அதே நீண்ட முடி, மிரட்டல், வேகம், ஆக்சன் – அச்சு அசல் சோயப் அக்தர் போல பந்து வீசும் ஓமன் பவுலர், ரசிகர்கள் ஆச்சர்யம்

Mohammed Imran
- Advertisement -

பாகிஸ்தானை சேர்ந்த நட்சத்திர முன்னாள் கிரிக்கெட் வீரர் சோயப் அக்தர் வரலாற்றில் விளையாடிய பல மகத்தான வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவராக போற்றப்படுகிறார். கடந்த 1997ஆம் ஆண்டு அறிமுகமாகி 2011 வரை விளையாடிய அவர் தன்னுடைய மிரட்டலான வேகத்தால் சச்சின் டெண்டுல்கர், ரிக்கி பாண்டிங், ராகுல் டிராவிட், ப்ரைன் லாரா உட்பட உலகின் அனைத்து தரமான பேட்ஸ்மேன்களையும் திணறடித்த பெருமையை கொண்டுள்ளார். குறிப்பாக தமக்கு எதிராக வெற்றிகரமாக செயல்பட்ட சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட் போன்றவர்களை பலமுறை கிளீன் போல்டாக்கிய அவர் பிரையன் லாராவை அபாயகரமான பவுன்சர்களால் மண்டையை தாக்கி தாக்கி தரையில் விழ வைத்த போட்டியை மறக்க முடியாது.

அந்த வகையில் தமக்கு சவாலை கொடுக்கும் பேட்ஸ்மேன்களை முடிந்தளவுக்கு அச்சுறுத்தலான பவுன்சர்களால் தாக்கக்கூடிய அவர் எதுவுமே வேலைக்காகவில்லை என்றால். நடுவர் நோ-பால் என்று அறிவித்தாலும் பரவாயில்லை என பீமர் பந்துகளை வீசி சவாலை கொடுக்கும் ஸ்டைலை கொண்டிருந்தார். அப்படி வேகத்திற்கு மிகச் சிறந்த அடையாளமாக திகழும் அவர் சர்வதேச கிரிக்கெட்டில் அதிவேகமான பந்தை வீசிய பவுலராக இப்போதும் மாபெரும் உலக சாதனை படைத்து 444 விக்கெட்களை எடுத்த ஜாம்பவானாக பாகிஸ்தான் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறார்.

- Advertisement -

அக்தரின் ஜெராக்ஸ்:
பொதுவாகவே சச்சின் முதல் வார்னே வரை நட்சத்திர ஜாம்பவான் வீரர்களை பார்த்து தான் நிறைய இளம் வீரர்கள் புது உத்வேகமடைந்து கிரிக்கெட்டில் விளையாடுவார்கள். அந்த வகையில் சோயப் அக்தரை பார்த்து உத்வேகமடைந்தாரா என்பது தெரியவில்லை ஆனால் ஓமன் நாட்டைச் சேர்ந்த முகமது இம்ரான் எனும் வேகப்பந்து வீச்சாளர் கிட்டத்தட்ட அவரைப் போலவே பந்து வீசுவது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக சோயப் அக்தர் போலவே நீண்ட முடிகளை கொண்ட அவர் கிட்டத்தட்ட பவுண்டரியின் அருகே இருந்து தம்முடைய ஓட்டத்தை துவக்கி ஒற்றை கையில் பந்தை வைத்து பார்க்கும் போதே பேட்ஸ்மேன் சற்று பயப்படக்கூடிய ஆக்சனுடன் வேகமாக பந்து வீசுகிறார். அந்த வகையில் அவர் வீசும் பந்துகளையும் ஓட்டத்தையும் ஆக்சனையும் பார்க்கும் ரசிகர்களின் கண்களுக்கு அப்படியே சோயப் அக்தர் அச்சு அசலாக தெரிகிறார் என்று சொல்லலாம்.

- Advertisement -

தற்போது 26 வயது மட்டுமே நிரம்பியுள்ள அவர் இதுவரை 33 உள்ளூர் முதல் தர போட்டிகளில் விளையாடி 51 விக்கெட்டுகளையும் 126 ரன்களையும் எடுத்துள்ளார். அதேபோல உள்ளூர் அளவிலான t20 கிரிக்கெட்டில் 45 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் மொத்தம் 32 விக்கெட்டுகளையும் 409 ரன்களையும் எடுத்துள்ளார். அப்படி தம்முடைய திறமையால் உள்ளூர் அளவில் அசத்தி வரும் அவர் சோயப் அக்தர் போல பந்து வீசுவதால் தற்போது உலக அளவில் ட்ரெண்டிங்காகி வருகிறார்.

இதையும் படிங்க: ஐ.சி.சி தரவரிசை : ஒருநாள் கிரிக்கெட்டில் உச்சம் தொட்ட சுப்மன் கில் – எந்த இடம் தெரியுமா?

அந்த வகையில் இதே போல சிறப்பாக செயல்படும் பட்சத்தில் விரைவில் ஓமன் அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டிலும் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே தங்கள் நாட்டைச் சேர்ந்த ஜாம்பவான் சோயப் அக்தரை போலவே பந்து வீசும் அவர் விரைவில் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகி சிறப்பாக செயல்படுவதற்கு பாகிஸ்தான் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வாழ்த்துக்களை தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement