வீடியோ : நாங்க இந்தியா இல்ல, சேவாக் ஸ்டைலில் முதல் நாளிலேயே ஆஸியை பொளந்த இங்கிலாந்து – ஜோ ரூட் மிரட்டல்

- Advertisement -

வரலாற்று சிறப்புமிக்க 2023 ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் ஜூலை 16ஆம் தேதியன்று இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் கோலாகலமாக துவங்கியது. நூற்றாண்டை தொடர்ந்து நடைபெற்று வரும் இந்த பழமை மிகுந்த தொடரில் கௌரவ கோப்பையை வெல்வதற்காக இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் களமிறங்கியுள்ளன. குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் டி20 என்ற அதிரடி ஆட்டத்தை கையிலெடுத்து இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா போன்ற அணிகளை அடித்து நொறுக்கி தொடர் வெற்றிகளை பெற்று வரும் இங்கிலாந்து இந்த தொடரில் கருணை காட்டாமல் உங்களை அடிக்கும் என்று ஆரம்பத்திலேயே கேப்டன் பென் ஸ்டோக்ஸ் எச்சரித்தார்.

ஆனால் உங்கள் ஆட்டமெல்லாம் வேறு அணிகளுக்கு எதிராக வைத்துக் கொள்ளுங்கள் தரமான பவுலிங்கை கொண்ட எங்களுக்கு எதிராக செல்லுபடியாகாது என்று பதிலடி கொடுத்த ஆஸ்திரேலியா சமீபத்தில் இந்தியாவை டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் தோற்கடித்த புத்துணர்ச்சியுடன் உலக சாம்பியனாக இத்தொடரில் களமிறங்கியது. அந்த நிலையில் இந்திய நேரப்படி மதியம் 3 மணிக்கு துவங்கிய இத்தொடரின் முதல் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கி அந்த அணிக்கு 2011 உலக கோப்பையில் இந்திய ஜாம்பவான் சேவாக் செய்ததைப் போல முதல் பந்திலேயே பவுண்டரியை விளாசிய ஜாக் கிராவ்லி அட்டகாசமான துவக்கத்தை கொடுத்தது பென் ஸ்டோக்ஸ் போன்ற இங்கிலாந்தினரை மகிழ்ச்சிப்படுத்தியது.

- Advertisement -

அதிரடி இங்கிலாந்து:
இருப்பினும் மற்றொரு தொடக்க வீரர் பென் டுக்கெட்டை 12 (10) ரன்களில் அவுட்டாக்கி ஆஸ்திரேலியா பதிலடி கொடுத்த நிலையில் 2வது விக்கெட்டுக்கு 70 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்திய ஓலி போப் 31 (43) ரன்களில் அவுட்டானார். அந்த நிலையில் வந்த ஹரி ப்ரூக் 32 (37) ரன்களில் நேதன் லயன் சுழலில் சிக்கி ஏமாற்றுத்துடன் பெவிலியன் திரும்ப கேப்டன் ஸ்டோக்ஸ் 1 ரன்னில் அவுட்டாகி இங்கிலாந்து ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்தார்.

அதனால் 176/5 என தடுமாறிய அந்த அணியை ஆஸ்திரேலியா விரைவில் சுருட்டி விடும் என்று எதிர்பார்க்கப்பட்ட போதிலும் மறுபுறம் நங்கூரத்தை போட்ட நம்பிக்கை நாயகன் ஜோ ரூட் நிதானம் கலந்த அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்தி ரசிகர்களுக்கு விருந்து படைத்தார். குறிப்பாக ஸ்காட் போலண்ட் வீசிய ஒரு பந்தை அசால்டாக ரிவர்ஸ் ஸ்கூப் ஷாட்டை விளாசி சிக்ஸராக பறக்கவிட்டு ரசிகர்களிடம் வியப்பை ஏற்படுத்திய அவர் தொடர்ந்து அசத்தலான பேட்டிங்கை வெளிப்படுத்தி டெஸ்ட் கிரிக்கெட்டில் தம்முடைய 30வது சதத்தை விளாசினார்.

- Advertisement -

குறிப்பாக ஓய்வு பெறாத வீரர்களில் ஸ்டீவ் ஸ்மித்துக்கு (31) பின் அதிக சதங்கள் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்ற அவருடன் மற்றொரு நம்பிக்கை நட்சத்திரம் ஜானி பேர்ஸ்டோ தனது பங்கிற்கு அதிரடியாக செயல்பட்டு 12 பவுண்டரியுடன் 78 (78) ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த மொய்ன் அலி 18 (17) ஸ்டுவர்ட் ப்ராட் 16 (21) என லோயர் ஆர்டர் பேட்ஸ்மேன்களை குறைந்த ரன்களில் ஆஸ்திரேலியா அவுட்டாகிய போதும் எதிர்ப்புறம் ஜோ ரூட் 7 பவுண்டரி 4 சிக்ஸருடன் 118* (152) ரன்கள் எடுத்து சவாலை கொடுத்துக் கொண்டிருந்த போது திடீரென இங்கிலாந்து தங்களுடைய முதல் இன்னிங்ஸை டிக்ளர் செய்வதாக அறிவித்து ஆஸ்திரேலியாவுக்கு ஆச்சரியத்தை கொடுத்தது.

அதிலும் 78 ஓவரிலேயே 393/8 ரன்களை குவித்து டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் ஒருநாள் கிரிக்கெட்டைப் போல அதிரடியாக செயல்பட்ட அந்த அணி நாங்கள் ஒன்றும் சமீபத்திய ஃபைனலில் மண்ணைக் கவ்விய இந்தியா அல்ல என்ற வகையில் மிரட்டலாக பேட்டிங் செய்து ஆஸ்திரேலியாவுக்கு வாயில் சொன்னதை செயலில் காண்பித்தது. மேலும் கடைசி சில ஓவர்களில் ஆஸ்திரேலியாவின் சில விக்கெட்டுகளை எடுத்து அச்சிறுத்தலை கொடுக்கலாம் என்ற நோக்கத்தில் பென் ஸ்டோக்ஸ் தைரியமாக முன்கூட்டியே டிக்ளேர் செய்த நிலையில் ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக நேதன் லயன் 4 விக்கெட்களையும் ஜோஸ் ஹேசல்வுட் 2 விக்கெட்டுகளையும் எடுத்தனர்.

இதையும் படிங்க:வீடியோ : மாஸ் காட்டிய சாய் சுதர்சன் – வெறித்தனமான சதமடித்து போராடிய அஜிதேஷ், கடைசி பந்தில் நெல்லை வென்றது எப்படி?

அதை தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியா எங்களது அதிரடி நாளை பாருங்கள் என்ற வகையில் நிதானமான பேட்டிங்கை வெளிப்படுத்தி முதல் நாள் முடிவில் விக்கெட் விடாமல் 14/0 ரன்களுடன் விளையாடும் நிலையில் களத்தில் டேவிட் வார்னர் 8* மற்றும் உஸ்மான் கவஜா 4* ரன்களுடன் இருப்பதால் இப்போட்டியில் ஆரம்பத்திலேயே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Advertisement