இந்த ஒரே பந்துதான் என் வாழ்க்கையையே மாத்திடுச்சு – 2006இல் நடந்த சுவாரசியத்தை பகிரும் ப்ராவோ

Bravo Yuvi
- Advertisement -

ரசிகர்களின் பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் கோலாகலமாக தொடங்கிய ஐபிஎல் 2022 கிரிக்கெட் தொடர் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் கொல்கத்தாவை எதிர்கொண்ட நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் 6 விக்கெட் வித்தியாசத்தில் பரிதாப தோல்வியடைந்தது. முன்னதாக கொல்கத்தாவுக்கு எதிராக நடந்த முதல் போட்டியில் அந்த அணி வெற்றி பெற 132 என்ற இலக்கை நிர்ணயித்த சென்னை அணியின் வெற்றிக்கு வெஸ்ட் இண்டீசை சேர்ந்த நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் டுவைன் பிராவோ அபாரமாக பந்துவீசி தனி ஒருவனாக போராடினார் என்றே கூறலாம்.

ஏனெனில் இதர பந்துவீச்சாளர்கள் தடுமாறிய நிலையில் 4 ஓவர்களை வீசிய அவர் 20 ரன்களைக் கொடுத்து அந்தப் போட்டியில் மொத்தமாக சென்னை எடுத்த 4 விக்கெட்டுகளில் 3 விக்கெட்டுகளை சாய்த்தார். தற்போது 38 வயதை கடந்துவிட்ட இவர் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக ஓய்வுபெற்ற போதிலும் ஐபிஎல் போன்ற டி20 தொடர்களில் தொடர்ந்து விளையாடி வருகிறார்.

- Advertisement -

டி20 கிரிக்கெட்டின் ராஜா:
இவரின் வயதை கடந்த பெரும்பாலான வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்படுவதற்கு தடுமாறும் வேளையில் ட்வயன் ப்ராவோ மட்டும் தொடர்ந்து உலகம் முழுவதிலும் நடைபெறும் அனைத்து பிரீமியர் லீக் டி20 தொடர்களிலும் தவறாமல் அட்டனன்ஸ் போட்டு அதில் அபாரமாகவும் செயல்பட்டு வருகிறார். சொல்லப்போனால் வயது அதிகரிக்க அதிகரிக்க இவரின் செயல்பாடுகள் பெருகிக் கொண்டு போகிறது. அந்த வகையில் கடந்த பல வருடங்களாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடி வரும் அவர் ஒரு ஆல்-ரவுண்டராக அந்த அணியின் பல சரித்திர வெற்றிகளில் பங்காற்றி வருகிறார்.

ஐபிஎல் மட்டுமல்லாது ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பிக் பேஷ் உள்ளிட்ட உலகின் அனைத்து டி20 தொடர்களிலும் தவறாமல் பங்கேற்கும் இவர் இதுவரை 523 டி20 போட்டிகளில் விளையாடி 495 இன்னிங்ஸ்சில் 574 விக்கெட்டுகளை எடுத்து டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிக விக்கெட்டுகள் எடுத்த பந்துவீச்சாளர் என்ற சரித்திர சாதனை படைத்துள்ளார். இவருக்கு அடுத்தபடியாக உலகில் வேறு எந்த பவுலரும் 500 டி20 விக்கெட்டுகளைக்கூட தொடவில்லை என்பதிலிருந்தே இவரின் தரம் பற்றி புரிந்து கொள்ளலாம். இப்படி டி20 கிரிக்கெட்டில் ராஜாவாக வலம் வரும் ட்வயன் பிராவோ தாம் இந்த அளவுக்கு வளர இந்தியாவின் முன்னாள் நட்சத்திர வீரர் யுவராஜ் சிங்க்கு வீசிய ஒரு பந்து தான் காரணம் என்று கூறியுள்ளார்.

- Advertisement -

2006இல் நடந்த பின்னணி:
இது பற்றி அவர் அளித்த ஒரு பேட்டியில் பேசியது பின்வருமாறு. “இந்த உலகில் என்னை ஒரு சிறந்த பந்துவீச்சாளராக அடையாளம் காட்டியதற்கு அதுதான் காரணம். அதுதான் எனது டி20 கேரியரை உருவாக்கியது. சொல்ல வேண்டுமெனில் அந்த நேரத்தில் எந்த மாதிரியான பந்தை வீச வேண்டுமென தெரியாமல் இருந்தேன். அப்போதும் கூட பந்து வீசும்போது என்ன பந்துவீச வேண்டுமென யோசிக்கவில்லை. ஒரு கட்டத்தில் பந்துவீச ஓடி வரும்போது அம்பயரிடம் செல்வதற்கு முன் அதுபோன்ற டிப்பர் பந்தை வீசப் போகிறேன் என முடிவு செய்தேன்” எனக்கூறிய அவர் தனது வாழ்நாளில் வீசிய சிறந்த பந்தை பற்றி கேள்வி எழுப்பிய போது “நிறைய பந்துகள் உள்ளது. இருப்பினும் ஒரு பந்தை தேர்வு செய்ய வேண்டுமெனில் யுவராஜ் சிங்க்கு வீசிய அந்த பந்து எனது வாழ்க்கையையே மாற்றிவிட்டது” என தெரிவித்தார்.

அவர் கூறும் அந்த தருணமானது கடந்த 2006-ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீசுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட ராகுல் ட்ராவிட் தலைமையிலான இந்திய அணி பங்கேற்ற 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் நிகழ்ந்ததாகும். ஜமைக்காவில் தொடங்கிய அந்த தொடரின் முதல் போட்டியில் அபார வெற்றி பெற்ற இந்திய அணி 2-வது போட்டியில் 199 என்ற இலக்கை துரத்தியது. அப்போது ராகுல் டிராவிட், வீரேந்திர சேவாக் என இதர அனைத்து இந்திய வீரர்களும் பெரிய ரன்கள் எடுக்க முடியாமல் அடுத்தடுத்து அவுட்டாகி வந்த நிலையில் 4-வது வீரராக களமிறங்கிய யுவராஜ் சிங் மட்டும் நங்கூரமாக நின்று இந்தியாவின் வெற்றிக்காக போராடினார்.

- Advertisement -

அந்த போட்டியில் மொத்தம் 121 பந்துகளில் 93 ரன்கள் எடுத்த அவர் இந்தியா 9 விக்கெட்டுகளை இழந்து கடைசி 5 பந்துகளில் வெற்றிக்கு 10 ரன்கள் தேவை என்ற நிலையில் ட்வயன் ப்ராவோ வீசிய கடைசி ஓவரை எதிர்கொண்டார்.

அந்த கடைசி ஓவரின் 2-வது பந்தில் பவுண்டரி பறக்கவிட்ட யுவராஜ்சிங் 3-வது பந்திலும் பவுண்டரியை தெறிக்க விட்டார். இதனால் 3 பந்துகளில் வெற்றிக்கு 2 ரன்கள் மட்டும் போதும் என்ற நிலையால் இந்தியா வெற்றி பெற்றுவிடும் என அனைவரும் எதிர்பார்க்க 4-வது பந்தை அபாரமாக வீசிய ட்வயன் ப்ராவோ தனி ஒருவனாக நின்ற யுவராஜ் சிங்கை க்ளீன் போல்ட்டாக்கி வெஸ்ட் இண்டீஸ் அணியை வெறும் 1 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றிபெற வைத்தார்.

இதையும் படிங்க : அப்படி என்ன லிங்க் ! இந்திய வீரருக்கு வாழ்த்து தெரிவித்த அமெரிக்க நீலப்பட நடிகை – ரசிகர்கள் ஷாக்

இந்திய ரசிகர்களின் நெஞ்சை உடைத்த யுவராஜ் சிங்கை கிளீன் போல்டாக்கிய அந்த பந்துதான் நாளடைவில் டி20 போட்டிகளில் எவ்வாறு பந்துவீசி சிறப்பாக செயல்பட வேண்டும் என கற்றுக் கொடுத்ததாக ட்வயன் ப்ராவோ மனம் திறந்துள்ளார். அந்தப் பந்து தான் தமது வெற்றிகரமான கிரிக்கெட் கேரியரின் ரகசியம் எனவும் அவர் கூறினார்.

Advertisement