
இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றியை நழுவ விட்டது. ஆகஸ்ட் இரண்டாம் தேதி கொழும்புவில் பெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை 50 ஓவரில் 230/8 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக துணித் வெல்லலாகே 67*, நிஷாங்கா 56 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியா சார்பில் அதிகபட்சமாக அக்சர் பட்டேல், அர்ஷ்தீப் சிங் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர்.
அதைத்தொடர்ந்து சேசிங் செய்த இந்திய அணிக்கு கேப்டன் ரோகித் சர்மா அதிரடியாக விளையாடி 58 ரன்கள் குவித்து நல்ல துவக்கத்தை கொடுத்தார். அதனால் 75/0 என்ற வலுவான துவக்கத்தை பெற்ற இந்தியா வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எதிர்ப்புறம் கில் 16, விராட் கோலி 24, ஸ்ரேயாஸ் ஐயர் 23, கேஎல் ராகுல் 31, அக்சர் பட்டேல் 33 ரன்களில் அவுட்டாகி பின்னடைவை ஏற்படுத்தினர்.
கம்பீர் விடமாட்டாரு:
இருப்பினும் கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடிய சிவம் துபே 25 ரன்கள் குவித்து போராடினார். ஆனால் அவரும் ஃபினிஷிங் செய்யாமல் அவுட்டானதால் 1 விக்கெட்டை கைவசம் வைத்திருந்த இந்தியாவுக்கு கடைசி 14 பந்துகளில் வெறும் 1 ரன் மட்டுமே தேவைப்பட்டது. அப்போது வந்த அர்ஷ்தீப் சிங் சிங்கிள் எடுத்து இந்தியாவை வெற்றி பெற வைப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.
ஆனால் எதிர்கொண்ட முதல் பந்திலேயே சிக்ஸர் அடிக்க முயற்சித்த அவர் டக் அவுட்டாகி இந்தியாவின் வெற்றியை கோட்டை விட்டார். அதனால் டி20 தொடரில் சந்தித்த தொடர் தோல்விகளை நிறுத்திய இலங்கை நிம்மதி பெருமூச்சு விட்டது. இருப்பினும் சிங்கிள் கூட எடுக்காமல் இந்தியாவின் வெற்றியை தாரை வார்த்த அர்ஷ்தீப் சிங்கை தற்போது பல ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில் அப்படி ஒரு ஷாட்டை அடித்து அவுட்டான அர்ஷ்தீப் சிங் பயிற்சியாளர் கௌதம் கம்பீரை கண்டிப்பாக இம்ப்ரஸ் செய்திருக்க மாட்டார் என்று முன்னாள் இந்திய வீரர் டோட்டா கணேஷ் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். அதனால் உடைமாற்றும் அறையில் கௌதம் கம்பீர் திட்டுவதற்கு வாய்ப்புள்ளதாக மறைமுகமாக தெரிவிக்கும் அவர் இது பற்றி ட்விட்டரில் பதிவிட்டுள்ளது பின்வருமாறு.
இதையும் படிங்க: இந்தியா இலங்கை அணிகளுக்கு இடையேயான போட்டி “டை” ஆன பின்னரும் சூப்பர் ஓவர் வீசப்படாதது ஏன்? – விவரம் இதோ
“நீங்கள் டெயில் எண்டர்களிடம் ரன்களை எதிர்பார்க்க முடியாது. ஆனால் எந்த ஒரு வீரருக்கும் கொஞ்சம் கிரிக்கெட்டைப் பற்றிய விழிப்புணர்வு மிகவும் முக்கியமானது. அர்ஷ்தீப்பின் அந்த ஷாட் கண்டிப்பாக பயிற்சியாளர் கம்பீரை இம்ப்ரஸ் செய்யப் போவதில்லை” என்று கூறினார். அதே போல அர்ஷ்தீப்பை உடைமாற்றும் அறையில் கௌதம் கம்பீர் கண்டிப்பாக திட்டியிருப்பார் என்று ரசிகர்களும் சமூக வலைதளங்களை பேசி வருவது குறிப்பிடத்தக்கது.