கொல்கத்தாவை சாய்த்த ஹைதராபாத் ஹாட்ரிக் வெற்றி ! மும்பையும், சென்னையும் பார்த்து திருந்துமா?

SRH vs KKR
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடரில் ஏப்ரல் 15-ஆம் தேதி நடந்த 25-ஆவது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் மோதின. ப்ராபோர்ன் மைதானத்தில் நடைபெற்ற அப்போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை அடுத்து களமிறங்கிய கொல்கத்தாவுக்கு தொடக்க வீரர்கள் ஆரோன் பின்ச் 7 (5) ரன்களிலும் வெங்கடேஷ் ஐயர் 6 (7) ரன்களிலும் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தனர். அதைத் தொடர்ந்து களமிறங்கிய சுனில் நரேன் 6 (2) ரன்களில் அவுட்டானதால் 31/3 என்ற நிலையில் ஆரம்பத்திலேயே கொல்கத்தா திண்டாடியது.

அந்த சரிவை சரிசெய்ய களமிறங்கிய கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் பொறுப்புடன் 3 பவுண்டரி உட்பட 28 (25) ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க அடுத்து களமிறங்கிய இளம் வீரர் ஷெல்டன் ஜாக்சன் 7 ரன்களில் நடையை கட்டினார். இருப்பினும் மறுபுறம் சிறப்பாக பேட்டிங் செய்த நித்திஷ் ராணா 36 பந்துகளில் 6 பவுண்டரி 2 சிக்சருடன் 54 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

- Advertisement -

மிரட்டிய ரசல்:
இறுதியில் அந்த அணியின் அதிரடி மன்னன் ஆண்ட்ரே ரசல் கடைசி நேரத்தில் தனக்கே உரித்தான பாணியில் அதிரடி சரவெடியாக பேட்டிங் செய்து வெறும் 25 பந்துகளில் 4 பவுண்டரி மற்றும் 4 சிக்சர்கள் உட்பட 49* ரன்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் அதிரடியான பினிஷிங் கொடுத்தார். இதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழந்த கொல்கத்தா 175 ரன்கள் எடுத்தது. ஹைதராபாத் சார்பில் பந்துவீச்சில் மிரட்டிய தமிழக வீரர் நடராஜன் 3 விக்கெட்டுகளையும் உம்ரான் மாலிக் 2 விக்கெட்டுகளும் சாய்த்தனர்.

அதை தொடர்ந்து 176 என்ற இலக்கை துரத்திய ஹைதராபாத் அணிக்கு இளம் தொடக்க வீரர் அபிஷேக் சர்மா 3 (10) ரன்களில் நடையை கட்ட அவருடன் களமிறங்கிய கேப்டன் கேன் வில்லியம்சன் 17 (16) ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். அதனால் 39/2 என ஆரம்பத்திலேயே தடுமாறிய ஹைதராபாத்தை அடுத்து களமிறங்கிய ராகுல் திரிப்பாதி மற்றும் ஐடன் மார்க்ரம் ஆகியோர் இணைந்து பொறுப்புடன் விளையாடி வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றனர்.

- Advertisement -

ஹைதெராபாத் ஹாட்ரிக் வெற்றி:
ஆரம்பத்தில் நிதானத்தை கடைப் பிடித்த இந்த ஜோடி அதன்பின் கொஞ்சம் கொஞ்சமாக அதிரடியை கையிலெடுத்து சிறப்பான கொல்கத்தா பவுலர்களை புரட்டி எடுத்தது. குறிப்பாக இந்திய வீரர் ராகுல் திரிப்பாதி மட்டும் முதல் பந்திலிருந்தே பவுண்டரிகளையும் சிக்சர்களையும் பட்டாசாக பறக்கவிட்டு 3-வது விக்கெட்டுக்கு 94 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து ஹைதராபாத் அணியின் வெற்றியை உறுதிசெய்த நிலையில் 37 பந்துகளில் 4 பவுண்டரி மற்றும் 6 சிக்சர் உட்பட 71 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

அவருடன் அதிரடியாக விளையாடிய ஐடன் மார்க்ரம் தனது பங்கிற்கு வெறும் 36 பந்துகளில் 6 பவுண்டரி 4 சிக்சர் உட்பட 68* ரன்கள் எடுத்து கடைசி வரை அவுட்டாகாமல் பினிஷிங் கொடுத்ததால் 17.5 ஓவர்களிலேயே 176/3 ரன்களை எடுத்த ஹைதராபாத் 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. கொல்கத்தா சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக ரசல் 2 விக்கெட்டுகளை எடுத்தார். இந்த வெற்றிக்கு 71 ரன்கள் எடுத்து முக்கிய பங்காற்றிய ராகுல் திரிப்பாதி ஆட்டநாயகன் விருதை வென்றார்.

- Advertisement -

இந்த வெற்றியால் இதுவரை பங்கேற்ற 5 போட்டிகளில் 3-வது வெற்றியை பதிவு செய்த ஹைதராபாத் புள்ளி பட்டியலில் 6 புள்ளிகளுடன் 7-வது இடத்தை பிடித்து அசத்தியுள்ளது. மறுபுறம் இதுவரை பங்கேற்ற 6 போட்டிகளில் 3 வெற்றி 3 தோல்விகளை பதிவு செய்துள்ள கொல்கத்தா ரன்ரேட் அடிப்படையில் 6 புள்ளியுடன் 4-வது இடத்தில் உள்ளது.

சென்னை – மும்பை திருந்துமா:
முன்னதாக இந்த வருடம் தனது முதல் 3 போட்டிகளில் அடுத்தடுத்து தோல்விகளை பதிவு செய்த ஹைதெராபாத் புள்ளி பட்டியலில் கடைசி இடமான 10-வது இடத்தில் திண்டாடி கொண்டிருந்தது. ஆனால் அதன்பின் நடப்பு சாம்பியன் சென்னைக்கு எதிரான முதல் வெற்றியை பதிவு செய்த அந்த அணி குஜராத் மற்றும் கொல்கத்தாவை அடுத்தடுத்து தோற்கடித்து ஹாட்ரிக் வெற்றிகளைப் பதிவு செய்து 10-வது இடத்தில் இருந்து 7-ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளது சென்னை, மும்பை போன்ற ரசிகர்களைத் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.

- Advertisement -

ஏனெனில் வெறும் 1 கோப்பையை வென்றுள்ள ஹைதராபாத் அணியே இப்படி தோல்வியில் இருந்து மீண்டெழுந்து ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்து புள்ளிப் பட்டியலில் மேல் நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் நிலையில் நிறைய கோப்பைகளை வென்று வெற்றிகரமான ஐபிஎல் அணிகள் என பெயரெடுத்த மும்பையும் சென்னையும் இன்னும் கடைசி 2 இடங்களில் திண்டாடுகின்றன.

இதையும் படிங்க : தீபக் சாஹரின் இடத்திற்கு போட்டி போடும் 3 வீரர்கள் இவர்கள் தானாம் – சி.எஸ்.கே யாரை தேர்ந்தெடுக்கும்?

இதில் நடப்பு சென்னையாவது ஒரு வெற்றியை பதிவு செய்து 9-வது இடத்தில் உள்ள நிலையில் மும்பை 5 போட்டிகளிலும் தொடர் தோல்வியுடன் கடைசி இடத்தில் திண்டாடுகிறது. எனவே இந்த 2 அணிகளும் ஐதராபாத் அணியை பார்த்து திருந்தி வெற்றி பாதைக்கு திரும்புமா என அந்தந்த அணி ரசிகர்கள் ஏக்கத்துடன் காணப்படுகிறார்கள்.

Advertisement