ஹேப்பி பர்த்டே தாதா – எதிரணி உரசியதால் பற்றி எறிந்த கங்குலியின் டாப் 5 நெருப்பான தருணங்கள்

Ganguly
- Advertisement -

இந்தியாவை சேர்ந்த நட்சத்திர முன்னாள் கேப்டன் மற்றும் அதிரடி தொடக்க வீரர் சவுரவ் கங்குலி ஜூலை 8-ஆம் தேதியான இன்று தனது 50-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். கடந்த 2000-ஆம் ஆண்டு வாக்கில் சூதாட்ட புகாரில் இந்தியா சிக்கி தவித்த போது கேப்டனாக பொறுப்பேற்ற அவர் தன்னுடைய அதிரடியான மாற்றங்களாலும் ஆக்ரோஷம் நிறைந்த கேப்டன்ஷிப் வாயிலாகவும் ஒரே வருடத்தில் இந்தியாவை தரமான வெற்றி நடைபோடும் மிரட்டலான அணியாக மாற்றினார். வீரேந்திர சேவாக், கௌதம் கம்பீர், ஹர்பஜன் சிங், யுவராஜ் சிங் முகமது கைஃப் எம்எஸ் தோனி போன்ற தரமான வீரர்களை கண்டறிந்து அவர்களுக்கு அதிகப்படியான வாய்ப்புகளை கொடுத்ததே அதற்கு முக்கிய காரணமாகும்.

சொல்லப்போனால் அவர் வளர்த்த அத்தனை வீரர்களுமே சோடை போகாமல் இன்று இந்தியாவுக்கு பல வெற்றிகளை பெற்றுக்கொடுத்த ஜாம்பவான்களாக உள்ளனர் என்பதே அவரின் தலைமைப் பண்புக்கு எடுத்துக்காட்டாகும். அவரது தலைமையில் கடந்த 2002-ஆம் ஆண்டு நடந்த சாம்பியன்ஸ் டிராபியை மழையால் இலங்கையுடன் பகிர்ந்து கொண்ட இந்தியா 2003இல் நடந்த உலககோப்பையின் இறுதிப்போட்டி வரை சென்று தோல்வியடைந்தது. ஆனாலும் அவர் உருவாக்கிய வீரர்களை வைத்து தான் கடந்த 2007 மற்றும் 2011 ஆகிய வருடங்களில் எம்எஸ் தோனி தலைமையிலான இந்தியா உலக கோப்பைகளை வென்று சரித்திரம் படைத்தது.

- Advertisement -

நெருப்பு கங்குலி:
கொல்கத்தாவின் அரச குடும்பத்தில் பிறந்த இவர் எதிரணிகள் மிரட்டினால் அதற்காக அணியாமல் பதிலுக்கு மிரட்டி போராடி வெற்றி பெறும் குணத்தை இந்திய கிரிக்கெட்டில் கொண்டு வந்தவர் என்றால் மிகையாகாது. சொந்த மண்ணில் வெல்வது சுலபம் வெளிநாடுகளில் வெல்வதே உண்மையான தரம் என்பதை உணர்ந்த சௌரவ் கங்குலி வெளிநாட்டு மண்ணில் எப்படி வெல்ல வேண்டும் என்ற வித்தையை இந்தியாவிற்கு கற்றுக் கொடுத்தவர்.

ஒரு கேப்டனாக இன்றைய வளமான இந்திய கிரிக்கெட்டுக்கு அன்றே ஆழமான விதைபோட்ட அவர் ஒரு பேட்ஸ்மேனாக எதிரணி பவுலர்களை குறிப்பாக சுழல் பந்துவீச்சாளர்களை இறங்கிஇறங்கி பளார் பளார் என மெகா சிக்ஸர்களாக பறக்க விடுவதில் கில்லாடியாவார். அதேபோல் சச்சினுடன் இவர் அமைத்த உலகசாதனை பார்ட்னர்ஷிப்பை இப்போது நினைத்தாலும் ரசிகர்களுக்கு புல்லரிக்கும்.

- Advertisement -

தற்போது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திற்கே தலைவராகும் அளவுக்கு உயர்ந்துள்ள அவர் ஏராளமான சாதனைகளையும் வெற்றிகளையும் குவித்துள்ளார். அவருடைய இந்த பிறந்த நாளில் அவரின் சாதனைகளையும் வெற்றிகளையும் பற்றி பார்க்காமல் எதிரணிகள் தேவையின்றி உரசியதால் நெருப்பாக பற்றி எறிந்த தருணங்களை பற்றி பார்ப்போம்.

1. வாங்கி கட்டிக்கொண்ட அர்னால்ட்: பொதுவாக எதிரணி வீரர்கள் தனது அணி வீரர்களை சீண்டினால் சவுரவ் கங்குலி பொங்கி எழுந்து விடுவார் என்பதற்கு இந்த தருணம் சிறந்த எடுத்துக்காட்டாகும். கடந்த 2002இல் நடைபெற்ற ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப் போட்டியில் இலங்கைக்காக பேட்டிங் செய்து கொண்டிருந்த ரசல் அர்னால்ட் ஒரு கட்டத்தில் டேஞ்சர் ஏரியா என்றழைக்கப்படும் பிட்சின் மையப் பகுதியில் அடிக்கடி சேதப்படுத்தும் வகையில் நடந்து கொண்டார்.

- Advertisement -

அதனால் அவ்வாறு நடந்து கொள்ள வேண்டாம் என்று விக்கெட் கீப்பர் ராகுல் டிராவிட் கூறியதால் ஆத்திரமடைந்த அவர் ஒருசில கோபமான சொற்களை மிரட்டும் வகையில் பேசினார். அதை கவனித்த கங்குலி உடனடியாக அங்கே வந்து டிராவிட்டை எச்சரிக்கும் வகையில் நடந்து கொண்ட அர்னால்டை பதிலுக்கு எச்சரிக்கும் வகையில் பதிலடி கொடுத்தார்.

அதனால் களத்தில் மிகப்பெரிய பரபரப்பு ஏற்பட்டு நிலையில் இருவரிடையே காரசார விவாதம் ஏற்பட்டதால் உள்ளே அம்பயர்கள் புகுந்து தடுத்து நிறுத்தினார்கள். இருப்பினும் வாயை மூடிக்கொண்டு பிட்ச்சை சேதப்படுத்தாமல் விளையாடுமாறு ஒருசில கெட்ட வார்த்தைகளுடன் கங்குலி எச்சரித்த விதத்தை ரசிகர்கள் மறக்க முடியாது.

- Advertisement -

2. நேர்மையுடன் ஆடுங்க: கங்குலி எப்போதும் நேர்மையானவர் என்பதற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். கடந்த 2002இல் நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் ஜிம்பாப்வே கடைசி 4 பந்துகளில் வெற்றி 5 ரன்கள் தேவைப்பட்ட போது ஒரு விக்கெட் மட்டுமே கைவசம் இருந்தது. அதனால் போட்டியில் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் எவ்வாறு விளையாட வேண்டும் என்பதை ஜிம்பாப்வே வீரர் பொம்மி மொப்வாங்கா வாயிலாக ட்ரிங்க்ஸ் என்ற பெயரில் பயிற்சியாளர்கள் சொல்லி அனுப்பினர்.

அதை கச்சிதமாக செய்ய தவறிய மொப்வாங்கா முதலில் ரகசிய வார்த்தைகளை கூறிவிட்டு பின்னர் பெயருக்காக டிரிங்ஸ் கொடுத்தார். அதை கவனித்த கங்குலி ட்ரிங்க்ஸ் என்ற பெயரில் ரகசிய வார்த்தைகளை கூறிக்கொண்டிருந்த மொப்வாங்காவை நாங்கள் தோற்றாலும் பரவாயில்லை நேர்மையாக விளையாடுங்கள் என்ற வகையில் எச்சரித்து பெவிலியனுக்கு அனுப்பி வைத்தார்.

3. சிக்ஸர் பதிலடி: கடந்த 2007இல் இங்கிலாந்தில் நடந்த ஒருநாள் தொடரின் ஒரு போட்டியில் அப்போதைய இளம் வீரர் ஸ்டூவர்ட் பிராட் வீசிய ஒரு பந்தில் பவுண்டரி அடிக்க கங்குலி முயற்சித்தார். அது நேராக ஒவைஸ் ஷாவின் கைக்கு சென்றதால் கர்வமான ஸ்டூவர்ட் பிராட் கங்குலியை ஸ்லெட்ஜிங் செய்தார்.

தாமாக வம்புக்கு வந்த ப்ராடை “என்கிட்ட மோதாதே” என்ற வகையில் ஒருசில வார்த்தைகளை பதிலடியாக கொடுத்து எச்சரித்த கங்குலி அதோடு நிற்காமல் அடுத்த பந்திலேயே மெகா சிக்சரை பறக்கவிட்டு பிராட் கன்னத்தில் அறையாமல் அறைந்தார். இது தேவையில்லாமல் உரசினால் பற்றி எறியும் கங்குலியின் குணத்தைக் காட்டுகிறது.

4. அஞ்சி அடங்கமட்டோம்: 2001இல் இந்திய மண்ணில் நடந்த பார்டர் – கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் தோற்றாலும் கொல்கத்தாவில் நடந்த 2வது டெஸ்டில் ராகுல் டிராவிட், விவிஎஸ் லக்ஷ்மன், ஹர்பஜன் சிங் ஆகியோரின் அபாரத்தால் வென்று சென்னையில் நடந்த 3-வது போட்டியிலும் வென்ற சௌரவ் கங்குலி தலைமையிலான இந்தியா அந்த சமயத்தில் உலகை மிரட்டிய ஸ்டீவ் வாக் தலைமையிலான ஆஸ்திரேலியாவுக்கு மாபெரும் அதிர்ச்சி வைத்தியம் அளித்து மாஸ் கம்பேக் கொடுத்ததை யாரும் மறக்க முடியாது.

அந்த தொடரில் உலகின் நம்பர் ஒன் அணியாக இருந்த ஆஸ்திரேலியாவின் உலக கோப்பையை வென்ற கேப்டன் ஸ்டீவ் வாக் 3 போட்டிகளிலும் டாஸ் வீசுவதற்கு சரியான நேரத்தில் வந்துவிடுவார். ஆனால் நீங்கள் என்னதான் பெரியாளாக இருந்தாலும் நாங்கள் அஞ்ச மாட்டோம் என்ற வகையில் அந்த தொடர் முழுவதும் வேண்டுமென்றே லேட்டாக வந்த கங்குலி ஸ்டீவ் வாக்கை சில நிமிடங்கள் காத்திருக்க வைத்தார். ஸ்லெட்ஜிங் செய்வதற்கு பெயர் போன ஆஸ்திரேலியர்களுக்கு அதையும் தாண்டிய விஷயங்களை கங்குலியால் மட்டுமே செய்து காட்ட முடிந்தது.

5. லார்ட்ஸ் தாதாகிரி: இந்த தருணத்தைப் பற்றி யாருக்கும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. கடந்த 2001/22 சீசனில் இந்தியாவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடந்த 6 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3 – 3 என்ற கணக்கில் இங்கிலாந்து சமன் செய்தது. குறிப்பாக வெற்றியாளரை தீர்மானிக்க மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த கடைசி போட்டியில் இந்தியாவை தோற்கடித்ததற்காக இங்கிலாந்தின் ஆண்ட்ரூ பிளின்டாப் நாகரீகமற்ற முறையில் தனது சட்டையை கழற்றி மைதானம் முழுக்க சுழற்றி கொண்டாடினார்.

அதை நஞ்சாக மனதுக்குள் வைத்திருந்த கங்குலி 2002இல் லண்டனில் நடந்த நாட்-வெஸ்ட் முத்தரப்பு இறுதிப்போட்டியில் கதை முடிந்தது என நினைக்கப்பட்ட இந்தியாவுக்கு யுவராஜ் சிங் – முகமது கைஃப் ஆகியோர் அபாரமாக பேட்டிங் செய்து வரலாற்றில் மிகச்சிறந்த திரில் வெற்றியைப் பெற்றுக்கொடுத்த போது அதேபோல் தனது சட்டையை கழற்றி ஒருசில ஆக்ரோசமான வார்த்தைகளுடன் சுழற்றியதை இப்போது நினைத்தாலும் புல்லரிக்கும்.

இதையும் படிங்க : IND vs ENG : ரோஹித்தும் நம்பவில்லை, தினேஷ் கார்த்திக்க்கு மீண்டும் நிகழ்ந்த அவமானம் – ரசிகர்கள் அதிருப்தி

சாதாரண தொடரை சமன் செய்ததற்கே பிளின்டாப் அவ்வளவு ஆட்டம் போட்ட நிலையில் இந்தியா வென்ற போது கிரிக்கெட்டின் மெக்கா என்றழைக்கப்படும் லண்டன் லார்ட்ஸ் மைதான பால்கனியில் கங்குலி சட்டையை சுழற்றி மெகா பதிலடி கொடுத்தது வரலாற்றில் என்றும் அழியாத மாஸ் தருணமாகும்.

Advertisement