தோனிக்கு பிறந்தநாள் வாழ்த்து இப்படியா சொல்வீங்க – ஸ்ரீசாந்தை திட்டும் ரசிகர்கள், அப்படி என்ன செய்தார்?

Sreesanth MS Dhoni
- Advertisement -

இந்தியாவின் நட்சத்திர முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி ஜூலை 7-ஆம் தேதியான நேற்று தனது 41-வது பிறந்தநாளை கொண்டாடினார். ராஞ்சி போன்ற சிறிய நகரில் பிறந்து கிரிக்கெட் மீதிருந்த காதலால் ரயில்வே பணியையும் துரத்து உள்ளூர் கிரிக்கெட்டில் அட்டகாசமாக செயல்பட்டு 2004இல் ஜாம்பவான் கங்குலியின் நம்பிக்கையை பெற்று சர்வதேச அரங்கில் அறிமுகமான அவர் ஓய்வு பெற்ற 2019 வரை இந்தியாவின் முதன்மை விக்கெட் கீப்பராக விளையாடும் அளவுக்கு தரமாக செயல்பட்டார். 2007இல் எதிர்பாராத வகையில் நம்பி கொடுக்கப்பட்ட கேப்டன்ஷிப் பொறுப்பில் அனுபவம் இல்லாத போதிலும் அனைத்து வீரர்களையும் சரியான வகையில் வழிநடத்தி வரலாற்றின் முதல் டி20 உலகக் கோப்பையை வென்று காட்டினார்.

அவரது தலைமையில் 2010இல் டெஸ்ட் கிரிக்கெட்டில் நம்பர் ஒன் அந்தஸ்தை பெற்ற இந்தியா 2011இல் கங்குலி உருவாக்கிய வீரர்களுடன் சொந்த மண்ணில் 28 வருடங்கள் கழித்து உலக கோப்பையை வென்று சரித்திரம் படைத்து. மேலும் 2013இல் தாம் உருவாக்கிய விராட் கோலி, ரோகித் சர்மா, சுரேஷ் ரெய்னா, ரவீந்திர ஜடேஜா போன்ற இளம் படையை வைத்து இங்கிலாந்து மண்ணில் நடந்த சாம்பியன்ஸ் டிராபியையும் வென்று காட்டிய அவர் 3 விதமான ஐசிசி உலகக் கோப்பைகளை வென்று கொடுத்த ஒரே மகத்தான கேப்டனாக சாதனை ஒப்படைத்துள்ளார்.

- Advertisement -

கொண்டாடிய இந்தியா:
அதேபோல் இன்றைய இந்திய அணியில் விளையாடும் பெரும்பாலான வீரர்கள் அவரது தலைமையில் அவரது ஆதரவால் உலகத்தரம் வாய்ந்த வீரர்களாக உருவாகி இன்று இந்தியாவுக்கு வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் இந்தியாவின் வளமான எதிர்காலத்திற்கு வித்திட்டு ஓய்வு பெற்ற அவர் அதிரடியான பேட்ஸ்மேன், கடைசி நேரத்தில் களமிறங்கி வெற்றிகளைப் பெற்றுக் கொடுக்கும் பினிசர், மின்னல் வேகத்தில் கீப்பிங் செய்யும் விக்கெட் கீப்பர், உலகக் கோப்பைகளை வென்ற கேப்டன் என பன்முகங்களை கொண்டு பல இளம் வீரர்களுக்கும் ரசிகர்களுக்கும் ரோல் மாடலாக திகழ்கிறார்.

ஐபிஎல் தொடரிலும் 4 கோப்பைகளை வென்று போட்டிகளின் அடிப்படையில் வெற்றிகரமான ஐபிஎல் கேப்டனாக சாதனை படைத்துள்ள அவர் தனது பிறந்தநாளை லண்டனில் குடும்பத்தினருடன் கொண்டாடி மகிழ்ந்தார். அதேபோல் தங்களது ஹீரோவான அவருக்கு 41 அடி கட் அவுட் வைத்தும் கேக் வெட்டியும் ஏராளமான ரசிகர்கள் பிறந்தநாளை கொண்டாடினார்கள். அத்துடன் கோடிக்கணக்கான ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அவருக்கு ஹேப்பி பர்த்டே தோனி என்ற பெயரில் ஹெஷ்டேக் செய்து ட்ரெண்டிங் செய்து மகிழ்ந்தனர்.

- Advertisement -

நாகரிகமில்லா ஸ்ரீசாந்த்:
சச்சின் டெண்டுல்கர், சௌரவ் கங்குலி உட்பட ஏராளமான ஜாம்பவான்களும் விராட் கோலி, ஹர்டிக் பாண்டியா உட்பட அவரது தலைமையில் விளையாடிய வீரர்களும் அவரின் பிறந்த நாளில் அவருடன் இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டு மகிழ்ச்சியுடன் வாழ்த்து தெரிவித்தார்கள். அந்த வகையில் எம்எஸ் தோனிக்கு கேரளாவைச் சேர்ந்த முன்னாள் இந்திய வீரர் ஸ்ரீசாந்த் வித்தியாசமான வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அதாவது கடந்த 2009 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்காக விளையாடிய அவர் சென்னை அணியின் கேப்டனாக விளையாடிய தோனியை ஒரு லீக் போட்டியில் 2 ரன்கள் எடுத்திருந்த போது கிளீன் போல்டாக்கினார்.

அந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “மிகச்சிறந்த கேப்டனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். என்னுடைய சூப்பர் சகோதரரான அவர் எப்போதும் நான் அனைத்து போட்டிகளிலும் சிறந்து விளங்க வேண்டும் என்று நினைத்தவர். அதை நினைத்து எப்போதும் மகிழ்ச்சி அடைகிறேன். குறிப்பாக இந்த ஒரு தருணம். லவ் யூ ப்ரோ. உங்களை அந்நாளில் அவுட் செய்ததை மிகவும் கௌரவமாக கருதுகிறேன். எந்த ஒரு பேட்ஸ்மேனுக்கு எதிராக நான் வீசிய பந்துகளில் இது மிகவும் சிறந்தது. அதுவும் என்னுடைய பெரிய சகோதரரான மஹி பாய்” என்று தலைப்பாக பதிவிட்டுள்ளார்.

- Advertisement -

திட்டும் ரசிகர்கள்:
ஆனால் அதை பார்த்த ரசிகர்கள் தற்போது அவரை திட்டி தீர்த்தும் கலாய்த்தும் வருகிறார்கள். ஏனெனில் பொதுவாகவே வாழ்த்துக்களை தெரிவிக்கும் போது ஒருவர் செய்த நல்ல அம்சங்களை மேற்கோள்காட்டி மனதார வாழ்த்துவதே வழக்கமான நாகரீகமான ஒன்றாகும்.

இதையும் படிங்க : ஹேப்பி பர்த்டே தாதா – எதிரணி உரசியதால் பற்றி எறிந்த கங்குலியின் டாப் 5 நெருப்பான தருணங்கள்

அந்த வகையில் 2007 மற்றும் 2011 ஆகிய உலக கோப்பைகளில் அவரது தலைமையில் இந்தியாவின் உலகக்கோப்பை வெற்றிக்கு பங்காற்றும் அளவுக்கு சிறப்பாக செயல்பட்ட ஸ்ரீசாந்த் அதுபோன்ற தருணங்களை பயன்படுத்தாமல் அவரை அவுட் செய்த தருணத்தை தேடி கண்டுபிடித்து உங்களை அவுட் செய்தது கௌரவமாக நினைக்கிறேன் என்று நாகரீகமற்ற முறையில் வாழ்த்து கூறியுள்ளார். இதைப் பார்க்கும் ரசிகர்கள் இது வாழ்த்து போல தெரியவில்லை மனதில் பகையை வைத்துக்கொண்டு வாழ்த்தியது போல் தோன்றுவதாக விமர்சிக்கின்றனர்.

Advertisement