ஸ்காட்லாந்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் ஆஸ்திரேலியா 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. எடின்பர்க் நகரில் நடைபெற்று வரும் அத்தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலியா வென்றது. அந்த நிலையில் இரண்டாவது போட்டி செப்டம்பர் 6ஆம் தேதி இந்திய நேரப்படி மாலை 6.30 மணிக்கு துவங்கியது.
அப்போட்டியில் நிச்சயம் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கிய ஸ்காட்லாந்து டாஸ் வென்று முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியாவுக்கு டிராவிஸ் ஹெட் ஆரம்பத்திலேயே கோல்டன் டக் அவுட்டானார். இருப்பினும் அடுத்து வந்த இளம் வீரர் ஜோஸ் இங்லீஷ் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தார்.
43 பந்தில் சதம்:
ஆனால் மறுபுறம் தடுமாறிய மற்றொரு துவக்க வீரர் ஜேக் பிரேசர்-மெக்குர்க் 12 (12) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார். அடுத்ததாக வந்த கேமரூன் கிரீன் நிதானமாக விளையாடினார். ஆனால் தொடர்ந்து எதிர்ப்புறம் ஸ்காட்லாந்து பவுலர்களை அடித்து நொறுக்கிய ஜோஸ் இங்லீஷ் 7 பவுண்டரி 7 சிக்சருடன் 43 பந்துகளிலேயே சதத்தை விளாசி 103 (49) ரன்களில் அவுட்டானார்.
இதன் வாயிலாக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவுக்காக அதிவேகமாக சதத்தை அடித்த வீரர் என்ற மாபெரும் சாதனையையும் ஜோஸ் இங்லீஷ் படைத்தார். அந்த பட்டியல்:
1. ஜோஸ் இங்லிஷ் : 43 பந்துகள், ஸ்காட்லாந்துக்கு எதிராக, எடின்பர்க், 2024*
2. ஆரோன் பின்ச் : 47 பந்துகள் இங்கிலாந்துக்கு எதிராக, சௌதம்டன், 2013
3 ஜோஸ் இங்கிலீஷ் : 47 பந்துகள், இந்தியாவுக்கு எதிராக விசாகப்பட்டினம், 2023
4. க்ளன் மேக்ஸ்வெல் : 47 பந்துகள், இந்தியாவுக்கு எதிராக கௌஹாத்தி, 2023
ஆஸ்திரேலியா வெற்றி:
இறுதியில் அவருடன் சேர்ந்து 3வது விக்கெட்டுக்கு 92 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த க்ரீன் 36 (29) ரன்களும் மார்கஸ் ஸ்டோய்னிஸ் 20* (20) ரன்களும் டிம் டேவிட் 17* (7) ரன்களும் எடுத்தனர். அதனால் 20 ஓவரில் ஆஸ்திரேலியா 196-4 ரன்கள் எடுத்தது. ஸ்காட்லாந்து சார்பில் அதிகபட்சமாக பார்ட்லே கர்ரி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதையும் படிங்க: ரோஹித்துக்கு பின் அந்த 2 இளம் வீரர்கள் இந்தியாவின் ஆல் ஃபார்மட் கேப்டனா வருவாங்க.. டிகே கணிப்பு
இறுதியில் 197 ரன்களை துரத்திய ஸ்காட்லாந்து எதிர்பார்த்ததை போலவே ஆஸ்திரேலியாவின் தரமான பந்து வீச்சில் 16.4 ஓவரில் முடிந்தளவுக்கு போராடியும் 126 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணிக்கு அதிகபட்சமாக கேப்டன் பேரிங்டன் 59 (42) ரன்கள் எடுத்த நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு அதிகபட்சமாக மார்கஸ் ஸ்டோனிஸ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதனால் 70 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற ஆஸ்திரேலியா 2 – 0* (3) என்ற கணக்கில் இத்தொடரை ஆரம்பத்திலேயே கைப்பற்றியுள்ளது.



