இந்திய அணிக்கு தேர்வானது குறித்து உணர்ச்சிகரமான கருத்தினை பகிர்ந்த – ராகுல் திரிப்பாதி

- Advertisement -

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இந்தியா தனது சொந்த மண்ணில் பங்கேற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இதுவரை நடைபெற்ற 3 போட்டிகளின் முடிவில் 2 – 1* என்ற கணக்கில் தென்னாப்பிரிக்கா முன்னிலை வகிக்கிறது. தற்போதைய நிலைமையில் எஞ்சிய 2 போட்டிகளில் வென்றால் மட்டுமே கோப்பையை வெல்ல முடியும் என்ற இக்கட்டான நிலையில் இந்தியா உள்ளது. வரும் ஜூன் 19-ஆம் தேதியுடன் நிறைவுக்கு வரும் இந்த தொடரை முடித்துக் கொண்டு அயர்லாந்துக்கு செல்லும் இந்தியா அங்கு ஜூன் 26, 28 ஆகிய தேதிகளில் 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது.

அந்த தொடருக்கான இந்திய அணியை நேற்று பிசிசிஐ அறிவித்தது. ஜூலை 1-ஆம் தேதி இங்கிலாந்துக்கு எதிராக டெஸ்ட் போட்டியிலும் விளையாட வேண்டியுள்ளதால் ரோகித் சர்மா, விராட் கோலி, ஜஸ்பிரித் பும்ரா, புஜாரா என்ற முதல் தரமான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் தற்போதைய தென் ஆப்ரிக்க தொடரில் கேப்டனாக செயல்பட்டு வரும் ரிசப் பண்ட் இடம் பிடித்துள்ளதால் கத்து குட்டியான அயர்லாந்து தொடருக்கு சமீபத்திய ஐபிஎல் 2022 தொடரின் கோப்பையை கேப்டன்ஷிப் அனுபவம் இல்லாத போதிலும் அற்புதமான ஆல்-ரவுண்டராக செயல்பட்டு முதல் வருடத்திலேயே வென்று காட்டிய ஹர்திக் பாண்டியா கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

- Advertisement -

ராகுல் திரிபாதி:
அந்த அணியில் சீனியர் வீரர்கள் இல்லாததால் சமீபத்திய ஐபிஎல் தொடரில் அசத்திய 99% வீரர்களுக்கு இடம் கிடைத்துள்ளது. குறிப்பாக ஜாம்பவான் ஷேன் வார்னேவுக்கு பின் 13 வருடங்கள் கழித்து ராஜஸ்தானை பேட்ஸ்மேனாகவும் கேப்டனாகவும் அபாரமாக செயல்பட்டு பைனலுக்கு அழைத்துச் சென்ற கேரள வீரர் சஞ்சு சாம்சன் நீண்ட நாட்களுக்குப்பின் இந்திய அணிக்குத் திரும்பியுள்ளார். அதேபோல் சமீபத்தில் ஐபிஎல் தொடரில் காயத்தால் விலகிய நட்சத்திரம் சூர்யகுமார் யாதவ், நடைபெற்றுவரும் தென் ஆப்ரிக்க தொடரில் இடம் பிடிக்காத இளம் வீரர் தீபக் ஹூடா ஆகியோரும் அணிக்கு திரும்பியுள்ளனர்.

அதைவிட 31 வயது நிரம்பியுள்ள ராகுல் திரிபாதி இந்தியாவுக்காக விளையாட முதல் முறையாக தேர்வு செய்துள்ள இந்திய தேர்வு குழுவினர் ரசிகர்களின் மனதை குளிர்வித்துள்ளனர் என்றே கூறலாம். ஆம் மகாராஷ்டிரா அணிக்காக உள்ளூர் கிரிக்கெட்டில் கடந்த 2010 முதல் முடிந்த அளவுக்கு சிறப்பாக செயல்பட்டு வரும் இவர் ஐபிஎல் தொடரில் கடந்த 2017 முதல் புனே, ராஜஸ்தான், கொல்கத்தா, ஹைதெராபாத் ஆகிய அணிகளுக்காக சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.

- Advertisement -

கடுமையான போராட்டம்:
அதிலும் அறிமுகமான 2017 சீசனிலேயே 14 போட்டிகளில் 391 ரன்களைக் குவித்து அசத்திய அவருக்கு 2018, 2019, 2020 ஆகிய வருடங்களில் முழுமையான வாய்ப்பு கிடைக்கவில்லை. இருப்பினும் கிடைத்த வாய்ப்புகளில் அசத்தலாக செயல்பட்ட அவர் 2021 சீசனில் கொல்கத்தாவுக்காக 60 லட்சத்துக்கு பங்கேற்ற 17 போட்டிகளில் 397 ரன்களை 140.28 என்ற நல்ல ஸ்டிரைக் ரேட்டில் எடுத்து சிறப்பாக செயல்பட்டார். ஆனாலும் இந்திய தேர்வு குழு அவரை கண்டும் காணாமலேயே இருந்தது.

இருப்பினும் அதை பற்றி கவலைபடாமல் இந்த வருட ஐபிஎல் தொடரில் 8.5 கோடி என்ற பெரிய தொகைக்கு தன்னை வாங்கிய ஹைதராபாத் அணிக்காக 413 ரன்களை 37.55 என்ற நல்ல சராசரியில் 158.24 என்ற சூப்பரான ஸ்டிரைக் ரேட்டில் எடுத்து அற்புதமாக பேட்டிங் செய்தார். சொல்லப்போனால் முந்தைய ஐபிஎல் தொடர்களில் செயல்பட்டதை காட்டிலும் இந்த வருடம் தான் தனது கேரியரில் உச்சபட்சமாக ராகுல் திரிப்பாதி அபாரமாக செயல்பட்டார்.

- Advertisement -

அத்துடன் 1798 ரன்களுடன் ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்கள் எடுத்த சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடாத வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார். அதனால் ஐபிஎல் முடிந்ததும் நடக்கும் தென் ஆப்ரிக்க தொடரில் அவருக்கு கண்டிப்பாக வாய்ப்பு கிடைக்கும் என்று அனைவரும் நம்பினர். ஆனால் மீண்டும் அவரை தேர்வு குழு கண்டு கொள்ளாதது சுரேஷ் ரெய்னா உட்பட பல முன்னாள் வீரர்களின் கோபத்தை ஏற்படுத்தியது.

நிஜமான கனவு:
ஏனெனில் தற்போது 31 வயதைத் தொட்டு கேரியரின் உச்சத்தில் செயல்படும் இவருக்கு வாய்ப்பு கொடுக்க இதை விட்டால் வேறு நல்ல தருணம் அமையாது. அந்த நிலைமையில் தென்னாப்ரிக்க தொடரில் கழற்றி விட்டதால் விமர்சனங்களை வாங்கிக் கட்டிக்கொண்ட தேர்வுக் குழுவினர் இம்முறை வேறு வழியின்றி அவரை முதல் முறையாக தேர்வு செய்துள்ளனர். இதனால் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ள நிறைய முன்னாள் வீரர்களும் ரசிகர்களும் ராகுல் திரிபாதிக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுக்களை தெளித்து வருகின்றனர்.

இதையும் படிங்க : என்னுடைய இந்த வெறித்தனமான பேட்டிங்க்கு இதுதான் காரணம் – இங்கிலாந்து வீரர் சவுக்கடி பதில்

இந்நிலையில் தாய்நாட்டுக்காக விளையாட வேண்டும் என்ற கனவு தற்போது நிஜமாகியுள்ளதாக ராகுல் திரிபாதி உணர்ச்சியுடன் தெரிவித்தது பின்வருமாறு. “இது எனக்கு கனவு நிஜமான தருணம் என்பதுடன் மிகப்பெரிய வாய்ப்பாகும். என்னுடைய கடின உழைப்பு மீது தேர்வு குழுவினர் நம்பிக்கை வைத்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. இந்தியாவுக்காக களமிறங்கி விளையாடும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தால் நிச்சயமாக என்னால் முடிந்த அளவுக்கு சிறப்பாக செயல்படுவேன்” என்று பெருமிதத்துடன் கூறினார்.

Advertisement