
இந்தியா – இங்கிலாந்து அணிகள் விளையாடும் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பர்மிங்கம் நகரில் நடைபெற்று வருகிறது. ஜூலை இரண்டாம் தேதி துவங்கிய அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய இந்தியா 587 ரன்கள் குவித்து அசத்தியது. அதிகபட்சமாக கேப்டன் சுப்மன் கில் 269, ரவீந்திர ஜடேஜா 89, ஜெய்ஸ்வால் 87, வாசிங்டன் சுந்தர் 42 ரன்கள் குவித்தார்கள்.
இங்கிலாந்துக்கு அதிகபட்சமாக சோயப் பஷீர் 3 விக்கெட்டுகளை சாய்த்தார். அடுத்ததாக விளையாடிய இங்கிலாந்து அணி 2வது நாளில் 3 விக்கெட்டுகளை இழந்து ஆரம்பத்திலேயே தடுமாறியது. அந்த நிலையில் 2வது நாள் முடிவில் நிகழ்ந்த செய்தியாளர்கள் சந்திப்பில் இந்தியாவை திருப்பி அடித்து வெற்றி பெறுவோம் என்று இங்கிலாந்து அணியின் சுழல் பந்து வீச்சு பயிற்சி பயிற்சியாளர் ஜீத்தன் படேல் தெரிவித்தார்.
குறிப்பாக அருகில் இருந்த இந்தியாவின் ரவீந்திர ஜடேஜா மற்றும் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தது பின்வருமாறு. “100% வெற்றி பெறுவோம். இதை நான் ஏற்கனவே பலமுறை தெரிவித்துள்ளேன். நீங்கள் என்னைப் பார்த்து சிரித்தீர்கள். இரண்டாவது நாளில் எங்களுடைய பௌலிங் பற்றி நாங்கள் வேகமாக பேசி முடித்து விட்டு அடுத்த நாளில் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி பார்ப்போம்”
“இன்றைய நாளில் ஓய்வெடுத்து நாளை புத்துணர்ச்சியாக வருவோம். இந்தப் போட்டியில் நாங்கள் வெற்றியின் கோட்டை தாண்டுவதற்கு மற்றொரு வழியைக் கண்டறிவோம். இன்னும் 3 நாட்கள் இருக்கும் இந்தப் போட்டி வேகமாக ரன்கள் அடிக்கக்கூடிய மைதானத்தில் நடைபெறுகிறது. எனவே என்ன நடக்கும் என்பது உங்களுக்குத் தெரியாது. நாங்கள் வேகமாக ரன்கள் அடித்து திரும்பி வருவோம்” என்று கூறினார்.
அதைக்கேட்ட ஜடேஜா சிரித்துக்கொண்டே கூறியது பின்வருமாறு. “செய்தியாளர்கள் சந்திப்பில் நீங்கள் திரும்பும் விஷயங்களை பேசலாம். அதைப் பொருட்படுத்துவது என்னுடைய வேலை கிடையாது. ஆனால் நாளின் இறுதியில் நீங்கள் மைதானத்திற்கு சென்று வெற்றி பெறுவதற்கு நன்றாக விளையாடி 20 விக்கெட்டுகளை எடுக்க வேண்டும். அதுவே முக்கியம்” என்று பதிலடி கொடுத்தார்.
இதையும் படிங்க: ஜடேஜாவின் மோசமான சாதனையை சமன் செய்த வாரி வள்ளல் பிரசித் கிருஷ்ணா – விவரம் இதோ
அதாவது கடந்தப் போட்டியை போல் அல்லாமல் இம்முறை 20 விக்கெட்டுகளை எடுத்து இங்கிலாந்தை வீழ்த்துவோம் என்று அவருக்கு ஜடேஜா தக்க பதிலடி கொடுத்தார். இந்தப் பதிவிடும் போது ஹரி ப்ரூக், ஜேமி ஸ்மித் ஆகியோர் சதத்தை அடித்து இந்தியாவுக்கு சவாலைக் கொடுத்து வருகிறார்கள். எனவே எஞ்சிய 5 விக்கெட்டுகளை எடுத்து இந்தியா முன்னிலை பெறுமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.