2.5 நாளில் மேட்ச் முடிவது சரியா? ஸ்பின் விளையாட தெரியாம எப்படி 100 போட்டில விளையாடிருப்பிங்க – கெளதம் கம்பீர் விமர்சனம்

Gautam Gambhir
- Advertisement -

உலகின் நம்பர் ஒன் கிரிக்கெட் அணியான ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் முதலிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்று ஆரம்பத்திலேயே கோப்பையை கைப்பற்றிய இந்தியா 3வது போட்டியில் தோற்றது. அதன் காரணமாக லண்டன் ஓவல் மைதானத்தில் ஜூன் மாதம் நடைபெறும் 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு தகுதி பெற கடைசி போட்டியில் வென்றாக வேண்டிய வாழ்வா – சாவா நிலைமைக்கு இந்தியா தள்ளப்பட்டுள்ளது. முன்னதாக இந்த தொடரில் சுழலுக்கு சாதகமான மைதானங்கள் இருந்து வருவது ஆரம்பம் முதலே மிகப்பெரிய சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது.

Pujara

- Advertisement -

ஆரம்பத்தில் இந்தியா வெற்றி பெறுவதற்கு வேண்டுமென்றே இந்த மாதிரியான பிட்ச்களை அமைத்து வருவதாக ஆஸ்திரேலியா குற்றம் சாட்டியது. இருப்பினும் அதற்கு மறுப்பும் பதிலடியும் தெரிவித்து வந்த இந்தியாவைச் சேர்ந்தவர்களே தற்போது இந்தியாவில் அமைக்கப்படும் பிட்ச் பற்றி விமர்சிக்க துவங்கியுள்ளனர். ஏனெனில் என்ன தான் இந்தியாவில் சுழல் இருப்பது இயற்கை என்றாலும் அதற்காக எந்த போட்டியுமே 3 நாட்கள் தாண்டாத அளவுக்கு இரண்டரை நாட்களில் முடிந்து விடுகிறது.

கம்பீர் விமர்சனம்:
மேலும் பொதுவாக இந்தியாவில் கடைசி 2 நாட்களில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஸ்பின்னர்கள் இப்போதெல்லாம் முதல் நாளிலேயே விக்கெட்டுகளை கொத்தாக எடுக்கிறார்கள். அதனால் இப்போதெல்லாம் வேகப்பந்து வீச்சாளர்கள் தாக்கத்தை ஏற்படுத்துவதையும் பேட்ஸ்மேன்கள் சதமடிப்பதையும் இந்தியாவில் பார்க்க முடிவதில்லை. ஆனால் 5 நாட்களும் சரிசமமாக பேட்டிங் பவுலிங் ஆகிய இரண்டும் மோதிக் கொள்வதே தரமான டெஸ்ட் போட்டியாகும்.

IND vs AUS Indore Pitch

இருப்பினும் தங்களது பலமான சுழல் பந்து வீச்சை பயன்படுத்தி வெற்றி பெற தாங்கள் தான் இவ்வாறான மைதானங்களை அமைக்க சொல்வதாக கேப்டன் ரோகித் சர்மாவும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு தகுதி பெற இந்த மாதிரியான பிட்ச்களை அமைக்க சொல்வதாக பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டும் சமீபத்திய பேட்டிகளில் வெளிப்படையாக தெரிவித்தனர். இந்நிலையில் சுழலுக்கு சாதகமான மைதானங்கள் இருப்பது ஏற்றுக் கொள்ளக் கூடியது என்றாலும் அதற்காக பெரும்பாலான போட்டிகள் இரண்டரை நாட்களில் முடிவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று முன்னாள் இந்திய வீரர் கௌதம் கம்பீர் விமர்சித்துள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“சுழலுக்கு சாதகமான மைதானங்களில் விளையாடுவது சரி என்றே நான் கருதுகிறேன். ஆனால் அதற்காக டெஸ்ட் போட்டிகள் இரண்டரை நாட்களில் முடிவதை நான் பாராட்டவில்லை. மாறாக சமீபத்தில் நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிய போட்டி போல பெரும்பாலான போட்டிகள் கடைசி நாள் வரை பரபரப்பாக நடப்பதை விரும்புகிறேன். இல்லையென்றாலும் கூட குறைந்தது 4 அல்லது 5வது நாள் வரை ஒரு டெஸ்ட் போட்டி சென்றால் சிறப்பாகும். ஆனால் இரண்டரை நாட்கள் என்பது மிகவும் குறைவானது” என்று கூறினார்.

Gambhir

முன்னதாக ஒரு காலத்தில் தரமான சுழல் பந்து வீச்சை எதிர்கொண்ட சச்சின், டிராவிட், லக்ஷ்மன் ஆகியோரிடம் இருந்த திறமை தற்போதைய இந்திய அணியில் இருக்கும் விராட் கோலி, ரோஹித் சர்மா போன்றவர்களிடம் இல்லை என்று சில முன்னாள் ஆஸ்திரேலிய வீரர்கள் விமர்சித்தனர். ஆனால் அந்த திறமை இல்லையென்றால் விராட் கோலி, புஜாரா போன்றவர்களால் நீண்ட காலம் தாக்குப்பிடித்து 100 போட்டிகளில் விளையாடியிருக்க முடியாது என்று தெரிவிக்கும் கம்பீர் இது பற்றி மேலும் பேசியது பின்வருமாறு.

இதையும் படிங்க:IND vs AUS : 4 ஆவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதுதான் – உத்தேச பட்டியல் இதோ

“நான் அவ்வாறு நினைக்கவில்லை. புஜாரா, விராட் கோலி, ரோஹித் சர்மா போன்றவர்கள் தரமான சுழல் பந்து வீச்சை எதிர்கொள்ளும் திறமையுடையவர்கள். ஒருவேளை அந்த திறமை அவர்களிடம் இல்லாமல் போயிருந்தால் 100 போட்டிகளில் விளையாடியிருக்க முடியாது. வேகம் மற்றும் சுழல் ஆகிய இரண்டையும் சிறப்பாக எதிர்கொள்ள தெரிந்தால் மட்டுமே உங்களால் 100 போட்டிகளில் விளையாட முடியும். இருப்பினும் டிஆர்எஸ் அதில் சிறிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது டிஆர்எஸ் இல்லாத காலங்களில் எல்பிடபுள்யூ முறையில் அவுட்டாகும் போது அடுத்த முறை அதுக்கு தவிர்ப்பதற்காக பேட்ஸ்மேன்கள் அதைப்பற்றி அதிகம் பேசாமல் சில டெக்னிக்கை மாற்றுவார்கள்” என்று கூறினார்.

Advertisement