எங்க வந்து யாருகிட்ட, மிரட்டிய தெ. ஆவை சொந்த மண்ணில் துவைத்த இங்கிலாந்து மாஸ் கம்பேக் வெற்றி – முழுவிவரம்

ENG vs RSA Ollie Robinson
- Advertisement -

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு முதலில் நடந்த ஒருநாள் தொடரை மழையால் 1 – 1 (3) என சமன் செய்த தென்னாப்பிரிக்கா அதன்பின் நடந்த டி20 தொடரை 2 – 1 (3) என்ற கணக்கில் கைப்பற்றி மிரட்டியது. அந்த நிலைமையில் ஆகஸ்ட் 17இல் துவங்கிய உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் ஒரு அங்கமாக நடைபெறும் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 12 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை மீண்டும் அதன் சொந்த மண்ணில் மண்ணைக் கவ்வ வைத்த தென்னாப்பிரிக்கா 1 – 0* என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது.

குறிப்பாக ஸ்டோக்ஸ் – மெக்கல்லம் தலைமையில் நியூசிலாந்து, இந்தியா போன்ற அணிகளை அதிரடியாக விளையாடி தோற்கடித்து அதற்கு “பஸ்பால்” என்ற பெயரிட்டு உலகிலேயே அதுதான் சிறந்தது என்றும் உலகிற்கு அதை வைத்து எவ்வாறு டெஸ்ட் கிரிக்கெட் விளையாட வேண்டும் என்று கற்றுக் கொடுக்கப்போவதாக பகிரங்கமாக அறிவித்த இங்கிலாந்தை தெறிக்கவிட்ட தென்னாப்பிரிக்கா உலக அளவில் பாராட்டுகளைப் பெற்றது.

- Advertisement -

மேலும் இனியாவது அனைத்து போட்டிகளிலும் அதிரடியாக விளையாடி வெல்ல முடியாது என்பதை இங்கிலாந்து புரிந்துகொண்டு செயல்பட வேண்டும் என்று ரசிகர்கள் கலாய்த்தனர். இருப்பினும் ஒரு போட்டியில் தோற்றோம் என்பதற்காக “பஸ்பாஸ்” அதிரடியை கைவிட முடியாது என மீண்டும் சவால் விட்ட இங்கிலாந்து ஆகஸ்ட் 25ஆம் தேதியன்று மான்செஸ்டரில் துவங்கிய 2வது போட்டியில் பதிலடி கொடுக்க களமிறங்கியது.

மிரட்டிய இங்கிலாந்து:
அந்த முக்கியமான போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தாலும் இம்முறை ஜாம்பவான் ஜேம்ஸ் ஆண்டர்சன் உள்ளிட்ட இங்கிலாந்தின் தரமான பந்து வீச்சுக்கு பதில் சொல்ல முடியாமல் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து வெறும் 151 ரன்களுக்கு சுருண்டது. அந்த அணியின் கேப்டன் டீன் எல்கர் 13, பீட்டர்சன் 21, டுஷன் 16 என முக்கிய வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றிய நிலையில் அதிகபட்சமாக ககிசோ ரபாடா 36 ரன்கள் எடுத்தார். அனலாக பந்துவீசிய இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக சீனியர்கள் ஆண்டர்சன் மற்றும் ஸ்டூவர்ட் பிராட் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை எடுத்தனர்.

- Advertisement -

அதனால் புத்துணர்ச்சியடைந்தது போல் இம்முறை பேட்டிங்கிலும் அசத்திய இங்கிலாந்து தனது முதல் இன்னிங்சில் 415/9 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. லீஸ் 4, கிராவ்லி 38, ஜோ ரூட் 9, போப் 23, பேர்ஸ்டோ 49 என முக்கிய வீரர்கள் பெரிய ரன்களை எடுக்க தவறிய அந்த அணிக்கு அதிகபட்சமாக மிடில் ஆர்டரில் 173 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அட்டகாசமாக பேட்டிங் செய்த கேப்டன் பென் ஸ்டோக்ஸ் சதமடித்து 103 ரன்களும் கடைசி வரை அவுட்டாகாத விக்கெட் கீப்பர் பென் போக்ஸ் 113* ரன்களும் குவித்து அசத்தினார்கள். தென் ஆப்ரிக்கா சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக அன்றிச் நோர்ட்ஜெ 3 விக்கெட்டுகள் எடுத்தார்.

எங்க வந்து யாருகிட்ட:
அதனால் 264 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சில் பதிலடி கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட தென்னாப்பிரிக்காவுக்கு கேப்டன் டீன் எல்கர் 11, எர்வீ 25, பீட்டர்சன் 42, மார்க்ரம் 6 என டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் மீண்டும் இங்கிலாந்தின் துல்லியமான பந்துவீச்சில் பெரிய ரன்களை எடுக்காமல் கைவிட்டார்கள். அதேபோல் மிடில் ஆர்டரில் டுஷன் 41 ரன்களை எடுத்தது தவிர எஞ்சிய வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டானதால் வெறும் 179 ரன்களுக்கு தென்னாப்பிரிக்கா சுருண்டது. இங்கிலாந்து சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக ஓலி ராபின்சன் 4 விக்கெட்டுகளும் ஜேம்ஸ் ஆண்டர்சன் 3 விக்கெட்டுகளும் எடுத்தனர்.

- Advertisement -

அதன் காரணமாக இன்னிங்ஸ் மற்றும் 85 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை சுவைத்த இங்கிலாந்து முதல் போட்டியில் தலைகுனியும் தோல்வியை கொடுத்த தென்ஆப்பிரிக்காவை விட அபாரமான பெரிய வெற்றியை பெற்று 1 – 1* (3) என்ற கணக்கில் தொடரை சமன் செய்துள்ளது. இந்த வெற்றிக்கு 103 ரன்களும் 4 விக்கெட்டுகளும் எடுத்து முக்கிய பங்காற்றிய கேப்டன் பென் ஸ்டோக்ஸ் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

அத்துடன் முதல் போட்டியில் தங்களது “பஸ்பாஸ்” எனும் அதிரடியை முட்டாள்தனம் என்று ஏளனப்படுத்தி படுதோல்வியை பரிசளித்த தென் ஆப்பிரிக்காவை “எங்க வந்து யாருக்கிட்ட” என்பது போல் சொந்த மண்ணில் அதே 3 நாட்களுக்குள் பந்தாடிய இங்கிலாந்து தக்க பதிலடி கொடுத்து இந்த தொடரில் அபாரமான கம்பேக் கொடுத்துள்ளது.

இதையும் படிங்க : சர்வதேச கிரிக்கெட்டில் கிளென் மெக்ராத்தை பின்னுக்கு தள்ளி ஆண்டர்சன் வரலாற்று சாதனை – 40 வயதில் அசத்தல்

இதன் காரணமாக கடந்த போட்டியில் தங்களை கலாய்த்த அதே ரசிகர்களின் கையால் பாராட்டுக்களைப் பெற்றுள்ள இங்கிலாந்து செப்டம்பர் 8இல் நடைபெறும் கடைசி போட்டியில் களமிறங்க உள்ளது. இருப்பினும் 2வது போட்டியில் அசந்த நேரம் பார்த்து அடித்த இங்கிலாந்தை கடைசி போட்டியில் தோற்கடிக்க தென் ஆப்பிரிக்காவும் போராட உள்ளதால் மீண்டும் இந்த தொடர் உலக அளவில் மிகப் பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement