அந்த சிரிப்ப பாத்து எவ்ளோ நாளாச்சு! காவ்யா ஹேப்பி அண்ணாச்சி – குதூகலிக்கும் ரசிகர்கள் (விவரம் இதோ)

Kavya
- Advertisement -

ஐபிஎல் 2022 கிரிக்கெட் தொடர் பல விருவிருப்பான தருணங்களுடன் 2வது வாரத்தைக் கடந்து வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. இதில் ஏப்ரல் 15-ஆம் தேதியான நேற்று நடைபெற்ற 25-வது லீக் போட்டியில் கொல்கத்தாவை பதம்பார்த்த ஹைதராபாத் 7 விக்கெட் வித்தியாசத்தில் அதிரடி வெற்றியை பெற்று அசத்தியது. மும்பையின் ப்ராபோர்ன் மைதானத்தில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 175/8 ரன்கள் குவித்தது. ஒரு கட்டத்தில் 31/3 என தவித்த அந்த அணிக்கு அதிகபட்சமாக நிதிஷ் ராணா 54 (36) ரன்களை அதிரடியாக விளாசினார்.

அவருடன் கடைசி நேரத்தில் பட்டையை கிளப்பிய அதிரடி வீரர் ஆண்ட்ரே ரசல் 49* (25) ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் சிறப்பான பினிஷிங் கொடுத்தார். ஐதராபாத் சார்பில் பந்துவீச்சில் மிரட்டிய தமிழக வீரர் நடராஜன் 3 விக்கெட்டுகளையும் உம்ரான் மாலிக் 2 விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.

- Advertisement -

முன்னேறும் ஹைதெராபாத்:
அதை தொடர்ந்து 176 என்ற இலக்கை துரத்திய ஹைதராபாத்துக்கு தொடக்க வீரர்கள் கேப்டன் வில்லியம்சன் 17 (16) அபிஷேக் சர்மா ஆகியோர் 3 (10) என சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றம் அளித்ததால் 39/2 என ஆரம்பத்திலேயே அந்த அணி தடுமாறியது. இருப்பினும் அடுத்த களமிறங்கிய இந்திய வீரர் ராகுல் திரிபாதி ஐடன் மார்க்ரம் உடன் இணைந்து 3-வது விக்கெட்டுக்கு 94 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து வெற்றியை உறுதி செய்தார். ஆரம்பம் முதலே பவுண்டரிகளை பறக்க விட்ட இந்த ஜோடியில் வெறும் 37 பந்துகளில் 4 பவுண்டரி மற்றும் 6 சிக்சர் உட்பட 71 ரன்கள் எடுத்து ராகுல் திரிபாதி அவுட்டானார்.

ஆனால் மறுபுறம் தொடர்ந்து சிறப்பாக பேட்டிங் செய்த ஐடன் மார்க்ரம் 36 பந்துகளில் 6 பவுண்டரி மற்றும் 4 சிக்சர் உட்பட 68* ரன்கள் விளாசி கடைசி வரை அவுட்டாகாமல் இருந்து அபார பினிஷிங் கொடுத்தார். அதன் காரணமாக 17.5 ஓவரிலேயே 176/3 ரன்களை எடுத்த ஹைதராபாத் இந்த வருடத்தின் 3-வது வெற்றியை பதிவு செய்தது. இந்த வெற்றிக்கு 71 ரன்கள் குவித்து முக்கிய பங்காற்றிய ராகுல் திரிபாதி ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

- Advertisement -

இந்த தோல்வியால் பங்கேற்ற 6 போட்டிகளில் 3 வெற்றி மற்றும் 3 தோல்விகளை பதிவு செய்துள்ள கொல்கத்தா புள்ளிப் பட்டியலில் 6-வது இடத்திற்கு சரிந்துள்ளது. மறுபுறம் இந்த வருடத்தின் முதல் வாரத்தில் பங்கேற்ற முதல் 2 போட்டிகளிலும் அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்து புள்ளிப் பட்டியலில் கடைசி இடமான 10-வது இடத்தில் திண்டாடிய ஹைதராபாத் அதன்பின் 2-வது வாரத்தில் கொதித்தெழுந்து சென்னை, குஜராத், கொல்கத்தா ஆகிய அணிகளுக்கு எதிராக அடுத்தடுத்த 3 போட்டிகளில் வெற்றிகளைப் பதிவு செய்து ஹாட்ரிக் வெற்றிகளுடன் 6 புள்ளிகளை பெற்று கடைசி இடத்திலிருந்து 7-வது இடத்திற்கு முன்னேற்றம் அடைந்துள்ளது.

காவ்யா ஹேப்பி அண்ணாச்சி:
இப்படி முதல் வாரத்தில் மண்ணை கவ்விய அந்த அணி 2-வது வாரத்தில் அபாரமாக செயல்பட்டு வெற்றி நடை போடுவது ஹைதராபாத் ரசிகர்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது. அதைவிட அந்த அணியின் உரிமையாளர்களில் ஒருவரான காவ்யா மாறன் முகத்தில் இந்த ஹாட்ரிக் வெற்றிகள் பிரகாசமான புன்னகையை கொண்டு வந்துள்ளது எதிரணி ரசிகர்களைக் கூட கவர்ந்துள்ளது.

- Advertisement -

ஏனெனில் தமிழகத்தின் சன் நெட்ஒர்க் கலாநிதி மாறனின் மகளான இவர் கடந்த சில வருடங்களாக ஹைதராபாத் அணியின் தலைமைப் பொறுப்பில் முக்கிய பங்காற்றி வருகிறார். அதிலும் ஹைதராபாத் பங்கேற்கும் அனைத்து போட்டிகளும் தவறாமல் மைதானத்துக்கு வந்து அட்டனன்ஸ் போட்டு வரும் இவர் சமீப காலங்களாக ரசிகர்களிடையே மிகவும் பிரபலம் அடைந்துள்ளார். அதன் காரணமாக அவரை பார்ப்பதற்காகவே ஹைதராபாத் விளையாடும் போட்டிகளை குறிப்பிட்ட சில எதிரணி ரசிகர்களும் பார்த்து வருகிறார்கள்.

ரசிகர்கள் குதூகலம்:
இருப்பினும் கடந்த வருடம் ஹைதெராபாத் அணி படுமோசமான தோல்விகளை சந்தித்த காரணத்தால் மைதானத்திற்கு வந்த அவர் ஒவ்வொரு போட்டியிலும் சோகமான முகத்துடன் காணப்பட்டார். இந்த வருடம் கூட முதல் 2 போட்டிகளில் அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்ததால் கவலையாக இருந்த அவர் தற்போது தனது அணி ஹாட்ரிக் வெற்றிகளை பதிவு செய்துள்ளதால் மீண்டும் மகிழ்ச்சி அடைந்து சிரிக்க தொடங்கியுள்ளார்.

இதையும் படிங்க : கொல்கத்தாவை சாய்த்த ஹைதராபாத் ஹாட்ரிக் வெற்றி ! மும்பையும், சென்னையும் பார்த்து திருந்துமா?

அதற்கு காரணம் கடந்த வருடம் படுமோசமாக செயல்பட்ட ஹைதராபாத் 14 போட்டிகளில் பங்கேற்று வெறும் 3 வெற்றிகளையும் 11 தோல்விகளையும் சந்தித்து கடைசிவரை புள்ளி பட்டியலில் கடைசி இடத்தை பிடித்தது. ஆனால் இந்த வருடம் இதுவரை பங்கேற்ற 5 போட்டிகளிலேயே 3 வெற்றிகளை பதிவு செய்து புள்ளி பட்டியலில் முன்னோக்கி வெற்றி நடை போட்டு வருகிறது. அதன் காரணமாக மகிழ்ச்சி அடைந்துள்ள அவரை பார்க்கும் போது நாங்களும் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம் என பல ரசிகர்கள் சமூக வலைதளங்களில் குதூகலமாக பதிவிட்டு வருகிறார்கள்.

Advertisement