மீண்டும் வெடித்த மன்கட் சர்ச்சை, உலகமே சேர்ந்து திட்டும் இந்திய வீராங்கனைக்கு குவியும் ஆதரவு – நடந்தது என்ன

Womens Cricket Deepati Sharma Mankad
- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் பங்கேற்ற 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 2 – 1 என்ற கணக்கில் தோல்வியை சந்தித்த இந்திய மகளிரணி செப்டம்பர் 18, 21 ஆகிய தேதிகளில் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் முதலிரண்டு போட்டிகளில் வென்று தொடரை கைப்பற்றி பதிலடி கொடுத்தது. அந்த நிலைமையில் செப்டம்பர் 24ஆம் தேதியான நேற்று நடைபெற்ற சம்பிரதாய கடைசி போட்டியுடன் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திர அனுபவம் வீராங்கனை ஜுலன் கோஸ்வமி சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார்.

அவருக்கு கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர் உட்பட இந்திய வீராங்கனைகள் பிரியாத மனதுடன் விடை கொடுத்த பின் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 45.4 ஓவரில் 169 ரன்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக ஸ்மிருதி மந்தனா 50 ரன்களும் தீப்தி சர்மா 68* ரன்களும் எடுத்தனர். அதை துரத்திய இங்கிலாந்து ஆரம்பம் முதலே இந்தியாவின் தரமான பந்து வீச்சில் சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்து தோல்வியின் பிடியில் சிக்கியது. குறிப்பாக ரேணுகா சிங் அதிரடியாக 4 விக்கெட்டுக்களை எடுத்ததால் 35.2 ஓவரில் 118/9 என தடுமாறியதால் தோல்வி உறுதியான அந்த அணிக்கு கடைசி நேரத்தில் இளம் வீராங்கனை சார்லி டீன் 47 (80) ரன்கள் குவித்து வெற்றிக்காக போராடினார்.

- Advertisement -

வெடித்த சர்ச்சை:
அப்போது 39 பந்துகளில் 17 ரன்கள் தேவைப்பட்ட போது 44வது ஓவரை வீசிய இந்திய வீராங்கனை தீப்தி சர்மா அந்த ஓவரில் ஆரம்பம் முதலே பந்து வீசுவதற்கு முன்பாக எதிர்புறம் கிரீஸ் விட்டு வெளியே வந்து கொண்டிருந்த சார்லி டீனை 3வது பந்தில் ரன் அவுட் செய்தார். ஆரம்பம் முதலே விதிமுறைக்கு உட்பட்ட அந்த வகையான அவுட் ஆரம்ப கட்டத்தில் மன்கட் என்ற பெயருடன் நேர்மைக்குப் புறம்பான செயலாக பார்க்கப்பட்டு வந்தது. ஆனாலும் தமிழகத்தின் ரவிச்சந்திரன் அஷ்வின் பட்லரை அவுட் செய்து குரல் கொடுத்த தொடர்ச்சியான போராட்டத்தால் லண்டனின் எம்சிசி அமைப்பு சமீபத்தில் அதை அதிகாரபூர்வமாக ரன் அவுட் என அறிவித்தது.

அதை ஐசிசியும் ஏற்றுக்கொண்ட நிலையில் அதை சரியாக செய்த தீப்தி சர்மா 16 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வெற்றி பெற வைத்தார். அதனால் 3 – 0 (3) என்ற கணக்கில் தொடரை வென்று கோப்பையை முத்தமிட்ட இந்தியா வரலாற்றிலேயே முதல் முறையாக மகளிர் கிரிக்கெட்டில் இங்கிலாந்தை அதன் சொந்த மண்ணில் ஒயிட் வாஷ் செய்து சாதனை படைத்தது. இருப்பினும் வெற்றிக்காக வேகவேகமாக பந்து வீசுவதற்கு முன்பாகவே சிங்கிள் எடுக்க முயற்சித்த சார்லி டீன் அவ்வாறு அவுட்டானதால் மனமுடைந்து கண் கலங்கினார்.

- Advertisement -

திட்டும் இங்கிலாந்து:
ஆனால் ஐசிசி மற்றும் எம்சிசி அமைப்பு அங்கீகரித்தும் நேர்மைக்கு புறம்பாக செயல்பட்டதாக தீப்தி சர்மாவை இங்கிலாந்து ரசிகர்களும் முன்னாள் இந்நாள் வீரர்களும் சரமாரியாகத் திட்டித் தீர்த்து வருகிறார்கள். குறிப்பாக அப்போட்டியை நேரலையில் வர்ணனை செய்து கொண்டிருந்த முன்னாள் இங்கிலாந்து கேப்டன் நாசர் ஹூசைன் “கிரிக்கெட் தோற்றுவிட்டதாக” வர்ணித்தார். மேலும் சார்லி டீன் வேண்டுமென்றே வெள்ளைக்கோட்டை வெளியேறுவதற்காக காத்திருந்து மெதுவாக பந்து வீசி வேண்டுமென்றே மன்கட் செய்ததாக மற்றொரு வீரர் டிம் பிரஸ்னன் தீப்தி சர்மாவை விமர்சித்துள்ளார்.

அதுபோக விதிமுறைக்கு உட்பட்டதாக இருந்தாலும் இந்தியா நேர்மைக்கு புறம்பாக வென்றதாக ஸ்டூவர்ட் பிராட், சாம் பில்லிங்ஸ், ஜேம்ஸ் ஆண்டர்சன், இங்கிலாந்தின் ரசிகர்கள் பக்கமான பார்மி ஆர்மி போன்ற ஏராளமான இங்கிலாந்து முன்னாள் இந்நாள் வீரர்களும் ரசிகர்களும் தீப்தி சர்மாவை சரமாரியாக திட்டுகின்றனர். அவருடன் சேர்ந்து கொண்டே ஆஸ்திரேலியா போன்ற இதர நாடுகளை சேர்ந்த ரசிகர்களும் விதிமுறைக்கு உட்பட்டு செயல்பட்ட இந்திய வீராங்கனையை சமூக வலைதளங்களில் விமர்சிக்கிறார்கள்.

- Advertisement -

இந்தியாவின் ஆதரவு:
ஆனால் வெற்றி பெறாத போதிலும் தோல்வியடையாத நியூசிலாந்தை ஏமாற்றி 2019 உலகக் கோப்பையை அதிக பவுண்டரிகள் அடித்த விதிமுறையை பயன்படுத்தி வென்ற இங்கிலாந்து எங்களின் தீப்தி சர்மாவை பற்றி பேசுவதற்கு தகுதியற்றவர்கள் என்று இந்திய ரசிகர்கள் நெத்தியடி பதிலைக் கொடுத்து வருகிறார்கள்.

அதுபோக தீப்தி சர்மா ரன் அவுட் செய்ததற்கு என்னுடைய பெயர் ஏன் ட்ரெண்டிங்கில் இருக்கிறது என்று தன்னுடைய வெற்றியை கலகலப்பாக கொண்டாடிய தமிழகத்தின் ரவிசந்திரன் அஷ்வின் உலகம் என்ன சொல்லும் என்பதைப் பற்றி கவலைப்படாமல் செயல்பட்ட தீப்திக்கு ஆதரவு கொடுத்து பாராட்டியுள்ளார்.

இதையும் படிங்க : கண்ணீர் மல்க விடைபெற்ற ஜாம்பவான் ஜூலன் கோஸ்வாமி – அவர் படைத்துள்ள சாதனைகளின் பட்டியல்

அது போக ஹர்ஷா போக்லே, வாசிம் ஜாபர் உட்பட அனைத்து இந்திய பிரபலங்களும் தீப்தி சர்மாவுக்கு விமர்சனங்களை மிஞ்சும் ஆதரவைக் கொடுத்து வருகிறார்கள்.

Advertisement