இதெல்லாம் நியாயமா? அவங்கள அவமானப்படுத்தாதீங்க – ஆசிய கவுன்சில் மீது ரசிகர்கள் கொந்தளிப்பு, காரணம் என்ன

Advertisement

விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் லீக் சுற்றும் முடிந்து ஃபைனலில் விளையாட போகும் கடைசி 2 அணிகளை தீர்மானிக்கும் சூப்பர் 4 சுற்று துவங்கியுள்ளது. அந்த சுற்றின் முதல் போட்டியில் வங்கதேசத்தை எளிதாக தோற்கடித்த பாகிஸ்தான் அடுத்ததாக வரும் செப்டம்பர் 10ஆம் தேதி இலங்கையின் கொழும்பு நகரில் பரம எதிரி இந்தியாவை எதிர்கொள்கிறது. இருப்பினும் இலங்கையின் கண்டி நகரில் நடைபெற்ற லீக் சுற்று போட்டிகள் மழையால் பெரிதளவு பாதிக்கப்பட்ட நிலையில் எஞ்சிய 5 சூப்பர் 4 போட்டிகள் நடைபெற உள்ள கொழும்பு நகரிலும் கடந்த சில தினங்களாகவே கனத்த மழை பெய்தது.

அத்துடன் அடுத்த ஒரு வாரத்திற்கு கொழும்பு நகரில் இடியுடன் 70 – 90% மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக அங்குள்ள வானிலை மையம் தெரிவிப்பதால் ஆர் பிரேமதாசா மைதானத்தில் திட்டமிட்டபடி எஞ்சிய 5 சூப்பர் 4 போட்டிகளும் நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அந்த நிலையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய லீக் போட்டி ஏற்கனவே மழையால் ரத்து செய்யப்பட்ட நிலையில் சூப்பர் 4 போட்டியும் ரத்து செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் உருவானது.

- Advertisement -

ரசிகர்கள் கொந்தளிப்பு:
ஆனால் ஆசிய கண்டத்தின் டாப் 2 தரமான அணிகளாக இருக்கும் அவ்விரு அணிகள் மோதும் போட்டி மேலும் மழையால் ரத்து செய்யப்பட்டால் ரசிகர்கள் சந்திக்கும் ஏமாற்றத்தை விட அதை ஒளிபரப்பும் நிறுவனங்களுக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதனால் எப்படியாவது அந்த போட்டியை நடத்தியாக வேண்டும் என்று ஒளிபரப்பு நிறுவனங்கள் அழுத்தம் கொடுத்ததால் இந்தியா – பாகிஸ்தான் மோதும் போட்டிக்கு ரிசர்வ் நாள் கடைபிடிக்கப்படும் என்று ஆசிய கவுன்சில் அறிவித்துள்ளது.

அதாவது செப்டம்பர் 10ஆம் தேதி மழை வந்தால் அதற்கடுத்த நாள் நின்ற இடத்திலிருந்து மீண்டும் போட்டி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் அதே கொழும்பு மைதானத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு மழை பெய்வதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கும் நிலையில் இந்தியா – இலங்கை, இந்தியா – வங்கதேசம், வங்கதேசம் – இலங்கை, இலங்கை – பாகிஸ்தான் ஆகிய போட்டிகளுக்கு ரிசர்வ் நாள் அறிவிக்கப்படவில்லை.

- Advertisement -

ஏனெனில் இந்தியா – பாகிஸ்தான் மோதும் போட்டியில் இருந்து தான் அதிக வருமானம் கிடைப்பதால் அதற்கு மட்டும் ஆசிய கவுன்சில் ரிசர்வ் நாளை ஒதுக்கியுள்ளது. ஆனால் அதற்காக ஆசிய கவுன்சில் ஒருதலைபட்சமாக இலங்கை மற்றும் வங்கதேச அணிகள் மோதும் போட்டிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் புறக்கணித்து அவமானம் செய்துள்ளதாக நிறைய ரசிகர்கள் சமூக வலைதளங்களில் எதிர்ப்பை வெளிப்படுத்துகின்றனர்.

இதையும் படிங்க: இதெல்லாம் நியாயமா? அவங்கள அவமானப்படுத்தாதீங்க – ஆசிய கவுன்சில் மீது ரசிகர்கள் கொந்தளிப்பு, காரணம் என்ன

அதிலும் நடப்பு சாம்பியனாக இருக்கும் தங்களுக்கு எந்த மரியாதையும் தரவில்லை என்று இலங்கை ரசிகர்கள் கோபத்தை வெளிப்படுத்துகின்றனர். அதே போல நாங்கள் எல்லாம் ஆசிய கண்டத்தில் ஐசிசி அங்கீகாரத்தைப் பெற்று சர்வதேச கிரிக்கெட்டை விளையாடும் அணியாக தெரியவில்லையா? என்று ஆசிய கவுன்சிலுக்கு வங்கதேச ரசிகர்களும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். அந்த சலசலப்புக்கு மத்தியில் இந்தியா – பாகிஸ்தான் போட்டிக்கு ஒதுக்கப்பட்டுள்ள ரிசர்வ் நாளான செப்டம்பர் 11ஆம் தேதியும் 90% மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement