
வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 280 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அப்போட்டியில் பேட்டிங்கில் 144-6 என இந்தியா தடுமாறிய போது 113 ரன்கள் குவித்து கை கொடுத்த அஸ்வின் பந்து வீச்சில் 6 விக்கெட்டுகளை எடுத்தார். அந்த வகையில் வெற்றியில் மிகவும் முக்கிய பங்காற்றிய அஸ்வின் ஆட்டநாயகன் விருது வென்று இந்தியாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் பெருமை சேர்த்து வருகிறார்.
மேலும் 38 வயதில் ஒரே போட்டியில் சதம் மற்றும் 5 விக்கெட்டுகள் எடுத்த வீரராக அஸ்வின் உலக சாதனை படைத்தார். அத்துடன் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர்களின் பட்டியலில் வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் கோர்ட்னி வால்ஷை முந்தி அஸ்வின் 8வது இடத்தை பிடித்து சாதனை படைத்தார். ஆனால் இவ்வளவு சாதனைகளை செய்தும் வெளிநாட்டில் அசத்துவதில்லை என்று அஸ்வினை இந்திய அணி குறை கூறுவதாக தினேஷ் கார்த்திக் வேதனை தெரிவித்துள்ளார்.
இது பற்றி கிரிக்பஸ் இணையத்தில் தினேஷ் கார்த்திக் பேசியது பின்வருமாறு. “அவருடைய சில சாதனைகள் மிகவும் குதூகலகமாக இருக்கிறது. அவரை ஆல் ரவுண்டர்கள் மத்தியில் நாம் சேர்க்க வேண்டும். ஒரே போட்டியில் சதம் மற்றும் 5 விக்கெட்டுகள் எடுத்த வீரர்களின் பட்டியலில் அவர் இயன் போத்தமுக்கு பின்னால் இருக்கிறார்”
“அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர்களின் பட்டியலை பற்றி பேசும் போது அதில் அவர் எட்டாவது இடத்தில் உள்ளார். 400க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை சிறந்த ஸ்ட்ரைக் ரேட்டில் எடுத்த பவுலர்களின் பட்டியலில் அவருக்கு முன்பாக டேல் ஸ்டைன் மட்டுமே இருக்கிறார். இருப்பினும் சில நேரங்களில் அஸ்வின் இதை நன்றாக செய்யவில்லை அதை அவர் நன்றாக செய்திருக்கலாம் என்று நாம் நியாயமின்றி பேசுகிறோம்”
“இந்திய அணியில் ஒன்று அல்லது இரண்டு பேட்ஸ்மேன்கள் இல்லாத பட்சத்தில் அவர்களை நீக்கி விடலாம் என்ற நிலை இருந்தது. ஆனால் அனில் கும்ப்ளே இல்லாமல் உங்களால் விளையாட முடியாது. அதே போல சொந்த மண்ணில் தாம் இல்லாமல் இந்தியா ஒரு தொடரில் விளையாட முடியாத கவசத்தை அஸ்வின் கைப்பற்றி விட்டார் என்று நினைக்கிறேன்” என்று கூறினார்.
இதையும் படிங்க: பிசிசிஐ அறிவித்தும்.. அர்ப்பணிப்பின் அடையாளமாக தனது அணியை காப்பாற்ற களமிறங்கிய தமிழக வீரர் இந்திரஜித்
முன்னதாக ஐசிசி தரவரிசையில் நம்பர் ஒன் பவுலராக இருந்தும் அஸ்வினை 2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் இந்தியா தேர்ந்தெடுக்கவில்லை. அதுவே இந்தியாவின் தோல்விக்கு முக்கிய காரணமானதாக சச்சின் டெண்டுல்கர் போன்ற ஜாம்பவான்கள் விமர்சித்தனர். மொத்தத்தில் 101 போட்டிகளில் விளையாடி 500க்கும் மேற்பட்ட விக்கட்டுகள் எடுத்தும் வரும் நவம்பர் மாதம் ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெறும் டெஸ்ட் தொடரில் அஸ்வினுக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைக்குமா என்பது சந்தேகமாகவே உள்ளது.