230 ரன்ஸ் வெச்சு.. சொன்னதை செய்த இங்கிலாந்து.. லீட் எடுத்தும் இந்தியா வரலாறு காணாத தோல்வி

IND vs ENG 2
- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக தங்களுடைய சொந்த மண்ணில் இந்தியா விளையாடும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் ஜனவரி 25ஆம் தேதி துவங்கியது. ஹைதராபாத் நகரில் துவங்கிய அத்தொடரின் முதல் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 246 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 70 ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக அஸ்வின் மற்றும் ஜடேஜா தலா 2 விக்கெட்கள் எடுத்தனர்.

அதைத்தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 436 ரன்கள் எடுத்து 190 ரன்கள் முன்னிலை பெற்றது. அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் 80, கேஎல் ராகுல் 86, ரவீந்திர ஜடேஜா 87, அக்சர் பட்டேல் 44 ரன்கள் எடுக்க இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக ஜோ ரூட் 4 விக்கெட்டுகளை சாய்த்தார். அதைத் தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்துக்கு ஜோ ரூட் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் ஏமாற்றத்தை கொடுத்தாலும் நெருக்கடியான நேரத்தில் ஓலி போப் அபாரமாக விளையாடி சவாலை கொடுத்தார்.

- Advertisement -

இந்தியா தோல்வி:
குறிப்பாக 2018க்குப்பின் சவாலான இந்திய மண்ணில் சதமடித்த வெளிநாட்டு வீரராக சாதனை படைத்த அவர் இரட்டை சத்தத்தை நழுவி விட்டாலும் 196 ரன்கள் குவித்து அசத்தினார். அதனால் இங்கிலாந்து 420 ரன்கள் குவித்து கம்பேக் கொடுத்த நிலையில் இந்தியா சார்பில் அதிகபட்சமாக பும்ரா 4, அஸ்வின் 3 விக்கெட்டுகள் எடுத்தனர். அதைத்தொடர்ந்து 231 என்ற இலக்கை துரத்தும் இந்தியாவுக்கு 42 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்த கேப்டன் ரோகித் சர்மாவை 39 ரன்களில் காலி செய்த டாம் ஹார்ட்லி அடுத்ததாக வந்த கில்லை டக் அவுட்டாக்கினார்.

போதாகுறைக்கு ஜெயிஸ்வாலும் 15 ரன்களில் அவுட்டானதால் 63/3 என இந்தியா தடுமாறியது. அப்போது நிதானமாக விளையாட முயற்சித்த அக்சர் படேல் 17 ரன்களில் அவுட்டாக பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேஎல் ராகுல் 22 ரன்களில் நடையை கட்டினார். அப்போது காப்பாற்ற வேண்டிய ஷ்ரேயஸ் ஐயர் 13 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்த நிலையில் ரவீந்திர ஜடேஜா 2 ரன்களில் ரன் அவுட்டானார்.

- Advertisement -

அதனால் 119/7 என மொத்தமாக சரிந்த இந்தியா 4வது நாளிலேயே தோற்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் அப்போது ஜோடி சேர்ந்த அஸ்வின் மற்றும் பரத் ஆகியோர் நிதானமாக விளையாடி சரிவை சரி செய்ய முயற்சித்தனர். இருப்பினும் 57 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த ஜோடியில் மீண்டும் பரத்தை 28 ரன்களில் அவுட்டாக்கிய ஹார்ட்லி அடுத்த சில ஓவர்களில் அஸ்வினையும் 28 ரன்களில் காலி செய்தார். இறுதியில் பும்ரா 6*, சிராஜ் 12 ரன்கள் எடுத்தும் இந்தியாவை 202 ரன்களுக்கு ஆல் அவுட்டாக்கிய இங்கிலாந்து 28 ரன்கள் வித்தியாசத்தில் வென்று 1 – 0* (5) என்ற கணக்கில் இத்தொடரில் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றுள்ளது.

இதையும் படிங்க: சரித்திர வெற்றியால் ஆனந்த கண்ணீர் விட்ட ஜாம்பவான் லாரா.. மகிழ்ச்சியில் அழுத கோச் கூப்பர்

குறிப்பாக முதல் 3 நாட்கள் செலுத்திய இந்தியா 4வது நாளில் சுழலுக்கு சாதகமாக மாறிய பிட்ச்சில் சுமாராக பேட்டிங் செய்து சொந்த மண்ணில் தோல்வியை சந்தித்தது. மேலும் சரித்திரத்தில் இல்லாத அளவுக்கு சொந்த மண்ணில் நடந்த ஒரு டெஸ்ட் போட்டியில் 100+ ரன்கள் (190) முன்னிலை பெற்றும் இந்தியா முதல் முறையாக போட்டியில் வரலாறு காணாத தோல்வியை சந்தித்துள்ளது. மறுபுறம் டாம் ஹார்ட்லி அதிகபட்சமாக 7 விக்கெட்டுகள் எடுத்ததால் வென்ற இங்கிலாந்து சொன்னதைப் போலவே இந்தியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்த துவங்கியுள்ளது.

Advertisement