தர்ம சங்கடம் தான் ஆனால் என்ன செய்வது? வளர்த்த தமிழக வீரரை ஸ்லெட்ஜ்சிங் செய்ய தயாரான தினேஷ் கார்த்திக்

Karthik
- Advertisement -

பரபரப்புடன் நடைபெற்று வரும் ஐபிஎல் 2022 தொடரில் மார்ச் 30-ஆம் தேதியான நேற்று நடந்த 6-வது லீக் போட்டியில் கொல்கத்தா மற்றும் பெங்களூர் ஆகிய அணிகள் மோதின. மும்பையில் பரபரப்பாக நடந்த அந்த போட்டியில் பெங்களூரு வெறும் 3 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. அந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை அடுத்து களமிறங்கிய கொல்கத்தா பெங்களூருவின் அதிரடியான பந்துவீச்சுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் வெறும் 128 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணிக்கு வெங்கடேஷ் ஐயர், நித்தீஷ் ராணா, கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் என அனைத்து வீரர்களும் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தனர்.

KKR vs RCB Hasaranga

- Advertisement -

பினிசிங் செய்த தினேஷ் கார்த்திக்:
அதனால் 100 ரன்களை தொடுமா என எதிர்பார்த்த கொல்கத்தாவுக்கு நல்லவேளையாக 18 பந்துகளில் 3 சிக்ஸர்கள் உட்பட 25 ரன்களை தெறிக்கவிட்ட அதிரடி வீரர் ஆண்ட்ரே ரசல் ஓரளவு மானத்தைக் காப்பாற்றினார். பெங்களூர் சார்பில் பந்துவீச்சில் மிரட்டிய இலங்கையின் வணிந்து ஹசரங்கா 4 விக்கெட்டுகளையும் ஆகாஷ் தீப் 3 விக்கெட்டுகளையும் ஹர்சல் பட்டேல் 2 விக்கெட்டுகளையும் சாய்த்தனர். அதை தொடர்ந்து வெறும் 129 என்ற எளிய இலக்கை துரத்திய பெங்களூரு அணியின் தொடக்க வீரர் அனுஜ் ரவாட் முதல் ஓவரிலேயே டக் அவுட்டாக 2-வது ஓவரில் கேப்டன் டு பிளசிஸ் 5 ரன்களில் அவுட்டானார்.

போதாக்குறைக்கு விராட் கோலியும் 12 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றியதால் 17/3 என திணறிய பெங்களூரு திடீரென  தடுமாறியது. இருப்பினும் நடுவரிசையில் பொறுப்புடன் பேட்டிங் செய்த ரூதர்போர்ட் 28 ரன்களும் டேவிட் வில்லி 18 ரன்களும் எடுக்க அடுத்து வந்த சபாஸ் அஹமத் 27 ரன்கள் எடுத்ததால் போட்டியில் பரபரப்பு தொற்றிக்கொண்டது. குறிப்பாக கடைசி ஓவரில் வெற்றிக்கு 7 ரன்கள் தேவைப்பட்ட போது முதல் பந்தில் சிக்ஸர் பறக்க விட்ட தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் அடுத்த பந்தில் பவுண்டரி 7 பந்துகளில் 14* ரன்களை விளாசி அதிரடியான பினிஷிங் செய்து பெங்களூருக்கு வெற்றியைத் தேடிக் கொடுத்தார்.

dk

தினேஷ் கார்த்திக் – வருண் சக்கரவர்த்தி:
இந்த போட்டியில் பெங்களூரு அணியில் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் விளையாட எதிரணியான கொல்கத்தாவில் மற்றொரு தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி விளையாடியது தமிழக ரசிகர்களுக்கு வித்தியாசமான உணர்வை கொடுத்தது. ஏனெனில் கடந்த சில வருடங்களாக கொல்கத்தா அணியில் விளையாடிய இவர்கள் ஒன்றாக ஜோடி சேர்ந்து அந்த அணிக்கு பல வெற்றிகளை தேடி கொடுத்தனர்.

- Advertisement -

அதிலும் கொல்கத்தா அணிக்காக இவர்கள் சேர்ந்து விளையாடிய போது மற்ற வீரர்கள் அனைவரும் ஆங்கிலம் மற்றும் இந்தியில் பேசிக்கொண்டிருக்க இவர்கள் மட்டும் அழகு தமிழில் பேசி தமிழக ரசிகர்களை திரும்பிப் பார்க்க வைத்தனர். அதிலும் குறிப்பாக கொல்கத்தாவின் கேப்டனாகவும் விக்கெட் கீப்பராகவும் இருந்த தினேஷ் கார்த்திக் பெரும்பாலும் தமிழ் தெரியாத எதிரணி பேட்ஸ்மேன்களை எவ்வாறு அவுட் செய்வது போன்ற திட்டங்களை வருன் சக்ரவர்த்தியிடம் தமிழிலேயே பேசி அதில் வெற்றியும் கண்டார். அதுபோல அவர்கள் தமிழில் பேசிக்கொண்டது ஸ்டம்ப் மைக்கின் வாயிலாக கேட்டு ரசித்த தருணங்களை தமிழக ரசிகர்கள் இப்போதும் கூட மறக்கவில்லை.

varun 1

வருணை வளர்த்த கார்த்திக்:
மேலும் தமிழகத்தில் யாருமே அறியாமல் உள்ளூரில் மட்டும் விளையாடிக் கொண்டிருந்த வருண் சக்கரவர்த்தியின் திறமையை கண்டறிந்த அப்போதைய கொல்கத்தா கேப்டன் தினேஷ் கார்த்திக் அவரை அந்த அணிக்காக விளையாட வைக்க கொல்கத்தா அணி நிர்வாகத்திடம் பேசி சம்மதம் வாங்கி ஏலத்தில் வாங்க வைத்தார். அதன்பின் கொல்கத்தா அணியில் மிகச் சிறப்பாக செயல்பட்ட வருண் சக்கரவர்த்தி தடுமாறிய போதெல்லாம் தினேஷ் கார்த்திக் அவரின் அருகே சென்று தமிழில் பேசி அவருக்கு ஊக்கத்தையும் உத்வேகத்தையும் கொடுத்தார். அதன் காரணமாக இன்று நல்ல பவுலராக உருவெடுத்துள்ள அவர் சமீபத்தில் நடந்த டி20 உலக கோப்பையில் இந்தியாவிற்காக விளையாடும் அளவுக்கு முன்னேறினார்.

- Advertisement -

ஆனால் ஆச்சரியம் என்னவெனில் அவரை தக்கவைத்த கொல்கத்தா இந்த வருடம் தினேஷ் கார்த்திக்கை கழற்றி விட்டது. அப்படிப்பட்ட நிலையில் தற்போது பெங்களூர் அணிக்காக விக்கெட் கீப்பிங் செய்யும் போது வருண் சக்கரவர்த்தி பேட்டிங் செய்ய வரும் போது தேவைப்பட்டால் ஸ்லெட்ஜிங் செய்வேன் என தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார். இதுபற்றி ஆர்சிபி இணையதளத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “ஒருவேளை பேட்டிங் செய்ய வருண் சக்ரவர்த்தி களத்திற்கு வந்தால் கண்டிப்பாக அவருக்கு தமிழில் தேவையான பதிலடியை கொடுப்பேன்.

varun

கொல்கத்தா அணியில் இருந்து பெங்களூர் அணிக்காக விளையாட வந்ததால் தமிழில் பேச முடியாமல் தவிக்கப் போகிறேன். ஏனெனில் பெங்களூர் அணியில் இருக்கும் பவுலர்கள் அனைவரும் ஆங்கிலம் அல்லது ஹிந்தி மட்டுமே பேசக் கூடியவர்களாக உள்ளனர். கொல்கத்தா அணியில் தற்போது வருன் சக்ரவர்த்தி மற்றும் சுனில் நரேன் ஆகியோர் எதிரணிக்கு தொல்லை கொடுக்கக்கூடிய நல்ல பவுலர்களாக உள்ளனர்” என கூறினார்.

இதையும் படிங்க : இந்த ஒரே பந்துதான் என் வாழ்க்கையையே மாத்திடுச்சு – 2006இல் நடந்த சுவாரசியத்தை பகிரும் ப்ராவோ

என்னதான் ஒரே மாநிலத்தைச் சேர்ந்த வீரர்களாக இருந்தாலும் வளர்த்த வீரராக இருந்தாலும் தற்போது எதிரெதிர் அணியில் இருப்பதால் வருண் சக்கரவர்த்தியை அதுவும் தமிழில் ஸ்லெட்ஜிங் செய்ய தயார் என கூறியுள்ள தினேஷ் கார்த்திக் இது தர்மசங்கடமான சூழ்நிலை என்றாலும் நாங்கள் வாங்கும் சம்பளத்திற்காக அந்த அந்த அணிக்காக நேர்மையாக நடந்துகொள்ள வேண்டும் என தெரிவித்தார். நல்லவேளையாக நேற்று நடைபெற்ற முதல் போட்டியில் இந்த 2 வீரர்களும் ஸ்லெட்ஜிங் செய்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement