அப்படி ஐபிஎல் விளையாடியே தீரணும்னு அவசியம் ஒன்னுமில்லை – இந்திய வீரர்களுக்கு கபில் தேவ் மறைமுக பதிலடி

Kapil-Dev
- Advertisement -

வரும் அக்டோபர் 16ஆம் தேதி துவங்கும் 2022 ஐசிசி டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்று கோப்பையை வெல்வதற்காக ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு பயணித்துள்ளது. இத்தொடரில் பங்கேற்பதற்காக அறிவிக்கப்பட்ட 15 பேர் கொண்ட இந்திய அணியில் நம்பிக்கை நட்சத்திரம் முதன்மை வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா கடைசி நேரத்தில் காயத்தால் விலகியது மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இத்தொடரில் விளையாட வேண்டும் என்பதற்காகவே கடந்த ஒரு வருடமாக அயர்லாந்து, ஜிம்பாப்வே, வெஸ்ட் இண்டீஸ் போன்ற பெரும்பாலான தொடர்களில் ஓய்வெடுத்த அவர் இப்படி கடைசி நேரத்தில் காயமடைந்து வெளியேறியது நிறைய ரசிகர்களுக்கு அதிருப்தியாக அமைந்துள்ளது.

ஏனெனில் 2019 முதல் ஐபிஎல் தொடரில் மும்பை அணி விளையாடிய 60 போட்டிகளில் 59 போட்டிகளில் பங்கேற்ற அவர் அதே காலகட்டத்தில் இந்தியா விளையாடிய 70 போட்டிகளில் வெறும் 16 போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார் என்பது நிறைய ரசிகர்களை கடுப்பாக வைக்கிறது. அவரைப்போலவே ரோகித் சர்மா, விராட் கோலி, ராகுல் உட்பட பெரும்பாலான இந்திய வீரர்கள் இந்தியாவுக்காக என வரும்போது முக்கியமில்லாத போட்டிகளில் ஓய்வெடுத்து முக்கிய போட்டிகளில் மட்டுமே ராஜாவைப் போல் களமிறங்குகிறார்கள். இதுவே ஐபிஎல் தொடரில் கோடிகளை சம்பளமாக வாங்குவதால் யாருமே எந்த ஒரு போட்டியையும் எந்த காரணத்துக்காகவும் தவற விடுவதில்லை.

- Advertisement -

கபில் தேவ் கொட்டு:
இங்கு விஷயம் என்னவெனில் ஐபிஎல் தொடரில் 2 மாதங்களுக்கு மேல் இப்படி தொடர்ச்சியாக விளையாடுவதால் உடலளவிலும் மனதளவிலும் அழுத்தத்தை சந்தித்து சோர்வடையும் அவர்கள் அதிலிருந்து புத்துணர்ச்சி பெறுவதற்காக ஐபிஎல் முடிந்ததும் முக்கியமில்லாத சர்வதேச தொடர்களில் ஓய்வெடுக்கிறார்கள். அத்துடன் உலக கோப்பை மற்றும் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற அணிகளுக்கு எதிரான முக்கிய தொடர்களில் மட்டுமே அவர்கள் களமிறங்குகின்றனர். அதுபோக ரவீந்திர ஜடேஜா போன்ற வீரர்கள் ஐபிஎல் தொடரில் காயமடைந்து இந்தியாவுக்காக முக்கிய நேரத்தில் விளையாடும்போது விலகுவது வாடிக்கையாகி விட்டது.

இந்நிலையில் ஐபிஎல் விட இந்தியாவுக்காக விளையாடுவதற்கு இந்திய வீரர்கள் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று தெரிவிக்கும் முன்னாள் இந்திய கேப்டன் கபில் தேவ் அழுத்தத்துடன் உங்களை யாரும் ஐபிஎல் தொடரில் விளையாடுமாறு கேட்கவில்லை என்பதால் அழுத்தத்துடன் விளையாட வேண்டிய அவசியமில்லை என்றும் மறைமுகமாக விமர்சித்துள்ளார். இது பற்றி சமீபத்திய தனியார் நிகழ்ச்சியில் விருந்தினராக பங்கேற்ற அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“நான் லட்சியத்துடனும் அர்ப்பணிப்புடனும் விளையாடுவதை வழக்கமாக வைத்திருந்தேன். நான் கருப்பொருளை சற்று வித்தியாசமாக மாற்றினேன். இப்போதெல்லாம் ஐபிஎல் தொடரில் விளையாடுவதால் அங்கு சமாளிக்க முடியாத அதிகப்படியான அழுத்தத்தை சமாளிக்க வேண்டியுள்ளதாக அவர்கள் (வீரர்கள்) கூறுவதை நான் தொலைக்காட்சியில் நிறைய கேட்கிறேன். அவர்களுக்கு நான் ஒன்றை மட்டும் சொல்கிறேன். “தயவு செய்து விளையாடாதீர்கள்”. அத்துடன் அழுத்தம் என்பது என்ன? நீங்கள் அர்ப்பணிப்புடன் மகிழ்ச்சியுடன் விளையாடினால் உங்களுக்கு அழுத்தம் ஏற்படாது”

“அழுத்தம், மன அழுத்தம் போன்ற அமெரிக்க வார்த்தைகள் விளையாட்டில் அதிகம் வருவதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. நான் ஒரு விவசாயி, அங்கிருந்து தான் நான் வந்தேன். நான் மகிழ்ச்சிக்காக மகிழ்ச்சி இருக்கும் இடத்தில் விளையாடினேன் என்பதால் எனக்கு அங்கு அழுத்தம் ஏற்படவில்லை” என்று கூறினார். அதாவது கிரிக்கெட்டை நேசித்து மகிழ்ச்சியுடன் விளையாடும் போது அழுத்தம் வராது என்று தெரிவிக்கும் கபில் தேவ் அதுபோன்ற அழுத்தத்தை கொடுக்கும் கிரிக்கெட்டை விளையாட வேண்டும் என்ற கட்டாயமில்லை என்பதால் (ஐபிஎல்) விளையாட வேண்டாம் என்று விமர்சித்திருந்தார்.

- Advertisement -

அத்துடன் இப்போதெல்லாம் 10வது படிக்கும் பள்ளி சிறுவர்கள் கூட ஆசிரியர்கள் அடிக்காத போதிலும் அழுத்தத்துடன் படிப்பதாக தெரிவிக்கும் அவர் தங்களது பெற்றோர்கள் படிக்க வைப்பதற்காக எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் என்பதை புரிந்து கொள்ளாமல் இருப்பதாகவும் கவலை தெரிவித்தார்.

இதையும் படிங்க : IND vs RSA : டாஸ் போடும்போதே இப்படி ஒரு சம்பவமா? மைதானத்தில் எழுந்த சிரிப்பலை – வீடியோ இதோ

மேலும் தங்களது காலத்தில் முதலில் அடித்து விட்டு பின்பு தான் ஆசிரியர்கள் பேசுவார்கள் என்று தெரிவித்த அவர் இப்போதெல்லாம் களத்தில் வீரர்கள் முதல் பள்ளியில் குழந்தைகள் வரை அனைவருக்கும் தேவையான வசதிகள் கிடைத்தும் அதில் அவர்கள் மகிழ்ச்சியுடன் செயல்படாமல் அழுத்தத்தில் செயல்படுவதாக கூறுவது வேடிக்கையாக உள்ளதாக கூறினார். அவர் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisement