சிஎஸ்கே நிர்வாக அணியின் கேப்டனாக டு பிளேஸிஸ் அறிவிப்பு – மீண்டும் ஒன்று சேரும் மஞ்சள் படை, அணி வீரர்கள் இதோ

Faf
- Advertisement -

கடந்த 2008ஆம் ஆண்டு வருங்கால வீரர்களை அடையாளப்படுத்தும் நோக்கத்தில் உருவாக்கப்பட்ட ஐபிஎல் தொடர் கடந்த 15 வருடங்களில் பல பரிணாமங்களை கடந்து இன்று தரத்திலும் பணத்திலும் ஐசிசி நடத்தும் உலக கோப்பைகளை மிஞ்சி உலகின் நம்பர் ஒன் டி20 தொடராக விஸ்வரூபம் எடுத்துள்ளது. அதனால் உலகின் பணக்கார வாரியமாக உருவெடுத்துள்ள இந்தியா சர்வதேச கிரிக்கெட்டின் தலையெழுத்தை தீர்மானிக்கும் அளவுக்கு வளர்ந்துள்ள நிலையில் ஐபிஎல் தொடரில் அணிகளை வாங்கிய உரிமையாளர்களும் தற்போது பன்மடங்கு வளர்ந்து தங்களுடைய கிளைகளை வெஸ்ட் இண்டீஸ், தென்னாபிரிக்கா, துபாய் போன்ற வெளிநாடுகளில் வாங்கி வருகின்றனர்.

அந்த வரிசையில் கிரிக்கெட் மிகவும் பிரபலமில்லாத அமெரிக்காவில் தற்போது புதிதாக மேஜர் லீக் டி20 எனும் தொடர் உருவாக்கப்பட்டுள்ளது. அதில் கொல்கத்தா, மும்பை ஆகிய ஐபிஎல் அணிகளுடன் 5 கோப்பைகளை வென்று வெற்றிகரமான அணியாக திகழும் சென்னையும் தங்களுடைய கிளையை வாங்கியுள்ளது. டெக்ஸாஸ் மாகாணத்தை மையப்படுத்திய அந்த அணிக்கு டெக்ஸஸ் சூப்பர் கிங்ஸ் என்று பெயரிடப்பட்டுள்ள நிலையில் இத்தொடரில் விளையாட போகும் வீரர்கள் ஒவ்வொருவர்களாக அறிவிக்கப்பட்டு வருகின்றனர்.

- Advertisement -

ஒன்று சேர்ந்த மஞ்சள் படை:
அதில் முதலாவதாக இந்த வருட ஐபிஎல் தொடரின் மாபெரும் ஃபைனலில் ஆட்டநாயகன் விருது வென்று அசத்திய நியூசிலாந்தை சேர்ந்த தொடக்க வீரர் டேவோன் கான்வே டெக்ஸஸ் அணிக்காக விளையாட உள்ளார். அவருடன் நியூசிலாந்தின் நட்சத்திர ஸ்பின்னர் மிட்சேல் சாட்னர் வாங்கப்பட்டுள்ள நிலையில் இந்த வருட ஐபிஎல் தொடருடன் ஓய்வு பெற்ற நட்சத்திர இந்திய வீரர் அம்பத்தி ராயுடுவும் அமெரிக்காவில் விளையாட தயாராகியுள்ளார்.

மேலும் உலகம் முழுவதிலும் நடைபெறும் பிரீமியர் லீக் டி20 தொடர்களில் விளையாடி 500க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை எடுத்து ஜாம்பவானாக திகழும் நட்சத்திர வெஸ்ட் இண்டீஸ் வீரர் ட்வயன் ப்ராவோவும் டெக்ஸாஸ் அணிக்காக விளையாடுகிறார். இவர்களுடன் தென்னாபிரிக்காவின் மிரட்டல் வீரர் டேவிட் மில்லர் முதல் முறையாக சென்னை நிர்வாகத்தின் அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

- Advertisement -

ஆனால் இவர்கள் அனைத்தையும் தென்னாப்பிரிக்காவை சேர்ந்த நட்சத்திர வீரர் பஃப் டு பிளேஸிஸ் கேப்டனாக செயல்பட்டு வழிநடத்துவார் என்று அந்த அணி நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது சென்னை ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. ஏனெனில் கடந்த 2012 முதலே சென்னை அணிக்காக விளையாடிய அவர் 2018 கோப்பையை வெல்வதற்கு முக்கிய பங்காற்றியதுடன் 2021இல் 633 ரன்களை அடித்து 4வது கோப்பையை வெல்ல கருப்பு குதிரையாக செயல்பட்டார்.

அதனால் சென்னை ரசிகர்கள் மனதில் நிலையான இடத்தை பிடித்த அவர் 2022 சீசனில் மெகா ஏலத்திற்காக அனைத்து அணிகளும் கலைக்கப்பட்ட போது அந்த அணி நிர்வாகத்தால் தக்க வைக்க முடியவில்லை. அதை பயன்படுத்திய பெங்களூரு பெரிய தொகைக்கு வாங்கி தங்களுடைய கேப்டனாக நியமித்தது. அதில் கடந்த வருடம் பெங்களூருவை பிளே ஆஃப் சுற்றுக்கு அழைத்துச் சென்ற அவர் இந்த வருடம் 700க்கும் மேற்பட்ட ரன்கள் அடித்தும் இதர வீரர்கள் சொதப்பியதால் மீண்டும் வெற்றி பெற வைக்க முடியவில்லை.

- Advertisement -

இருப்பினும் ஐபிஎல் போட்டிகளில் ஒவ்வொரு முறையும் அவர் ரன்கள் அடிக்கும் போது இவரை தவற விட்டு விட்டோமே என்று சென்னை ரசிகர்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். ஆனால் ஐபிஎல் தொடரில் விட்ட அவரை அமெரிக்க தொடரில் வாங்கியுள்ள சென்னை தங்களுடைய கேப்டனாக அறிவித்துள்ளது. அந்த வகையில் வரும் ஜூலை 13ஆம் துவங்கும் இத்தொடரில் சென்னை தங்களுடைய முதல் போட்டியில் லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

இதையும் படிங்க:வீடியோ : நாங்க இந்தியா இல்ல, சேவாக் ஸ்டைலில் முதல் நாளிலேயே ஆஸியை பொளந்த இங்கிலாந்து – ஜோ ரூட் மிரட்டல்

அத்தொடரில் டெக்சஸ் சூப்பர் கிங்ஸ் அணிக்காக களமிறங்க இதுவரை அறிவிக்கப்பட்ட வீரர்களின் பட்டியல் இதோ: டு பிளேஸிஸ் (கேப்டன்), ட்வயன் ப்ராவோ, டேவோன் கான்வே, அம்பத்தி ராயுடு, மிட்சேல் சாட்னர், டேவிட் மில்லர், டேனியல் சாம்ஸ், ஜெரால்டு கோட்சி, ருஷ்டி தேரோன், மிலிண்ட் குமார், கோடி செட்டி, கால்வின் செவேஜ், ஜியா சசாத், லகிரு மிலாந்தா, கேமரூன் ஸ்டீவன்சன்

Advertisement