
தமிழக கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் இந்தியாவின் சிறந்த ஸ்பின்னராக செயல்பட்டு வருகிறார். கடந்த 2010ஆம் ஆண்டு அறிமுகமான அவர் 2011 உலகக் கோப்பை வென்ற இந்திய அணியில் இடம் பிடித்து சாம்பியன் பட்டம் வென்றார். அதே போல ஐபிஎல் தொடரிலும் சிஎஸ்கே அணி கோப்பையை வெல்ல உதவிய அவருடைய திறமையை பார்த்த தோனி சீனியரான ஹர்பஜன் சிங்கை கழற்றி விட்டு அஸ்வினுக்கு வாய்ப்பளித்தார்.
அந்த வாய்ப்பை கச்சிதமாக பயன்படுத்திய அஸ்வின் 3 வகையான கிரிக்கெட்டிலும் முதன்மை ஸ்பின்னராக உருவெடுத்து இந்தியாவின் வெற்றிகளில் பங்காற்றினார். குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் சொந்த மண்ணில் உலகின் அனைத்து பேட்ஸ்மேன்களையும் திணறடிக்கும் அவர் கடந்த 10 வருடங்களாக இந்தியா தோற்காமல் வெற்றி நடை போட முக்கிய காரணமாக திகழ்கிறார்.
மேலும் சமீபத்தில் ஹர்பஜன் சிங்கை முந்திய அவர் 500 விக்கெட்டுகளை எடுத்து டெஸ்ட் கிரிக்கெட்டில் அனில் கும்ப்ளேவுக்குப் பின் அதிக விக்கெட்டுகள் எடுத்த இந்திய வீரராக சாதனை படைத்தார். இருப்பினும் 37 வயதை கடந்து விட்ட அவருக்கு ஏற்கனவே இந்திய வெள்ளைப்பந்து அணியில் வாய்ப்பு கிடைப்பதில்லை. எனவே டெஸ்ட் கிரிக்கெட்டிலும் இன்னும் ஓரிரு வருடங்களில் அஸ்வின் ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இந்திய அணியில் ரவிச்சந்திரன் அஸ்வின் இடத்தை மற்றொரு தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் நிரப்பும் திறமையை கொண்டிருப்பதாக தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார். இது பற்றி கிரிக்பஸ் இணையத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “இந்தியா கண்டிப்பாக அடுத்த தலைமுறை ஆஃப் ஸ்பின்னரை எதிர்பார்க்கிறது. அதனாலேயே இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான கடந்த தொடரில் இந்தியா ஏ அணி 3 ஸ்பின்னர்களை முயற்சித்தது”
“அவர்கள் புல்கித் நரங், வாஷிங்டன் சுந்தர், சரண்ஸ் ஜெயின். அந்த மூவரில் தற்சமயத்தில் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு பின்னாடியே வாஷிங்டன் சுந்தரை இந்திய அணி நிர்வாகம் முயற்சிக்கிறது. சொல்லப்போனால் தமக்கு கிடைத்த குறைந்த வாய்ப்புகளில் வாஷிங்டன் சுந்தரும் ஓரளவு நன்றாக செயல்பட்டுள்ளார். எனவே அஸ்வினுக்குப் பின் மற்றவர்களை காட்டிலும் சுந்தர் முன்னுரிமையுடன் வாய்ப்பு பெறுவார் என்று நான் கருதுகிறேன்” எனக் கூறினார்.
இதையும் படிங்க: எதிரணிகளை பயமுறுத்திய நீங்க தான் ரியல் கப்பர்.. என்னோட சேந்து இதை செய்ங்க.. தவானுக்கு யுவி அழைப்பு
அவர் கூறுவது போல ஆஃப் ஸ்பின்னரான வாஷிங்டன் சுந்தரும் அஸ்வின் போலவே கணிசமாக பேட்டிங்கில் அசத்தும் திறமை கொண்டுள்ளார். மேலும் கடந்த 2017இல் இந்தியாவுக்காக அறிமுகமான அவர் இதுவரை வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் கிடைத்த வாய்ப்புகளில் ஓரளவு நன்றாகவே செயல்பட்டுள்ளார். எனவே வருங்காலங்களில் அஸ்வின் இடத்தில் வாஷிங்டன் சுந்தருக்கு வாய்ப்பு கிடைத்தால் அது தமிழக ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைக்கும்.