
இங்கிலாந்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் இந்தியா பங்கேற்று வரும் 3 போட்டிகள் ஒருநாள் தொடர் ஜூலை 17-ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. இந்த சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு வெஸ்ட் இண்டீசுக்கு செல்லும் இந்தியா அங்கு 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகளில் பங்கேற்கிறது. அதில் ஜூலை 22, 24, 27 ஆகிய தேதிகளில் நடைபெறும் ஒருநாள் தொடரில் கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலிக்கு போன்றோருக்கு ஓய்வளிக்கப்பட்டு ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. அந்த நிலைமையில் அடுத்ததாக நடைபெறும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கழற்றிவிடப்பட்ட சாம்சன்:
ரோஹித் சர்மா கேப்டனாக செயல்படும் அந்த தொடரில் விராட் கோலியை, ஜஸ்பிரித் பும்ரா, சஹால் ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த நவம்பருக்கு பின் 8 மாதங்கள் கழித்து தமிழக வீரர் அஷ்வின் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார். இவர்களுடன் சமீபத்திய டி20 தொடர்களில் அசத்திய ஹர்டிக் பாண்டியா, தினேஷ் கார்த்திக், இஷான் கிசான், சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, புவனேஸ்வர், குமார், ஆவேஷ் கான், அர்ஷ்தீப் சிங், அக்சார் படேல், ரவி பிஷ்னோய் போன்ற இளமையும் அனுபவம் கலந்த வீரர்களுக்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம் சிறப்பாக செயல்பட தவறிய ருதுராஜ், உம்ரான் மாலிக் போன்றவர்கள் நீக்கப்பட்டுள்ள நிலையில் சஞ்சு கேரளாவைச் சேர்ந்த நட்சத்திரம் சஞ்சு சாம்சன் சிறப்பாக செயல்பட்ட போதிலும் நீக்கப்பட்டுள்ளது ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக அமைந்துள்ளது. கடந்த 2015இல் டி20 கிரிக்கெட்டில் அறிமுகமான இவருக்கு 2-வது போட்டியில் விளையாடும் வாய்ப்பு 2020இல் தான் கிடைத்தது என்பதே மாபெரும் வேதனையாகும்.
தொடர்ச்சியற்ற வாய்ப்பு:
2020 ஜனவரியில் இலங்கைக்கு எதிரான 1 போட்டியில் வாய்ப்புப் பெற்ற அவர் பிப்ரவரியில் நியூசிலாந்துக்கு எதிரான 2 வாய்ப்பைப் பெற்று பின்னர் டிசம்பரில் ஆஸ்ட்ரேலியாவுக்கு எதிராக 3 போட்டிகளில் வாய்ப்பு பெற்றார். அந்த 6 போட்டிகளில் அரைசதம் கூட அடிக்கவில்லை என்பதற்காக கழற்றிவிடப்பட்ட அவர் ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டதால் மீண்டும் கடந்த 2021 ஜூலையிலும் 2022 பிப்ரவரியிலும் இலங்கைக்கு எதிராக நடந்த 3 மற்றும் 2 போட்டிகளில் வாய்ப்பு பெற்றார். இருப்பினும் அந்த வாய்ப்புகளில் அவர் அரை சதமடிக்கவில்லை என்பது ஒப்புக்கொள்ள வேண்டிய விஷயம்.
ஆனால் அந்த 12 வாய்ப்புகளும் தொடர்ச்சியாக கொடுக்கப்படவில்லை 5 வருடத்திற்கு ஒரு முறை 2 வருடத்திற்கு ஒரு முறை 6 மாதத்திற்கு ஒரு முறை என தூக்கி எறியும் குப்பைக்கு போன்ற பரிதாபப்பட்டு கொடுக்கப்பட்ட வாய்ப்பாகும். ஏனெனில் உலகத்தரமான வீரர்கள் கூட ஆரம்பத்தில் தடுமாறுவது சகஜமானது என்பதால் அவர்களுக்கு தொடர்ச்சியான ஆதரவையும் வாய்ப்பையும் வழங்கினால் தான் அவரால் சிறப்பாக செயல்பட முடியும் என்பதற்கு சச்சின் டெண்டுல்கரையே சான்றாக பார்த்துள்ளோம்.
மீண்டும் அநீதி:
அந்த நிலைமையில் ஐபிஎல் 2022 தொடரில் ராஜஸ்தானின் கேப்டனாகவும் பேட்ஸ்மேனாகவும் மிகவும் அபாரமாக செயல்பட்டு ஃபைனல் வரை அழைத்துச் சென்ற அவரை தென்னாப்பிரிக்க 5 டி20 தொடரில் தேர்வு செய்யாததால் வாங்கிக் கட்டிக் கொண்ட தேர்வுக்குழு பின்னர் நடந்த அயர்லாந்து டி20 தொடரில் வாய்ப்பளித்தது. அதிலும் முதல் போட்டியில் வாய்ப்பு கிடைக்காத சஞ்சு சாம்சன் ஒருவழியாக கிடைத்த 2-வது போட்டியில் தீபக் ஹூடாவுடன் 176 ரன்கள் வரலாற்றுச் சாதனை பார்ட்னர்ஷிப் அமைத்து 77 ரன்கள் குவித்து தனது முதல் அரை சதத்தை அடித்தார்.
அதனால் இனிமேல் தொடர்ச்சியான வாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு அடுத்ததாக இங்கிலாந்து மண்ணில் நடந்த 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் முதல் போட்டியில் வாய்ப்பை கொடுத்து கடைசி 2 போட்டிகளில் விராட் கோலி போன்ற சீனியர்கள் வருகிறார்கள் என்பதற்காக மீண்டும் அவரை தேர்வு குழு கழற்றி விட்டது. சரி பரவாயில்லை அந்த முதல் போட்டியிலாவது விளையாடுவார் என்று பார்த்தால் அதிலும் அவருக்கு அணி நிர்வாகம் 11 பேர் கொண்ட அணியில் வாய்ப்பளிக்கவில்லை.
இப்படிப்பட்ட நிலையில் வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடரில் விராட் கோலி ஓய்வெடுக்கும் நிலையில் அவருக்கு வாய்ப்புக் கிடைக்காது ரசிகர்களை கொந்தளிக்க வைத்துள்ளது. அதுவும் டி20 போட்டிகளில் தொடர்ச்சியாக சொதப்பி வரும் ரிஷப் பண்ட் மற்றும் ஷார்ட் பிட்ச் பந்துகளில் திணறும் ஷ்ரேயஸ் ஐயர் ஆகியோருக்கு மீண்டும் வாய்ப்பளித்துள்ள தேர்வுக்குழு கடைசியாக அரைசதம் அடித்து 77 ரன்கள் குவித்து அசத்திய சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பளிக்காமல் அநீதியை இழைத்துள்ளது.
இதையும் படிங்க : இப்படி ஒரு டேலன்ட்டான வீரர் கிடைப்பதெல்லாம் ரொம்ப கஷ்டம் – இந்திய வீரரை பாராட்டிய ரஷீத் லத்தீப்
கடைசியாக 6 டி20 போட்டிகளில் ரிஷப் பண்ட் 56 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார் ஆனால் சஞ்சு சாம்சன் ஒரே போட்டியில் 77 ரன்கள் எடுத்துள்ளார். 2019க்கு பின் வேகப்பந்து வீச்சுக்கு எதிராக 31.13 சராசரியும் 147.50 ஸ்ட்ரைக் ரேட் கொண்டுள்ள அவர் சுழல் பந்து வீச்சுக்கு எதிராக 29.50 சராசரியும் 143.77 ஸ்ட்ரைக் ரேட்டும் கொண்டுள்ளார். இவ்வளவு சிறப்பாக செயல்படும் அவர் ஒருவேளை தென் இந்தியாவைச் சேர்ந்தவர் என்பதால் வாய்ப்பு கிடைக்கவில்லையா என்பதே ரசிகர்களின் கடைசி கேள்வியாக எழுகிறது.