
ஆகஸ்ட் 28ஆம் தேதியன்று துபாயில் நடைபெற்ற 2022 ஆசிய கோப்பையின் 2-வது போட்டியில் பரம எதிரியான பாகிஸ்தானை சிறப்பாக எதிர்கொண்ட இந்தியா கடைசி ஓவர் வரை போராடி 5 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் இந்திய பவுலர்களின் துல்லியமான பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 19.5 ஓவரில் 147 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பாபர் அசாம் போன்ற முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றிய அந்த அணிக்கு அதிகபட்சமாக முகமது ரிஸ்வான் 43 ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக புவனேஸ்வர் குமார் 4 விக்கெட்டுகள் எடுத்தார்.
அதை தொடர்ந்து 148 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு கேஎல் ராகுல் முதல் ஓவரிலேயே டக் அவுட்டானாலும் ரோஹித் சர்மா 12 ரன்கள், விராட் கோலி 35 ரன்கள் எடுத்து 49 பார்ட்னர்ஷிப் அமைத்து சரிவை சரிசெய்து ஆட்டமிழந்தனர். அதன்பின் வந்த சூர்யகுமார் யாதவ் 18 ரன்களில் அவுட்டானாலும் 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து வெற்றியை உறுதிசெய்த ரவீந்திர ஜடேஜா 2 பவுண்டரி 2 சிக்சருடன் 35 (29) ரன்களில் அவுட்டானார். அவருடன் விளையாடி கடைசி வரை அவுட்டாகாமல் பேட்டிங் செய்த ஹர்திக் பாண்டியா 4 பவுண்டரி 1 சிக்சருடன் 33* (17) ரன்களை விளாசி பினிஷிங் கொடுத்தார்.
மறுத்த ஜெய் ஷா:
அதனால் 19.4 ஓவரில் 148/5 ரன்களை எடுத்து வெற்றியை சுவைத்த நடப்புச் சாம்பியன் இந்தியா வெற்றியுடன் இந்த ஆசிய கோப்பையை துவக்கியுள்ளது. அதைவிட கடந்த வருடம் இதே துபாய் மைதானத்தில் மோதிய போது விராட் கோலி தலைமையிலான இந்தியாவை உலகக் கோப்பை வரலாற்றில் முதல் முறையாக மண்ணைக் கவ்வ வைத்த பாகிஸ்தானுக்கு இம்முறை ரோகித் சர்மா தலைமையில் தக்க பதிலடி கொடுக்கப் பட்டுள்ளது. அதனால் இந்த சிறப்பான வெற்றியை மைதானத்திலும் வீடுகளிலும் தெருக்களிலும் இறங்கி இந்திய ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர்.
அதேபோல் இந்தியாவின் மீது இருக்கும் அன்பால் சில ஆப்கானிஸ்தான் ரசிகர்கள் டிவியில் முத்தமிடும் அளவுக்கு வெற்றியை கொண்டாடியது சமூக வலைதளங்களில் வைரலானது. அந்த நிலைமையில் பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியை பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா துபாய் மைதானத்திலிருந்து நேரடியாக கண்டு களித்தார். இருப்பினும் ஹர்திக் பாண்டியா சிக்ஸர் அடித்து திரில் வெற்றியை பெற்றுக்கொடுத்த தருணத்தில் எழுந்து நின்று கைதட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்திய அவரிடம் அருகில் இருந்த நபர் “இந்தாங்கள், இந்த தேசிய கொடியை பறக்க விட்டுக்கொண்டே வெற்றியைக் கொண்டாடுங்கள்” என்ற வகையில் இந்திய மூவர்ணக் கொடியை வாங்கிக் கொள்ளுமாறு கொடுத்தார்.
ஆனால் அதை வாங்க மறுத்த ஜெய் ஷா தேசிய கொடி என்றால் அலர்ஜி என்பது முகத்தில் சைகை செய்தார். இதை உன்னிப்பாக கவனித்த சில ரசிகர்கள் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டதால் மிகப்பெரிய சர்ச்சை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக நாட்டுக்காக கிரிக்கெட்டில் இந்தியா வெற்றியை பதிவு செய்யும் போது ஒரு ரசிகராக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் செயலாளராக இந்தியாவின் மூவர்ணக் கொடியை பிடித்து கொண்டாடுவதால் குறைந்து போய் விடுவீர்களா என்று ரசிகர்கள் அவரை விமர்சிக்கிறார்கள்.
மேலும் நாட்டுப்பற்றும் தேசிய கொடி மீதான மரியாதையும் சாதாரண ரசிகர்களுக்கும் மக்களுக்கும் தான் இருக்கிறது, பெரிய இடத்தில் இருப்பவர்களுக்கு இருப்பதில்லை என்றும் நிறைய ரசிகர்கள் வினவுகிறார்கள். அதிலும் இந்திய அரசின் மத்திய அமைச்சர் அமித் ஷா அவர்களின் மகனான இவர் அந்த அதிகாரத்தால் இவ்வாறு நடந்து கொண்டதாக சில அரசியல்வாதிகள் வெளிப்படையாகவே விமர்சிக்கிறார்கள்.
மொத்தத்தில் அவரின் இந்த செயல் தேசியக் கொடியை அவமானப்படுத்தும் செயலாக நிறைய ரசிகர்களும் விமர்சகர்களும் கருதுகின்றனர். ஆனால் பிசிசிஐ செயலாளராக இருக்கும் ஜெய் ஷா ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவராகவும் இருக்கிறார். அதனால் அதன் விதிமுறைப்படி ஆசிய கோப்பையில் பங்கேற்கும் அத்தனை நாடுகளுக்கும் பொதுவாக அவர் நடந்து கொள்ள வேண்டும் என்பதாலேயே இந்திய தேசியக் கொடியை கையில் வாங்க மறுத்ததாக ஜெய் ஷா தரப்பு தற்போது தெளிவு படுத்துகிறது.
இதையும் படிங்க : நேரலையில் கம்பீரை ஏளனப்படுத்திய அப்ரிடி – அவருடன் சேர்ந்து சிரித்த முன்னாள் இந்திய வீரரை விளாசும் ரசிகர்கள்
முன்னதாக ஏற்கனவே பிசிசிஐ செயலாளராக ஜெய் ஷா இருப்பதற்கு நிறைய இந்திய ரசிகர்களே சமீப காலங்களில் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.