
இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்று முடிந்த மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி 3 க்கு 0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. அதுமட்டுமின்றி 6 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது டி20 தரவரிசை பட்டியலிலும் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளது. தற்போது உள்ள இந்திய அணியில் மூத்த வீரர்கள் மற்றும் இளம் வீரர்கள் என அனைவரும் சரிசமமாக இருப்பதனால் இந்திய அணி சற்றுக் கூடுதல் பலத்துடன் மிகவும் சிறப்பாக தங்களது செயல்பாட்டை வெளிப்படுத்தி வருகிறது.
இப்போதெல்லாம் அணியில் இடம் பிடிக்கும் வீரர்களுக்கு இடையே கடுமையான போட்டி நிலவி வருவதால் நல்ல வீரர்கள் கூட பெஞ்சில் அமர வேண்டிய ஒரு ஆரோக்கியமான நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அப்படி நல்ல திறமை இருந்தும் வாய்ப்புகள் குறைவாக மட்டுமே பெற்று வரும் ருதுராஜ் கெய்க்வாட் தொடர்ச்சியாக இந்திய டி20 அணியில் இடம்பிடித்து வந்தாலும் இந்த வெஸ்ட் இண்டீஸ் தொடரில் தான் ஒரே ஒரு போட்டியில் விளையாடும் வாய்ப்பை பெற்றார்.
விஜய் ஹசாரே மற்றும் சையது முஷ்டாக் அலி தொடர் என உள்ளூர் தொடர்களில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் தொடர்ச்சியாக இந்திய அணியில் இடம் பிடித்து வந்தாலும் இலங்கை அணிக்கு எதிராக கடந்த ஆண்டு அறிமுகமாகிய பின்னர் தற்போது தான் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் விளையாடும் வாய்ப்பைப் பெற்றார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற மூன்றாவது போட்டியில் களமிறங்கிய அவர் 4 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்து வெளியேறியதால் இனி அவருக்கு வாய்ப்பு கிடைக்குமா என்ற கேள்வி எழுந்தது.
ஏனெனில் இந்திய அணிக்காக இதுவரை மூன்று போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 39 ரன்களை மட்டுமே குவித்துள்ளார். இந்நிலையில் ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு இந்திய அணியில் கிடைக்கும் வாய்ப்பு குறித்து பேசியுள்ள இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் அவருக்கு ஆதரவாக சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : டி20 கிரிக்கெட் என்பது ஒரு கடினமான ஃபார்மேட். இந்த வடிவ கிரிக்கெட் விளையாடுவது மிகவும் சவாலான ஒன்று.
அதனால் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் ஆவேஷ் கான் போன்றவர்களின் திறமையை ஒரே ஒரு போட்டியை வைத்து நாங்கள் மதிப்பிட மாட்டோம். அவர்கள் சிறப்பாக செயல்பட்டதால் தான் அணியில் இடம் பிடித்துள்ளார்கள். அதனால் தொடர்ந்து அவர்களுக்கு வாய்ப்புகளை வழங்குவோம் ஒரு வீரர் தொடர்ந்து அணியில் விளையாடும் பட்சத்தில் தான் அவரது திறமை வெளிப்படும். அதனால் இந்த ஒரு ஆட்டத்தோடு ருதுராஜ் கெய்க்வாட் அணியில் இருந்து நீக்கப்பட மாட்டார்.
இதையும் படிங்க : கேப்டன் பதவியேற்ற 3 மாதத்தில் சாதித்து காட்டிய ரோஹித். இந்திய அணி 6 வருஷத்துக்கு – பிறகு அடைந்த உச்சம்
நிச்சயம் அவருக்கு தேவையான வாய்ப்புகளை இந்திய அணி வழங்கும். அதோடு உலகக் கோப்பை தொடருக்கு முன்னர் அனைவருமே குறைந்தது 15 போட்டிகளாவது விளையாடி இருக்க வேண்டும் என்று நாங்கள் நினைக்கிறோம். அதன்படி இளம் வீரர்களுக்கு தொடர்ச்சியாக வாய்ப்புகள் கிடைக்கும் என்று ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு ஆதரவாக டிராவிட் பேசியது குறிப்பிடத்தக்கது.