
கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரை கைப்பற்றிய ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியானது 2007-ஆம் ஆண்டிற்கு பின்னர் டி20 உலக கோப்பையை தங்கள் வசமாக்கி அசத்தியிருந்தது. அதனை தொடர்ந்து ரோகித் சர்மா டி20 போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தார். பின்னர் 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரை வென்ற கையோடு டெஸ்ட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்றார்.
எனவே தற்போது ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாட முடிவெடுத்துள்ள அவர் 2027 உலக கோப்பை தொடருடன் ஒட்டுமொத்தமாக சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவிப்பார் என்று தெரிகிறது. ஆனால் 2027 ஒருநாள் உலக கோப்பை தொடருக்கு முன்னதாக அவருக்கு 40 வயதை நெருங்கிவிடும் என்பதனாலும் ஒரே ஃபார்மேட்டில் அவர் தொடர்ச்சியாக நீடிப்பது கடினம் என்பதனாலும் அவர் ஓய்வுபெற தற்போதே அழுத்தங்கள் அதிகரித்துள்ளன.
ஆனால் 2027 ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் ரோஹித் சர்மா கேப்டனாக இல்லை என்றாலும் ஒரு துவக்க வீரராக இந்திய அணியில் இடம்பெற வேண்டும் என ரோகித் சர்மாவின் சிறுவயது பயிற்சியாளரான தினேஷ் லாட் தனது கருத்தினை தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் :
என்னை பொறுத்தவரை ரோகித் சர்மா 2027 ஒருநாள் உலக கோப்பை தொடரில் நிச்சயம் விளையாட வேண்டும். ஏனெனில் அவருக்கு உலக கோப்பைகளை வெல்ல வேண்டும் என்ற கனவு சிறுவயதிலிருந்தே இருந்து வருகிறது. ஏற்கனவே டி20 உலக கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபி தொடரை வென்ற அவர் ஒருநாள் உலக கோப்பையையும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்.
2011-ஆம் ஆண்டு இந்திய அணி ஒருநாள் உலக கோப்பையை கைப்பற்றிய போது அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. எனவே அதனை பூர்த்தி செய்யும் விதமாக அடுத்த உலக கோப்பை தொடரை அவர் குறி வைத்துள்ளார். கேப்டனாக இருக்கிறாரோ இல்லையோ அடுத்த ஒருநாள் உலக கோப்பையில் அவர் ஒரு வீரராக நீடிக்க வேண்டும்.
இதையும் படிங்க : முக்கியமான அந்த தொடர்களில் ஜெயிக்கனும்னா ஹார்டிக் பாண்டியா தேவை – கிரேக் மேக்மில்லன் கருத்து
அவருடைய இடம் தற்போது தேர்வுக்குழுவினரின் கையில் தான் உள்ளது. ஆனால் இன்னமும் ரோகித் சர்மாவிடம் வெற்றிக்கான வெறியும், உலக கோப்பையை கைப்பற்ற வேண்டும் என்ற எண்ணமும் உள்ளது. எனவே அவர் 2027 நாள் உலக கோப்பை தொடரில் விளையாட வேண்டும் என தினேஷ் லாட் கூறியது குறிப்பிடத்தக்கது.