அப்படி என்ன அவசரம்.. 13.2 ஓவரில் மொத்த பாக்கெட்டையும் காலி செய்த இங்கிலாந்து.. முதல் நாளிலேயே ஏற்பட்ட பரிதாபம்

- Advertisement -

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அங்கு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் ஒரு பகுதியாக நடைபெறும் இத்தொடரின் முதல் போட்டி ஜனவரி 25ஆம் தேதி ஹைதராபாத் நகரில் துவங்கியது. அந்த போட்டியில் டாஸ் அதிர்ஷ்டத்தை பெற்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

இருப்பினும் ஆரம்பம் முதலே தடுமாற்றமான ஆட்டத்தை வெளிப்படுத்திய அந்த அணி இந்தியாவின் தரமான பந்து வீச்சில் 246 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணிக்கு ஜோ ரூட், ஜானி பேர்ஸ்ட்ரோ உள்ளிட்ட முக்கிய பேட்ஸ்மேன்கள் பெரிய ரன்கள் எடுக்க தவறிய நிலையில் அதிகபட்சமாக கேப்டன் போராடி 70 ரன்கள் எடுத்தார். மறுபுறம் பந்து வீச்சில் அசத்திய இந்தியா சார்பில் அதிகபட்சமாக ரவிச்சந்திரன் அஸ்வின் 3, ரவீந்திர ஜடேஜா 3, பும்ரா மற்றும் அக்சர் படேல் தலா 2 விக்கெட்களை எடுத்தார்கள்.

- Advertisement -

என்ன அவசரம்:
அதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்தியா அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி முதல் நாள் முடிவில் 119/1 ரன்கள் எடுத்து இன்னும் 127 ரன்கள் மட்டுமே பின்தங்கியுள்ளது. இந்தியாவுக்கு கேப்டன் ரோஹித் சர்மா 24 ரன்களில் அவுட்டானாலும் ஜெய்ஸ்வால் அதிரடியான அரை சதம் அடித்து 76* (70) ரன்களும் கில் 14* ரன்களும் எடுத்து களத்தில் உள்ளனர்.

முன்னதாக இத்தொடரில் டி20 போல அதிரடியாக விளையாடுவோம் என்று இந்தியாவை எச்சரித்த இங்கிலாந்து அப்படியே அதற்கு நேர்மாறாக பேட்டிங்கில் தடுமாற்றமான ஆட்டத்தை வெளிப்படுத்தி முதல் நாளிலேயே ஆல் அவுட்டானது. அதைத் தொடர்ந்து பந்து வீசிய அந்த அணி ஆரம்பத்திலேயே வேகமாக விக்கெட்டுகளை எடுக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் இந்திய பேட்ஸ்மேன்களின் மீது லேசாக எட்ஜ் பட்டதற்கும் காலில் உரசியது போல் தெரிந்ததற்கும் ரிவியூ எடுத்தது.

- Advertisement -

இருப்பினும் அதில் எதிலுமே இங்கிலாந்து எதிர்பார்த்தது போல் கேட்ச் அல்லது எல்பிடபுள்யூ முறையில் விக்கெட் கிடைக்கவில்லை. அந்த வகையில் இந்தியாவின் இன்னிங்ஸ் துவங்கி வெறும் 13.2 ஓவரிலேயே தங்களுக்கு ஒதுக்கப்பட்ட 3 ரிவ்யூவையும் இங்கிலாந்து எடுத்து முடித்து விட்டது. ஆனால் அதில் ஒன்று கூட அந்த அணிக்கு வெற்றிகரமாக அமையவில்லை.

இதையும் படிங்க: 6.3 ஓவர்.. 41 பந்தில் 50.. அடித்து நொறுக்கி இங்கிலாந்தின் பஸ்பாலுக்கு.. ஜெய்ஸ்பாலை காட்டிய ஜெய்ஸ்வால்.. மிரட்டும் இந்தியா

அந்த வகையில் இன்னும் இந்த இன்னிங்ஸில் இந்தியாவிடம் 9 விக்கெட்டுகள் மீதமுள்ள நிலையில் இங்கிலாந்து இப்படி ஆரம்பத்திலேயே அவசரப்பட்டு பாக்கெட்டில் வைத்திருந்த 3 ரிவ்யூவையும் வீணடித்து இழந்துள்ளது அந்நாட்டு ரசிகர்களிடம் ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. மொத்தத்தில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்துடன் நாளிலேயே அனைத்து ரிவியூவையும் இழந்ததால் மேற்கொண்டு முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து விரும்பும் நேரத்தில் ரிவியூ எடுக்க முடியாத பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement