மாஸ் காட்டிய சாய் சுதர்சன் – வெறித்தனமான சதமடித்து போராடிய அஜிதேஷ், கடைசி பந்தில் நெல்லை வென்றது எப்படி?

TNPL 6
- Advertisement -

தமிழக ரசிகர்களை மகிழ்வித்து வரும் டிஎன்பிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் ஜூன் 16ஆம் தேதி இரவு 7:00 மணிக்கு கோயம்புத்தூரில் இருக்கும் எஸ்என்ஆர் காலேஜ் மைதானத்தில் நடைபெற்ற 6வது லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் கோவை கிங்ஸ் மற்றும் நெல்லை ராயல் கிங்ஸ் ஆகிய அணிகள் மோதின. அதில் டாஸ் வென்ற நெல்லை முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய கோவைக்கு ஆரம்பத்திலேயே சச்சின் டக் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தாலும் அடுத்து வந்த நம்பிக்கை நட்சத்திரம் சாய் சுதர்சன் மற்றொரு தொடக்க வீரர் சுரேஷ்குமார் உடன் ஜோடி சேர்ந்து அதிரடியான ரன்களை குவித்தார்.

அதில் ஒருபுறம் சிறப்பான ஃபார்மில் இருக்கும் சாய் சுதர்சன் அதிரடியாக விளையாட மறுபுறம் நிதானம் கலந்த அதிரடியை வெளிப்படுத்திய சுரேஷ்குமார் 2வது விக்கெட்டுக்கு 66 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து 3 பவுண்டரி 1 சிக்சருடன் 33 (24) ரன்களில் அவுட்டானார். அந்த நிலைமையில் களமிறங்கிய ராம் அரவிந்த் தடுமாற்றமாக செயல்பட்ட நிலையில் மறுபுறம் வெளுத்து வாங்கிய சாய் சுதர்சன் வேகமாக ரன்களை சேர்த்து விரைவாக அரை சதமடித்தார். ஆனாலும் மறுபுறம் 3வது விக்கெட்டுக்கு பெயருக்காக 68 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து தடுமாறிய ராம் அரவிந்த் 18 (23) ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றத்தை கொடுத்தார்.

- Advertisement -

த்ரில் போட்டி:
இருப்பினும் மறுபுறம் தொடர்ந்து அசத்திய சாய் சுதர்சன் சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 7 பவுண்டறி 4 சிக்சருடன் 90 (52) ரன்களில் ரன் அவுட்டாகி ஏமாற்றத்துடன் சென்றார். குறிப்பாக கடந்த போட்டியில் இதே போல 80க்கும் மேற்பட்ட ரன்களை எடுத்து ரன் அவுட்டான அவர் இம்முறையும் அதே போல பெவிலியன் திரும்பிய நிலையில் கடைசி நேரத்தில் சாருக்கான் 17 (8) ரன்களும் முகிலேஷ் 15 (5) ரன்கள் எடுத்த உதவியுடன் 20 ஓவர்களில் கோவை 181/6 ரன்கள் எடுத்தது. நெல்லை சார்பில் அதிகபட்சமாக பொய்யாமொழி 3 விக்கெட்டுகளை சாய்த்து அசத்தினார்.

அதை தொடர்ந்து 182 என்ற கடினமான இலக்கை துரத்திய நெல்லைக்கு முதல் ஓவரிலேயே கேப்டன் அருண் கார்த்திக் கோல்டன் டக் அவுட்டாகி பெரிய பின்னடைவை கொடுத்த நிலையில் அடுத்து வந்த அஜித்தேஸ் குருசாமி அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்தி சரிவை சரி செய்தார். இருப்பினும் அவருடன் 2வது விக்கெட்டுக்கு 76 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தாலும் தடுமாற்றமாகவே செயல்பட்ட மற்றொரு தொடக்க வீரர் ஸ்ரீ நிரஞ்சன் 25 (29) ரன்களில் அவுட்டாகி ஏற்படுத்திய அழுத்தத்தால் அடுத்து வந்த ரித்திக் ஈஸ்வரன் 3 (4) ரன்களில் பெவிலியன் திரும்பினார்.

- Advertisement -

அதனால் 88/3 என தடுமாறிய அந்த அணிக்கு குருசாமி தொடர்ந்து அதிரடியாக விளையாடி அரை சதம் கடந்த நிலையில் அடுத்ததாக களமிறங்கிய சோனு யாதவ் தடுமாற்றமாக செயல்பட்டு 20 (16) ரன்களில் ஆட்டமிழந்தார். அதே போல அடுத்து வந்த அருண் குமாரும் 3 (4) ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தாலும் மறுபுறம் நன்கு செட்டிலான அஜித் குருசாமி நேரம் செல்ல செல்ல அதிரடியை அதிகப்படுத்தி அட்டகாசமான பேட்டிங்கை வெளிப்படுத்தி சிக்ஸருடன் சதமடித்து வெறித்தனமாக வெற்றிக்கு போராடினார்.

அதன் காரணமாக வெற்றியை நெருங்கிய நெல்லைக்கு முகமது வீசிய கடைசி ஓவரில் 15 ரன்கள் தேவைப்பட்ட போது மிதுன் சிங்கிள் எடுத்த நிலையில் 2வது பந்தில் சிக்ஸர் பறக்க விட்ட குருசாமி 3வது பந்தில் சிங்கிள் எடுத்து 4வது பந்தில் டபுள் எடுக்க முயற்சித்த போது 7 பவுண்டரி 6 சிக்ஸருடன் 112 (60) ரன்களில் ஆட்டமிழந்தார். அதனால் போட்டியில் பெரிய பரபரப்பு ஏற்பட்ட நிலையில் கடைசி 2 பந்துகளில் 7 ரன்கள் தேவைப்பட்ட போது அடுத்து வந்த பொய்யாமொழி அசால்டாக சிக்ஸரை பறக்க விட்டு கடைசி பந்தில் 1 ரன் தேவைப்பட்ட போது சிங்கிள் எடுத்து சூப்பர் பினிஷிங் கொடுத்தார்.

இதையும் படிங்க:இந்திய அணியை சரிவிலிருந்து மீட்டெடுக்க டெஸ்ட் அணியில் இணைய இருக்கும் நட்சத்திர ஆல்ரவுண்டர் – ஓகே சொல்வாரா?

அதனால் 20 ஓவர்களில் 182/4 ரன்கள் எடுத்த நெல்லை 4 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்ற நிலையில் கடைசி நேரத்தில் பந்து வீச்சில் சொதப்பிய கோவை தோல்வியை சந்தித்தது. இந்த வெற்றிக்கு சந்தேகமின்றி சதமடித்து அசத்திய குருசாமி ஆட்டநாயகன் விருது வென்று ரசிகர்களின் பாராட்டுகளை அள்ளி வருகிறார்.

Advertisement