- Advertisement -
உலக கிரிக்கெட்

221 ரன்ஸ்.. ஒன்டே மேட்ச் போல இலங்கையை நொறுக்கும் இங்கிலாந்து.. 1990க்குப்பின் போப் அதிரடி சாதனை

இலங்கைக்கு எதிராக தங்களுடைய சொந்த மண்ணில் இங்கிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் அத்தொடரின் முதல் 2 போட்டிகளில் ஏற்கனவே இங்கிலாந்து வென்று முன்னிலை பெற்றுள்ளது. அந்த நிலையில் கடைசிப் போட்டி செப்டம்பர் 6ஆம் தேதி லண்டனில் உள்ள ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் துவங்கியது.

இந்திய நேரப்படி மதியம் 3.30 மணிக்கு துவங்கிய அப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்துக்கு டான் லாரன்ஸ் 5 ரன்களில் அவுட்டானார். இருப்பினும் மற்றொரு துவக்க வீரர் பென் டக்கெட் அதிரடியாக விளையாடினார். அவருடன் அடுத்ததாக ஜோடி சேர்ந்த கேப்டன் ஓலி போப் தம்முடைய பங்கிற்கு அதிரடியாக விளையாடினார்.

- Advertisement -

அதிரடி சாதனை:

நேரம் செல்ல செல்ல அந்த இருவருமே சுமாராக பந்து வீசிய இலங்கை பவுலர்களை அதிரடியாக எதிர்கொண்டு ஒருநாள் கிரிக்கெட்டை போல வேகமாக ரன் குவிப்பில் ஈடுபட்டனர். அதில் முதலாவதாக சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட பென் டக்கெட் 9 பவுண்டர் 2 சிக்சருடன் 86 (79) ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்ததாக வந்த நம்பிக்கை நட்சத்திரம் ஜோ ரூட் 13 ரன்களில் அவுட்டாகி சென்றார்.

ஆனால் மறுபுறம் தொடர்ந்து அதிரடியாக விளையாடிய கேப்டன் ஓலி போப் 13 பவுண்டரி 2 சிக்சருடன் 102 பந்துகளில் சதமடித்தார். அதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் 2வது அதிவேகமான சதத்தை அடித்த இங்கிலாந்து கேப்டன் என்ற சிறப்பான சாதனையும் அவர் படைத்தார். இதற்கு முன் கடந்த 1990ஆம் ஆண்டு லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியாவுக்கு எதிராக அப்போதைய கேப்டன் கிரகாம் கூச் 95 பந்துகளில் சதமடித்து முதலிடத்தில் உள்ளார்.

- Advertisement -

திணறும் இலங்கை:

அந்த வகையில் அவர் அதிரடியான வேகத்தில் விளையாடிக் கொண்டிருந்த போது மழை வந்ததால் முதல் நாள் ஆட்டம் முன்னதாகவே முடித்துக் கொள்ளப்பட்டது. முதல் நாள் முடிவில் 221-3 ரன்கள் எடுத்துள்ள இங்கிலாந்து இப்போட்டியிலும் வலுவான துவக்கத்தை பெற்றுள்ளது. அந்த அணிக்கு களத்தில் கேப்டன் ஓலி போப் 103* (103), ஹரி ப்ரூக் 8* ரன்களுடன் உள்ளனர்.

இதையும் படிங்க: 196 ரன்ஸ்.. 7 போர்ஸ் 7 சிக்ஸ்.. ஸ்காட்லாந்தை நொறுக்கிய இங்லீஷ்.. ஆஸிக்காக 11 வருட சரவெடி சாதனை

மறுபுறம் ஒய்ட்வாஷ் தோல்வியை தவிர்க்கும் முனைப்புடன் இப்போட்டியில் இலங்கை விளையாடி வருகிறது. இருப்பினும் இதுவரை அந்த அணியின் ஆட்டம் இங்கிலாந்துக்கு எதிராக எடுபடவில்லை என்றே சொல்லலாம். அந்த வகையில் ஜாம்பவான்கள் சனாத் ஜெயசூர்யா, இயன் பெல் பயிற்சியாளர்களாக இருந்தும் இந்த தொடரில் இலங்கை திணறி வருவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -