லீக்கான பாகிஸ்தானுக்கு எதிரான இந்திய அணியின் பிளேயிங் 11 பட்டியல் – ரசிகர்கள் சாதுர்ய கண்டுபிடிப்பு

INDIA IND vs ENG Rohit Sharma
- Advertisement -

ஆசிய கிரிக்கெட் ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள 2022 ஆசிய கோப்பை ஆகஸ்ட் 27ஆம் தேதியான இன்று கோலாகலமாக துவங்கியது. 20 ஓவர் தொடராக நடைபெறும் இந்த கோப்பையை வெல்வதற்கு 7 கோப்பைகளை வென்று வெற்றிகரமான அணியாகவும் நடப்பு சாம்பியனாகவும் திகழும் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் மற்றும் ஹாங்காங் ஆகிய அணிகள் மோத உள்ளன. இப்படி 6 அணிகள் மோதினாலும் தற்போதைய நிலைமையில் ஆசிய கண்டத்தின் பரம எதிரிகளாகவும் வலுவான அணிகளாகும் திகழும் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதும் போட்டிக்கு தான் உலக அளவில் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

ஏனெனில் எல்லைப் பிரச்சனை காரணமாக 2012க்குப்பின் இருதரப்பு தொடர்களில் மோதுவதை தவிர்த்துள்ள இவ்விரு நாடுகளும் இது போன்ற ஆசிய மற்றும் உலக கோப்பைகளில் மட்டும் மோதி வருகின்றன. மேலும் கடைசியாக இதே துபாயில் இவ்விரு அணிகளும் மோதிய போது உலகக் கோப்பை வரலாற்றில் முதல் முறையாக இந்தியாவை தோற்கடித்த பாகிஸ்தான் சரித்திர வெற்றியை சுவைத்தது. அதனால் தலைக்குனிவுக்கு உள்ளான இந்தியா இம்முறை ரோகித் சர்மா தலைமையில் பதிலடி கொடுக்க களமிறங்குகிறது.

- Advertisement -

உத்தேச அணி:
கடந்த டி20 உலகக் கோப்பைக்கு பின் முழுநேர கேப்டனாக பொறுப்பேற்ற ரோகித் சர்மா தலைமையில் பங்கேற்ற அத்தனை டி20 தொடர்களிலும் தோல்வியடையாமல் வெற்றி நடை போட்டு வரும் இந்தியா இம்முறை நிச்சயம் வெற்றி பெறும் என இந்திய ரசிகர்கள் நம்புகின்றனர். மொத்தத்தில் அனல் பறக்கப் போகும் இந்த போட்டியில் களமிறங்கி வெற்றி வாகை சூடுவதற்கு தகுதியான 11 பேர் கொண்ட உத்தேச இந்திய அணியை நிறைய முன்னாள் வீரர்களும் ரசிகர்களும் தேர்வு செய்து வருகிறார்கள்.

அதில் தினேஷ் கார்த்திக், அஷ்வின் போன்ற தமிழக வீரர்கள் புறக்கணிக்கப் படுவதையும் பார்க்க முடிகிறது. அதனால் 11 பேர் கொண்ட இந்திய அணியில் யார் யார் விளையாடப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருமடங்கு ஏற்பட்டுள்ள நிலையில் கடந்த வருடம் போட்டித் துவங்குவதற்கு முன்பாகவே 11 பேர் கொண்ட அணியை அறிவித்த பாகிஸ்தான் களத்திலும் அட்டகாசமாக செயல்பட்டு வெற்றி கண்டது. மறுபுறம் டாஸ் வீசுவதற்கு முன்பாக அணியை அறிவித்த இந்தியா சுமாராக செயல்பட்டு தோல்வியடைந்தது.

- Advertisement -

லீக்கான அணி:
அதனால் இம்முறை முன்கூட்டியே இந்திய அணியை அறிவிக்க வேண்டும் என்று முகமது கைஃப் போன்ற சில முன்னாள் வீரர்கள் கேட்டுக்கொண்டனர். அந்த நிலையில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் களமிறங்கும் 11 பேர் கொண்ட இந்திய அணி லீக்கானதை இந்திய ரசிகர்கள் தங்களது சாதுரியத்தால் தற்போது கண்டுபிடித்துள்ளனர். ஆம் இப்போட்டிக்காக துபாயில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வரும் இந்திய வீரர்களின் புகைப்படங்களை பிசிசிஐ தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில் நேற்று பதிவிட்டிருந்தது.

வழக்கமாக 4 – 5 புகைப்படங்கள் அல்லது பயிற்சியாளர்கள் உட்பட மொத்த இந்திய அணியும் இருக்கும் புகைப்படத்தை பதிவிடுவது தான் வழக்கமாகும். ஆனால் இந்த பதிவில் பாகிஸ்தானுக்கு எதிராக களமிறங்கும் 11 பேரையும் மறைமுகமாக பிசிசிஐ அறிவித்துள்ளது என்றே கூறலாம். ஏனெனில் மொத்தம் 10 படங்களை பதிவிட்டுள்ள பிசிசிஐ ஓப்பனிங், மிடில் ஆர்டர், ஆல்-ரவுண்டர்கள், சுழல் பந்துவீச்சாளர்கள், வேகப்பந்து வீச்சாளர்கள் என 11 பேரையும் மாற்றம் கூட செய்யாமல் வரிசையாக பதிவிட்டுள்ளது.

- Advertisement -

ரசிகர்களின் சாதூரியம்:
பிசிசிஐ வெளியிட்டுள்ள அந்த பதிவின் படி முதல் படத்தில் ரோகித் சர்மா மற்றும் கேஎல் ராகுல் இருப்பதால் அவர்கள் தொடக்க வீரர்கள் என்பது உறுதியாகியுள்ளது. 2, 3, 4 ஆகிய படங்களில் முறையே 3, 4, 5 ஆகிய இடங்களில் களமிறங்கக் கூடிய விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். அதேபோல் அடுத்தடுத்த படங்களில் முறையே ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக், புவனேஸ்வர் குமார், யுஸ்வென்ற சஹால், ஆவேஷ் கான், அரஷ்தீப் சிங் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.

இதை பார்த்த ரசிகர்கள் இதுதான் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடப்போகும் 11 பேர் இந்திய அணி என்று உறுதியாக சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள். மேலும் போட்டி நடைபெறும் துபாய் மைதானம் சுழலுக்கு பெரிய அளவில் சாதகமாக இருக்காது என்பதால் அஷ்வின் அல்லது ஜடேஜாவுக்கு பதில் சஹால் மட்டும் ஒற்றை சுழல் பந்து வீச்சாளராகவும் 4 வேகப்பந்து வீச்சாளர்களுடன் இந்தியா களமிறங்க முடிவெடுத்துள்ளதும் தெரிய வருகிறது.

இதையும் படிங்க : ஆசியக்கோப்பை : இந்திய அணி வீரர்களுக்கு ஸ்பெஷலான பல ஏற்பாடுகளை செய்துள்ள பி.சி.சி.ஐ – அடேங்கப்பா

ரசிகர்கள் கண்டுபிடித்துள்ள அணி இதோ: ரோகித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட் (கீப்பர்), ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக், புவனேஸ்வர் குமார், யுஸ்வேந்திர சஹால், ஆவேஷ் கான், அர்ஷிதீப் சிங்

Advertisement