அந்த தங்கத்த டி20 உ.கோ அணியில் பார்சல் பண்ணுங்க – வித்யாச சாதனை படைத்து வரும் இளம் இந்திய வீரர்

chahal deepak hooda IND vs IRE
- Advertisement -

கடந்த வருடம் துபாயில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் விராட் கோலி தலைமையில் பரம எதிரியான பாகிஸ்தானிடம் வரலாற்று தோல்வியை சந்தித்து லீக் சுற்றுடன் நடையை கட்டிய இந்தியா இம்முறை ஆஸ்திரேலியாவில் நடைபெறும் உலகக்கோப்பையில் 5 ஐபிஎல் கோப்பையை வென்ற கேப்டன்ஷிப் அனுபவம் கொண்ட ரோகித் சர்மா தலைமையில் களமிறங்க தயாராகி வருகிறது. அவருக்கு உறுதுணையாக ஜாம்பவான் ராகுல் டிராவிட் பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட நிலையில் கடந்த நவம்பர் முதலே இந்த கூட்டணி தரமான வீரர்களை கண்டறியும் வேலைகளில் ஈடுபட்டு வருகிறது.

மேலும் கடந்த டி20 உலகக்கோப்பைக்கு பின் நியூசிலாந்து, இலங்கை, வெஸ்ட் இண்டீஸ், தென்னாபிரிக்கா, அயர்லாந்து, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகளுக்கு எதிராக களமிறங்கிய இந்தியா அந்த அத்தனை தொடர்களிலும் தோல்வியே அடையாமல் வெற்றிநடை போட்டு வருகிறது. மேற்கூறிய தொடர்களில் நிறைய இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டதில் உம்ரான் மாலிக் போன்ற வீரர்கள் சுமாராக செயல்பட்டு ஏமாற்றிய நிலையில் அர்ஷிதீப் சிங் போன்ற வீரர்கள் தங்களுக்கென்று நிலையான இடத்தைப் பிடிக்கும் அளவுக்கு மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள்.

- Advertisement -

தீபக் ஹூடா:
அந்த வரிசையில் கலக்கி வருபவர் தான் இளம் வீரர் தீபக் ஹூடா. பரோடாவை சேர்ந்த இவர் கடந்த வருடம் சயீத் முஷ்டாக் அலி கோப்பை தொடரில் பங்கேற்பதற்காக வலை பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது கேப்டன் க்ருனால் பாண்டியா தம்மை கடுமையான சொற்களால் திட்டியதாக புகார் எழுப்பியது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. போதாகுறைக்கு அதை விசாரிக்காமல் ஒருதலைப்பட்சமாக செயல்பட்ட பரோடா வாரியம் வாழ்நாள் தடை விதித்ததால் பெரிய பின்னடைவை சந்தித்த இவர் உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாட வேறு வழியின்றி ராஜஸ்தானுக்கு குடிபெயர்ந்தார்.

அங்கு முன்னாள் இந்திய வீரர் இர்பான் பதான் ஆதரவுடன் உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாட தொடங்கி அசத்திய அவர் கடந்த பிப்ரவரியில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக சொந்த மண்ணில் நடந்த ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் அறிமுகமாக களமிறங்கும் வாய்ப்பை கலங்கிய கண்களுடன் பெற்றார். அந்த வாய்ப்பில் பந்துவீச்சிலும் பேட்டிங்கிலும் அசத்திய அவர் ஐபிஎல் 2022 தொடரில் லக்னோ அணிக்காக அதே க்ருனால் பாண்டியாவுடன் இணைந்து விளையாடியது ஆச்சரியமாக அமைந்தது. அந்த தொடரில் 400க்கும் மேற்பட்ட ரன்களை குவித்து அசத்தலாக செயல்பட்ட போதிலும் அதன்பின் நடந்த தென் ஆப்ரிக்க தொடரில் தேர்வு செய்யப்படாத அவர் அதன்பின் நடந்த அயர்லாந்து தொடரில் தேர்வு செய்யப்பட்டார்.

- Advertisement -

நம்பிக்கை நட்சத்திரம்:
அதில் முதல் போட்டியில் ருதுராஜ் காயமடைந்ததால் தொடக்க வீரராக களமிறங்கும் வாய்ப்பை பெற்று அதிரடியாக 47* (29) ரன்களை விளாசிய அவர் 2வது போட்டியில் சஞ்சு சாம்சனுடன் 176 ரன்கள் வரலாற்றுச் சாதனை பார்ட்னர்ஷிப் அமைத்து சதமடித்து 104 (57) ரன்கள் விளாசி 2 – 0 (2) என்ற கணக்கில் இந்தியா தொடரை வெல்ல முக்கிய பங்காற்றி தொடர் நாயகன் விருதை வென்றார். அதன்பின் நடந்த இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் தொடர்களிலும் கிடைத்த வாய்ப்புகளில் அசத்தலாக செயல்பட்ட அவர் பந்து வீச்சிலும் சஹால் போன்ற முதன்மை பவுலர்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில் சிறப்பாக பந்துவீசி விக்கெட்டுகளை எடுப்பவராக தன்னை அடையாளப் படுத்தியுள்ளார்.

மொத்தத்தில் அடுத்த தலைமுறை தரமான சுழல் பந்துவீச்சு ஆல்-ரவுண்டராக தன்னை அறிமுகப்படுத்தியுள்ள இவர் சிறப்பாக செயல்பட்டாலும் விராட் கோலி போன்ற சீனியர்கள் இருப்பதால் ஆசிய கோப்பை மற்றும் டி20 உலகக்கோப்பையில் பெஞ்சில் அமரும் வாய்ப்பை மட்டுமே பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் நிறைய முன்னாள் வீரர்கள் அவர் இந்திய அணியில் இடம் பெற வேண்டும் என்று ஆதரவு தெரிவிக்கின்றனர்.

- Advertisement -

உலகசாதனை:
அதைவிட இதுவரை இந்தியாவுக்காக அவர் களமிறங்கி விளையாடிய போட்டிகளில் இந்தியா தோற்றதே கிடையாது என்ற புள்ளிவிவரம் அவருக்கு மேலும் ஆதரவை பெருக்கும் வகையில் அமைகிறது. ஆம் கடந்த பிப்ரவரியில் அறிமுகமான தீபக் ஹூடா இதுவரை 14 போட்டிகளில் இந்தியாவுக்கு விளையாடியுள்ளார். அந்த அனைத்து போட்டிகளிலும் இந்தியா வெற்றிவாகை சூடியுள்ளது.

சொல்லப்போனால் உலக அளவில் முழு அந்தஸ்து பெற்ற கிரிக்கெட் அணிகளில் அறிமுகமானது முதல் தொடர்ச்சியாக அதிக வெற்றிகளை பதிவு செய்த வீரர் என்ற வித்தியாசமான சாதனையையும் அவர் படைத்துள்ளார். அந்தப் பட்டியல்:
1. சத்விக் நடிகோட்டா (ருமேனியா) : 15
2. தீபக் ஹூடா (இந்தியா) : 14*
3. டேவிட் மில்லர் (தென் ஆப்பிரிக்கா) : 13
4. சாந்தன்னு வாசிஸ்ட் (ருமேனியா) : 13

இதையும் படிங்க : பென் ஸ்டோக்ஸ் நியூஸிலாந்துக்கு விளையாட விரும்பினார் ஆனால் – ஆரம்பக்கால பின்னணியை பகிரும் முன்னாள் வீரர்

இதை பார்க்கும் இந்திய ரசிகர்கள் டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் இவர் இந்தியாவுக்கு வெற்றியைப் பெற்றுக் கொடுக்கும் அதிர்ஷ்ட தேவதையாக இருப்பார் என்பதால் அந்த தங்கத்தை அப்படியே பார்சல் செய்யுமாறு சமூக வலைதளங்களில் கோரிக்கை வைக்கின்றனர்.

Advertisement