தன்னை அவமானப்படுத்திய முன்னாள் அணியை பழி வாங்கிய நட்சத்திர வீரர் ! பாராட்டும் ரசிகர்கள்

Kuldeep Yadhav DC
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடரில் மார்ச் 10-ஆம் தேதியான நேற்று மதியம் 3.30 மணிக்கு நடைபெற்ற 19-ஆவது லீக் போட்டியில் டெல்லி மற்றும் கொல்கத்தா ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ப்ராபோர்ன் மைதானத்தில் நடைபெற்ற அந்த போட்டியில் கொல்கத்தாவை பதம்பார்த்த டெல்லி 44 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது அசத்தியது. அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் அற்புதமாக பேட்டிங் செய்து 215/5 ரன்கள் குவித்தது.

அந்த அணிக்கு அதிகபட்சமாக பவர் பிளே ஓவர்களில் பட்டையை கிளப்பிய தொடக்க வீரர்கள் டேவிட் வார்னர் 61 (45) ரன்களும் பிரிதிவி ஷா 51 (29) ரன்களும் விளாசினர். கடைசி நேரத்தில் அக்ஷர் பட்டேல் 22* (14) ஷார்துல் தாகூர் 29* (11) ரன்களும் எடுத்து சூப்பரான பினிஷிங் கொடுத்தார்கள். கொல்கத்தா சார்பில் அதிகபட்சமாக சுனில் நரைன் 2 விக்கெட்டுகளை சாய்த்தார்.

- Advertisement -

டெல்லி நிம்மதி:
அதை தொடர்ந்து 216 என்ற பெரிய இலக்கை துரத்திய கொல்கத்தாவுக்கு தொடக்க வீரர்கள் வெங்கடேஷ் ஐயர் 18(8) அஜிங்கிய ரஹானே 8 (14) என சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். இதனால் ஆரம்பத்திலேயே சரிந்த தனது அணியை அடுத்து களமிறங்கிய கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் அதிரடியாக 33 பந்துகளில் 5 பவுண்டரி மற்றும் 2 சிக்சர் உட்பட அரைசதம் கடந்து 54 ரன்கள் எடுத்து காப்பாற்ற முயற்சித்து ஆட்டமிழந்தார். அவருக்கு உறுதுணையாக இருந்த நிதிஷ் ராணாவும் 30 (20) ரன்களில் நடையை கட்டினார்.

அதை தொடர்ந்து டெல்லியின் அபாரமான பந்து வீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்து வந்த ரசல் போன்ற முக்கிய வீரர்கள் பெரிய ரன்கள் எடுக்க தவறியதால் 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த கொல்கத்தா வெறும் 171 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி பரிதாபமாக தோற்றது. இந்த வெற்றியால் கடைசி 2 போட்டிகளில் அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்து வந்த ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி இந்த வருடத்தின் 2-வது வெற்றியை பதிவு செய்து நிம்மதி அடைந்துள்ளது.

- Advertisement -

அசத்திய குல்தீப் யாதவ்:
இந்த வெற்றியில் 4 விக்கெட்டுகள் எடுத்து முக்கிய பங்காற்றிய நட்சத்திர வீரர் குல்தீப் யாதவ் ஆட்டநாயகன் விருதை வென்று அனைவரின் பாராட்டுகளைப் பெற்று வருகிறார். ஏனெனில் கடந்த 2018, 2019 காலகட்டங்களில் 3 வகையான இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளராக வலம் வந்த அவர் அதே சமயத்தில் ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் முக்கிய பவுலராக செயல்பட்டு வந்தார். அந்த நிலையில் கடந்த 2019-ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த ஐசிசி உலகக் கோப்பையில் இந்திய அணிக்காக விளையாடிய அவர் அதன்பின் சற்று மோசமாக பந்துவீச தொடங்கியதால் இந்திய அணியில் இருந்து கழற்றி விடப்பட்டார்.

அதே காரணத்தால் 11 பேர் அணியில் வாய்ப்பளிக்காத கொல்கத்தா அணி நிர்வாகம் அவரை கடந்த 2 வருடங்களாக பெஞ்சில் அமர வைத்தது. அதனால் வாய்ப்பு கிடைக்காமல் பழைய ஃபார்முக்கு திரும்ப முடியாமல் திண்டாடிக் கொண்டிருந்த அவரை அந்த அணி நிர்வாகம் கடந்த வருடம் வெறும் 2 போட்டிகளில் மட்டும் வாய்ப்பளித்தது. அதைவிட சிறப்பாக செயல்பட தவறியதால் அவரை அணிக்குள் ஒரு வேலைக்காரனை போல் நடத்தியதாக அவரின் பயிற்சியாளர் கபில் பாண்டே சமீபத்தில் தெரிவித்தது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்தது.

- Advertisement -

பழி வாங்கிய குல்தீப்:
தொடர்ந்து பெஞ்சில் அமர வைத்து வாய்ப்பு வழங்க மறுத்ததால் 5 கோடிகளுக்கு மேல் ஏலத்தில் செல்லவேண்டிய அவர் 2 கோடிக்கு மட்டுமே ஏலத்தில் வாங்கப்பட்டார் என கொல்கத்தா அணி நிர்வாகம் மீது கபில் பாண்டே குற்றம் சாட்டியிருந்தார். அப்படிப்பட்ட நிலையில் அவர் மீது நம்பிக்கை வைத்த டெல்லி அணி நிர்வாகம் 2 கோடி என்ற நல்ல தொகைக்கு வாங்கியதுடன் விளையாடும் 11 பேர் கொண்ட அணியில் நேரடியாக வாய்ப்பளித்தது. அதை கச்சிதமாக பயன்படுத்திய அவர் இந்த வருடத்தின் முதல் போட்டியில் இருந்தே மிகச் சிறப்பாக செயல்பட்டு இதுவரை பங்கேற்ற 4 போட்டிகளில் 10 விக்கெட்டுகளை சாய்த்து தன் மீது டெல்லி வைத்த நம்பிக்கைக்கு பாத்திரமாக செயல்பட்டு வருகிறார்.

அத்துடன் இதுவரை 10 விக்கெட்டுகளை எடுத்துள்ள அவர் அதிக விக்கெட்டுகள் எடுத்த பந்துவீச்சாளர்களுக்கான பட்டியலில் 2-வது இடத்தை பிடித்து அசத்தியுள்ளார். அதிலும் நேற்றைய போட்டியில் மோசமான தருணத்தில் தன்னை கேவலமாக நடத்திய தனது முன்னாள் அணியான கொல்கத்தாவுக்கு எதிராக விஸ்வரூபம் எடுத்த அவர் ஒரே போட்டியில் 4 விக்கெட்டுகளை எடுத்து தனது உண்மையான பழைய பார்முக்கு திரும்பினார்.

- Advertisement -

மேலும் நேற்றைய போட்டியில் அவர் ஒவ்வொரு விக்கெட் எடுத்த போதெல்லாம் “நான் இன்னும் முடிந்து போகவில்லை இன்னும் என்னிடம் திறமை உள்ளது” என்று கொல்கத்தாவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஆக்ரோஷமாக கொண்டாடினார்.

இதையும் படிங்க : கடைசி பந்துவரை த்ரில். ஆஸி வீரருக்கு தண்ணி காட்டி ராஜஸ்தானை வெற்றிபெற வைத்த இளம் இந்திய வீரர்

மொத்தத்தில் பார்ம்மை இழந்த காரணத்தால் எந்த அணி தன்னை கழற்றி விட்டதோ அதே அணிக்கு எதிராக அபாரமாக செயல்பட்டு பார்முக்கு திரும்பி அந்த அணிக்கு பதிலடி கொடுத்த குல்தீப் யாதவை பார்த்த ரசிகர்கள் அவரைப் பாராட்டி வருவதுடன் இதேபோல் மேலும் செயல்பட்டு இந்திய அணிக்குள் திரும்ப வேண்டுமென வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement