹைதராபாத் அணியை தோல்வியில் இருந்து காப்பாற்ற முடியவில்லை. இதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 149/7 ரன்களை மட்டுமே எடுத்து அந்த அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் முதல் போட்டியிலேயே மிகப்பெரிய தோல்வியை சந்தித்துள்ளது.

இருப்பினும் அந்த அணியை பார்த்த பெரும்பாலான ரசிகர்கள் இது போன்ற ஒரு மோசமான தோல்வியை பெறுவதற்கு ஹைதராபாத் தகுதியானது தான் என சமூக வலைதளங்களில் பேசுகின்றனர். ஏனெனில் கடந்த பல வருடங்களாக அந்த அணிக்காக விளையாடி வந்த ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த நட்சத்திர வீரர் டேவிட் வார்னர் மலைபோல ரன்களைக் குவித்து அந்த அணியின் பல சரித்திர வெற்றிகளில் பங்காற்றினார். குறிப்பாக 2013 முதல் 2020 வரை தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் 500க்கும் மேற்பட்ட ரன்களை குவித்து வந்த அவர் அந்த காலகட்டங்களில் 3 ஆரஞ்சு தொப்பிகளை வென்று ஐபிஎல் வரலாற்றில் அதிக ஆரஞ்சு தொப்பிகளை வென்ற வீரர் என்ற மாபெரும் சாதனை படைத்துள்ளார்.

- Advertisement -

நல்லா அனுபவிங்க:
அது மட்டுமல்லாமல் கேப்டனாகவும் அந்த அணியை பல வருடங்கள் வழிநடத்திய அவர் கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் முறையாக கோப்பையை வென்று சாம்பியன் பட்டத்தைப் பெற்றுக் கொடுத்தார். மேலும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புட்டபொம்ம பாடலுக்கு தனது குடும்பத்தினருடன் நடனமாடி ஹைதராபாத் ரசிகர்களை மகிழ்வித்து வந்த அவர் கடந்த 2021-இல் முதல் முறையாக ரன்கள் எடுக்க தடுமாறியதால் அந்த சீஸனின் பாதியிலேயே அவரை கேப்டன் பதவியிலிருந்து ஹைதராபாத் அணி நிர்வாகம் அதிரடியாக நீக்கியது.

அது மட்டுமல்லாமல் அடுத்த ஒரு சில போட்டிகளில் விளையாடும் 11 பேர் கொண்ட அணியில் இருந்தும் நன்றி இல்லாமல் நீக்கிய அந்த அணி நிர்வாகம் பெஞ்சில் அமரவைத்து கூல் ட்ரிங்க்ஸ் தூக்க வைத்து அவரை ஒரு வேலைக்காரனை போல் நடத்தியது ரசிகர்களின் நெஞ்சங்களை உடைய வைத்தது. இருப்பினும் கூட அந்த அணிக்கு தொடர்ந்து ஆதரவு கொடுத்து வந்த அவரை அணியில் இருந்து கழற்றி விட்டதுடன் ஏலத்திலும் அந்த அணி நிர்வாகம் மீண்டும் வாங்கவில்லை.

- Advertisement -

அதன்பின் ஆஸ்திரேலியா வென்ற 2021 டி20 உலக கோப்பை தொடரின் தொடர் நாயகன் விருதை வென்று தன் மீதான விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த டேவிட் வார்னர் தற்போது டெல்லி அணியில் விளையாட ஒப்பந்தமாகியுள்ளார். மொத்தத்தில் வெற்றிக்காக பல வருடங்கள் பங்காற்றிய ஒருவரை மோசமாக நடத்தியதற்காக இதை நல்லா அனுபவிங்க என சமூக வலைதளங்களில் பல ரசிகர்களும் ஹைதராபாத் நிர்வாகத்தைச் சாடி வருகிறார்கள்.

மேலும் நேற்றைய போட்டியின் போது பவர்ப்ளே முடிவில் 14/3 ரன்களை எடுத்த ஹைதராபாத் ஐபிஎல் வரலாற்றில் பவர் பிளே ஓவர்களில் மிகக்குறைந்த ரன்களை எடுத்த அணி என்ற ராஜஸ்தானின் ஆல் – டைம் மோசமான சாதனையை பகிர்ந்து கொண்டது.

இதையும் படிங்க : நீங்க வேனா பாருங்க. இந்தமுறை ஐ.பி.எல் சாம்பியன் நாங்கதான் – அடித்துக்கூறும் இந்திய ஸ்பின்னர்

பொதுவாகவே பவர் பிளே ஓவர்களில் பட்டையை கிளப்பும் டேவிட் வார்னர் ஒருவேளை நேற்றைய போட்டியில் ஹைதராபாத் அணிக்காக விளையாடி இருந்தால் கண்டிப்பாக அது போன்ற ஒரு நிலைமை வந்திருக்காது என நிறைய ரசிகர்கள் கூறுகின்றனர்.

Advertisement