RR vs RCB : வரலாறு படைத்த போட்டியில் பிளான் போட்டு கோலியை தூக்கிய இளம் வீரர் – மீண்டும் சொதப்பிய டிகே மோசமான சாதனை

- Advertisement -

உச்சகட்ட பரபரப்புடன் நடைபெற்று வரும் ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் மே 14ஆம் தேதி மதியம் 3.30 மணிக்கு ஜெய்ப்பூரில் நடைபெற்ற 60வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய அணிகள் மோதின. அதில் புள்ளி பட்டியலில் 5வது இடத்தில் இருக்கும் ராஜஸ்தான் மற்றும் 7வது இடத்தில் இருக்கும் பெங்களூரு ஆகிய 2 அணிகளுமே பிளே ஆப் சுற்றுக்கு செல்ல நிச்சயம் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கின. அப்படிப்பட்ட முக்கியமான போட்டியில் டாஸ் அதிர்ஷ்டத்தை பெற்ற பெங்களூரு முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

அதை தொடர்ந்து களமிறங்கிய அந்த அணிக்கு கேப்டன் டு பிளேஸிஸ் அதிரடியை துவங்கிய போதிலும் 7 ஓவர்கள் வரை பெயருக்காக 50 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்த நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி தடுமாற்றமாகவே செயல்பட்டார். அந்த நிலைமையில் 7வது ஓவரை வீசிய இளம் வீரர் கேஎம் ஆசிப் கடைசி பந்தை வேகத்தை குறைத்து மிகவும் மெதுவாக வீசினார்.

- Advertisement -

அந்தத் திட்டத்தை சரியாக கணிக்க தவறிய விராட் கோலி இறங்கி அடிக்க முயற்சித்து டாப் எட்ஜ் கொடுத்த கேட்ச்சை ஜெய்ஸ்வால் கச்சிதமாக பிடித்ததால் 18 (19) ரன்களில் அவுட்டாகி பின்னடைவை கொடுத்தார். குறிப்பாக 2008 முதல் பெங்களூரு அணிக்காக விளையாடி வரும் அவர் ஐபிஎல் வரலாற்றில் ஒரு குறிப்பிட்ட அணிக்காக 250 போட்டிகளில் விளையாடிய முதல் வீரர் என்ற வரலாற்று சாதனையுடன் இந்த போட்டியில் களமிறங்கிய போதிலும் சொற்ப ரன்களில் அவுட்டாகி ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்தார்.

அவருக்கு அடுத்தபடியாக அந்த சாதனை பட்டியலில் சென்னை அணிக்காக எம்எஸ் தோனி 240 போட்டிகளில் விளையாடி 2வது இடத்தில் உள்ளார். அந்த நிலைமையில் களமிறங்கிய கிளன் மேக்ஸ்வெல் வழக்கம் போல அதிரடியாக விளையாடினார். அவருடன் ஜோடி சேர்ந்த அசத்திய கேப்டன் டு பிளேஸிஸ் 2வது விக்கெட்டுக்கு 69 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து 3 பவுண்டரி 2 சிக்சருடன் 55 (44) ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

- Advertisement -

ஆனால் அப்போது களமிறங்கிய மகிபால் லோம்ரர் 1 (2) ரன்னில் ஆடம் ஜாம்பா சுழலில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்த நிலையில் அடுத்ததாக வந்த தினேஷ் கார்த்திக் பினிஷிங் செய்யாமல் அதே ஓவரில் டக் அவுட்டாகி சென்றார். அதன் வாயிலாக ஐபிஎல் வரலாற்றில் அதிக முறை டக் அவுட்டான வீரர் என்ற மோசமான சாதனையை ரோகித் சர்மாவுடன் (இருவரும் தலா 16*) அவர் பகிர்ந்து கொண்டார். இருப்பினும் மறுபுறம் தொடர்ந்து அசத்தலாக செயல்பட்ட கிளன் மேக்ஸ்வெல் 5 பவுண்டரி 3 சிக்சரை பறக்க விட்டு 54 (33) ரன்கள் குவித்து கடைசி நேரத்தில் ஆட்டமிழந்தார்.

அதனால் கடைசி நேரத்தில் பினிஷிங் செய்வதற்கு ஆள் இல்லாமல் தடுமாறிய பெங்களூருவுக்கு தம்மாலும் முடியும் என்ற வகையில் 3 பவுண்டரி 2 சிக்சரை பறக்க விட்ட இளம் வீரர் அனுஜ் ராவத் 29* (11) ரன்கள் அடித்து ஓரளவு காப்பாற்றினார். அதனால் 20 ஓவர்களில் பெங்களூரு 171/5 ரன்கள் எடுத்த நிலையில் ராஜஸ்தான் சார்பில் அதிகபட்சமாக ஆடம் ஜாம்பா மற்றும் கேஎம் ஆசிப் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் சாய்த்தனர்.

இதையும் படிங்க: வீடியோ : இவர்கிட்ட அருமையான திறமை இருக்கு, 2020லயே கணித்த சச்சின் – உதவியால் சாதித்ததை பற்றி ப்ரப்சிம்ரன் சிங் பேட்டி

இருப்பினும் கூட பேட்டிங்கு சாதகமான ஜெய்ப்பூர் மைதானத்தில் இதற்கு முன் 200 ரன்கள் எளிதாக சேசிங் செய்யப்பட்டுள்ளதால் பெங்களூரு 20 – 30 ரன்களை குறைவாக எடுத்துள்ளதாகவே பார்க்கப்படுகிறது. ஆனாலும் சிறப்பாக பந்து வீசினால் வெற்றி பெறும் அளவுக்கு நல்ல ஸ்கோரை எடுத்துள்ள அந்த அணி வெற்றிக்கு போராடி வருகிறது.

Advertisement