IND vs AUS : சச்சின், காலீஸ், லாரா கூட அவுட்டாகிடுவாங்க – இந்தூர் பிட்ச்சை சரமாரியாக விமர்சித்த முன்னாள் இந்திய வீரர்

IND vs AUS Indore Pitch
- Advertisement -

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வரும் ஆஸ்திரேலியா முதலிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்து ஆரம்பத்திலேயே கோப்பையை வெல்லும் வாய்ப்பை நழுவ விட்டது. இருப்பினும் 3வது போட்டியில் சுழலுக்கு சாதகமான பிட்ச்சில் மோசமாக பேட்டிங் செய்த இந்தியாவை மடக்கி பிடித்த ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலியா 9 விக்கெட் வித்தியாசத்தில் வென்று தங்களது நம்பர் ஒன் இடத்தை தக்க வைத்துள்ளதுடன் டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு முதல் அணியாக தகுதி பெற்றுள்ளது.

Jadeja-1

- Advertisement -

அதனால் கடைசி போட்டியில் வென்றால் தான் பைனலுக்கு செல்ல முடியும் என்ற இக்கட்டான சூழ்நிலைக்கு இந்தியா தள்ளப்பட்டுள்ளது. முன்னதாக முதலிரண்டு போட்டிகளில் பிட்ச் பற்றி விமர்சித்த ஆஸ்திரேலியர்களை போல தற்போது இந்தியாவைச் சேர்ந்தவர்கள் 3வது போட்டி நடைபெற்ற இந்தூர் மைதானத்தை விமர்சித்து வருகிறார்கள். ஏனெனில் நாக்பூர் மற்றும் டெல்லியை விட இந்தூரில் முதல் நாளின் முதல் மணி நேரத்திலேயே 4.8 டிகிரி என்றளவுக்கு தாறுமாறாக சுழன்ற பிட்ச்சில் தாக்கு பிடிக்க முடியாமல் 109, 163 ரன்களுக்கு சுருண்ட இந்தியா படுதோல்வியை சந்தித்தது.

சச்சின், லாராவால் கூட முடியாது:
குறிப்பாக முதல் இன்னிங்சில் புஜாராவும் 2வது இன்னிங்சில் விராட் கோலியும் மோசமான பேட்டிங் காரணமாக அவுட்டாகாமல் திடீரென்று திரும்பி சுழன்று வந்த பந்தால் அவுட்டானார்கள். மேலும் என்ன தான் இந்தியாவில் சுழல் இருப்பது இயற்கை என்றாலும் பொதுவாக 3வது நாளில் தான் ஸ்பின்னர்கள் தாக்கத்தை ஏற்படுத்துவார்கள். ஆனால் முதல் நாளிலேயே சுழன்ற இந்த பிட்ச் நிச்சயமாக தரமானதாக இல்லை என்பதே நிறைய இந்திய ரசிகர்களின் கருத்தாக இருக்கிறது.

அதற்கேற்றார் போல் இந்தூர் பிட்ச் மோசமாக இருந்ததாக போட்டியின் முடிவில் ரேட்டிங் வழங்கியுள்ள ஐசிசி அதற்கு தண்டனையாக 3 கருப்பு புள்ளிகளை கொடுத்துள்ளது. இதனால் அடுத்த 5 வருடத்திற்குள் அது 5 புள்ளிகளை தொடும் போது தாமாகவே 12 மாதங்கள் இந்தூர் மைதானத்தில் சர்வதேச போட்டிகள் நடத்துவதற்கு தடை விதிக்கப்படும். இந்நிலையில் இந்தூர் பிட்ச்சில் சச்சின், லாரா, காலிஸ் உள்ளிட்ட வரலாற்றின் எந்த மகத்தான பேட்ஸ்மேன்களாலும் ரன்களை குவிக்க முடியாது என்று முன்னாள் இந்திய வீரர் ஹர்பஜன் சிங் கடுமையாக விமர்சித்துள்ளார்.

- Advertisement -

இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “உங்களிடம் நல்ல தடுப்பாட்டம் இருந்தால் கூட ஒரு பேட்ஸ்மேனாக நீங்கள் இங்கே உங்களை காப்பாற்றிக் கொள்ள முடியாது. நீங்கள் சச்சின் டெண்டுல்கர், ஜேக் காலிஸ், பிரையன் லாரா அல்லது விராட் கோலி உட்பட யாராக இருந்தாலும் உங்களை யாரென்றே தெரியாத பவுலர் கூட இந்த பிட்ச்சில் தொடர்ச்சியாக 6 பந்துகளை வீசினால் எளிதாக அவுட்டாக்கி விடலாம். இந்த பிட்ச்சில் பேட்ஸ்மேன்கள் கடினமாக உழைக்கவில்லை. மாறாக வேலைக்கு உட்படுத்தப்படுகிறார்கள். ஏனெனில் பந்து எங்கே திரும்பி செல்கிறது என்பதை உங்களுக்கு தெரியவில்லை”

Harbhajan

“என்னை கேட்டால் விக்கெட்டுகள் எடுப்பதற்கு பவுலர்களும் சற்று கடினமாக உழைக்க வேண்டும். குறிப்பாக 4 அல்லது 5வது நாள் பிட்ச்சில் 250 ரன்களை கட்டுப்படுத்தும் திறமை உங்களிடம் இல்லையா? 8 விக்கெட்களை எடுத்த நேதன் லயன் மிகச் சிறந்த பவுலர். அஸ்வின் சிறந்த பவுலர். ஆனால் இங்கே ஜோ ரூட் போன்றவர் உங்களுக்கு தொல்லை கொடுத்து வெறும் 5 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை எடுக்கிறார். விக்கெட்டுகளை யார் வேண்டுமானாலும் எடுக்கலாம். ஆனால் அதில் உங்களுடைய திறமையும் நுணுக்கங்களும் இருக்க வேண்டும்” என்று கூறினார்.

இதையும் படிங்க:2023 உ.கோ’யில் பங்கேற்க இந்தியா செல்வீர்களா? செய்தியாளரின் கேள்விக்கு பாபர் அசாம் கொடுத்த நேரடி பதில் இதோ

அதாவது கடந்த 2021ஆம் ஆண்டு அகமதாபாத் நகரில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் எப்போதாவது மட்டுமே பந்து வீசக்கூடிய இங்கிலாந்தின் ஜோ ரூட் வெறும் 8 ரன்கள் மட்டும் கொடுத்து 5 விக்கெட்டுகளை எடுத்தார். அது போல இப்போதெல்லாம் இந்தியாவில் அமைக்கப்படும் மைதானங்களில் சச்சினாக இருந்தாலும் அவரை யாரென்று தெரியாத பவுலர் கூட எளிதாக அவுட் செய்யும் நிலைமை இருப்பதாக ஹர்பஜன் சிங் விமர்சித்துள்ளார்.

Advertisement