பிசிசிஐ அறிவித்தும்.. அர்ப்பணிப்பின் அடையாளமாக தனது அணியை காப்பாற்ற களமிறங்கிய தமிழக வீரர் இந்திரஜித்

Baba Indrajith
- Advertisement -

இந்தியாவில் 2024 துலீப் கோப்பை செப்டம்பர் 5ஆம் தேதி முதல் நடைபெற்ற வந்தது. அதில் மயங் அகர்வால் தலைமையிலான இந்தியா ஏ அணி அதிக புள்ளிகளைப் பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது. முன்னதாக அத்தொடரில் தமிழ்நாட்டில் இருந்து சாய் சுதர்சன், பாபா இந்திரஜித், ஜெகதீசன், வாஷிங்டன் சுந்தர், சாய் கிசோர் ஆகிய 5 வீரர்கள் விளையாடினார்கள்.

அதில் சாய் சுதர்சன் மற்றும் பாபா இந்திரஜித் ஆகியோர் ருதுராஜ் தலைமையிலான இந்தியா சி அணியில் விளையாடினர். அந்த நிலையில் இந்தியா ஏ கிரிக்கெட் அணிக்கு எதிரான கடைசி ரவுண்ட் போட்டியின் 2வது இன்னிங்ஸில் சாய் சுதர்சன் அதிகபட்சமாக 111 ரன்கள் குவித்து முடிந்தளவுக்கு வெற்றிக்கு போராடி அவுட்டானார். அதே போல பாபா இந்திரஜித் முதல் இன்னிங்ஸில் 5 பவுண்டரிகளுடன் 34 ரன்கள் எடுத்திருந்த போது தசை பிடிப்பு காயத்தை சந்தித்து வெளியேறினார்.

- Advertisement -

அணியை காப்பாற்ற:

குறிப்பாக அந்த காயத்தால் நடக்க முடியாத நிலையை சந்தித்த அவரை அணி நிர்வாகம் பலகையில் படுக்க வைத்து தூக்கிச் சென்றனர். அதன் காரணமாக பாபா இந்திரஜித் மேற்கொண்டு விளையாட மாட்டார் என்று பிசிசிஐ தங்களுடைய டிவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸில் 216-8 என சரிந்த இந்தியா சி அணி தோல்வியில் பிடியில் சிக்கியது.

அப்போது அந்த அணிக்கு 134 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் கடைசி நாளில் 6.4 ஓவர்கள் மீதமிருந்தது. எனவே எப்படியாவது 6.4 ஓவர்களை கடந்து விட்டால் குறைந்தது போட்டியை டிரா செய்யலாம் என்ற சூழ்நிலை ஏற்பட்டது. அப்போது காயத்தை பொருட்படுத்தாமல் தம்முடைய அணியை தோல்வியில் இருந்து காப்பாற்றுவதற்காக பாபா இந்திரஜித் மிகவும் தைரியத்துடன் முதலுதவிகளை மட்டும் எடுத்துக் கொண்டு களமிறங்கினார்.

- Advertisement -

அர்ப்பணிப்பின் அடையாளம்:

ஆனால் காயத்துடன் களமிறங்கிய அவர் வழக்கம் போல பேட்டை பிடித்து நேராக நிற்க முடியாமல் தடுமாறினார். அதையும் தாண்டி நிமிர்ந்த வாக்கிலேயே பேட்டை பிடித்துக் கொண்டு பந்தை எதிர்கொண்ட அவர் இரண்டாவது பந்தில் 0 ரன்களில் திலக் வர்மாவிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். அதனால் தோல்வியை தவிர்க்க முடியாவிட்டாலும் தனது அணியை காப்பாற்ற தைரியத்துடன் காயத்தை தாண்டி இந்திரஜித் அர்பணிப்பின் அடையாளமாக களமிறங்கியது ரசிகர்களை நெகிழ்ச்சியடைய வைத்தது.

இதையும் படிங்க: துலீப் டிராபியில் சம்பவம் செய்த தமிழக வீரர் சாய் சுதர்ஷன்.. டெஸ்ட் அணியில் அறிமுகமாக வாய்ப்பு – விவரம் இதோ

சொல்லப்போனால் 2023 விஜய் ஹசாரே கோப்பையின் ஒரு போட்டியில் இதே போல பாபா இந்திரஜித் தாடையில் காயத்தை சந்தித்தார். அப்போது வாயில் கட்டுப் போட்டுக்கொண்டு வலியையும் தாண்டி அவர் தமிழ்நாடுக்காக விளையாடினார். அதே போல இப்போட்டியிலும் அவர் தன்னுடைய அணிக்காக அர்ப்பணிப்பை காட்டியது குறிப்பிடத்தக்கது.

Advertisement