தங்கத்தை பறிகொடுத்துமா முன்னேறல.. இந்திய கேப்டன் ஹர்மன்ப்ரீத்தை விளாசும் ரசிகர்கள்.. நடந்தது என்ன?

HarmanPreet Run Out
- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக தங்களுடைய சொந்த மண்ணில் ஒரு கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இந்திய மகளிர் அணி விளையாடி வருகிறது. டிசம்பர் 14ஆம் தேதி மும்பையில் துவங்கிய அப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய மகளிரணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி முதல் நாள் முடிவில் 410/7 ரன்கள் குவித்து ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றுள்ளது.

இந்திய அணிக்கு ஸ்மிருதி மந்தனா 17, சஃபாலி வர்மா 19 என துவக்க வீராங்கனைகள் ஆரம்பத்திலேயே குறைந்த ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். ஆனாலும் மிடில் ஆர்டரில் இங்கிலாந்துக்கு சவாலை கொடுத்து மிகச் சிறப்பாக விளையாடிய அறிமுக வீராங்கனை சுபாஷ் சதீஷ் அரை சதம் கடந்து 69 ரன்களும் நட்சத்திர வீராங்கனை ஜெமிமா ரோட்ரிகஸ் 68 ரன்களும் எடுத்தனர்.

- Advertisement -

இன்னுமா திருத்தல:
அந்த நிலைமையில் வந்த கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர் 49 ரன்களில் அவுட்டானார். ஆனால் அவரைத் தொடர்ந்து மீண்டும் இங்கிலாந்துக்கு சவாலை கொடுத்த யாஸ்திகா பாட்டியா அரை சதமடித்து 66 ரன்களும் தீப்தி சர்மா 60* ரன்களும் ஸ்னே ராணா 30 ரன்களும் குவித்து இந்தியா பெரிய ரன்கள் குவிக்க உதவினர். இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக லாரன் பெல் 2 விக்கெட்டுகள் எடுத்தார்.

முன்னதாக இப்போட்டியில் இந்திய கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர் சிறப்பாக விளையாடி 49 ரன்கள் எடுத்திருந்த போது ஒரு பந்தை எதிர்கொண்டு சிங்கிள் எடுக்க ஓடினார். அப்போது பந்தை பிடித்த இங்கிலாந்து ஃபீல்டர் ஸ்டம்ப்பை அடித்ததால் பாதியிலேயே திரும்பிய ஹர்மன்பிரீத் மீண்டும் வெள்ளை கோட்டுக்கு வந்தார். இருப்பினும் அதன் பின் ஸ்டம்ப் மீது பட்ட பந்து வேறு திசைக்கு சென்றதால் ஹர்மன்பிரீத் சிங்கிள் எடுத்து தம்முடைய அரை சதத்தை கடந்தார்.

- Advertisement -

அப்போது வழக்கம் போல இதர இந்திய வீராங்கனைகள் அவருக்கு கைதட்டி பாராட்டு தெரிவித்த நிலையில் ஸ்டம்ப் மீது பட்ட பந்தால் ரன் அவுட்டாக வாய்ப்பிருக்கும் என்று கருதிய இங்கிலாந்து வீராங்கனைகள் நடுவரை நாடினார்கள். அதை சோதித்த போது இங்கிலாந்து ஃபீல்டர் துல்லியமாக அடிக்க மாட்டார் என்று அஜாக்கிரதையாக ஓடிய ஹர்மன்ப்ரீத் வெள்ளைக்கோட்டை தொடுவதற்குள் பந்து ஸ்டம்ப் மீது பட்டது தெளிவாகத் தெரிந்தது.

இதையும் படிங்க: 410 ரன்ஸ்.. இங்கிலாந்தை புரட்டி எடுத்து.. 88 வருடம் கழித்து வரலாற்று சாதனை படைத்த இந்திய மகளிரணி

அதனால் நடுவர் அவுட் கொடுத்ததால் ஹர்மன்பிரித் ஏமாற்றத்துடன் அரை சதத்தை உண்மையாக தொட முடியாமல் 49 ரன்களுடன் பெவிலியன் திரும்பினார். அதை விட 2022 காமன்வெல்த் போட்டிகளின் இறுதிப்போட்டியில் கிட்டத்தட்ட இதே போல அஜாக்கிரதையாக ஓடிய ஹர்மன்ப்ரீத் ரன் அவுட்டானது இந்தியாவின் தங்கப் பதக்கத்தை ஆஸ்திரேலியாவுக்கு தாரை வார்த்தது. அந்த தருணத்தை தற்போது சுட்டிக்காட்டும் ரசிகர்கள் தங்கத்தை பறிகொடுத்தும் இப்படி அஜாக்கிரதையாக ஓடுவதில் இன்னும் முன்னேறவில்லையா? என ஹர்மன்ப்ரீத்தை சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகிறார்கள்.

Advertisement